திருக்குறள் - 420     அதிகாரம்: 
| Adhikaram: kelvi

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.

குறள் 420 - திருவள்ளுவர் - ThiruValluvar

"seviyir suvaiyunaraa vaayunarvin maakkal" Thirukkural 420 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


செவியால் நுகரும் இன்பத்தை யறியாத, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மாக்கள் செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு. இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் - செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாய் உணர்வினையுடைய மாந்தர், அவியினும் வாழினும் என் - சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன? (செவியால் நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையும் பொருட்சுவையும். அவற்றுள் சொற்சுவை குணம், அலங்காரம் என இருவகைத்து: பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். 'வாயுணர்வு' 'என்பது இடைப்பதங்கள் தொக்கு நின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை; அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு என விரியும். அவை கைப்பு. கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறு ஆம். செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும்' இன்மையின், இரண்டும் ஒக்கும் என்பதாம். வாயுணவின் என்று பாடம் ஓதுவாரும் உளர். இவை மூன்று பாட்டானும்கேளாதவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் -மேனிலை மாந்தர்போல் செவியால் நுகரப்படும் அறிவுப் பொருள்களின் சுவைகளை யுணராது, வாயால் நுகரப்படும் உணவுப் பொருள்களின் சுவைகளைமட்டும் உணரும் கீழ்நிலை மாந்தர்; அவியினும் வாழினும் என்- சாவதினால் உலகிற்கு என்ன இழப்பு? வாழ்வதனால் அதற்கென்ன பேறு? செவியால் நுகரப்படுஞ் சுவைகள் இசைச்சுவை, சொற்சுவை, பொருட்சுவை என மூன்றாம். அவற்றுள் இசைச்சுவை சொல்லல்லாது ஓசையாக மட்டுமுள்ள கருவியிசையும் மிடற்றிசையும் என இருவகைப்படும்; சொற்சுவை தொடையும் வண்ணமும் அணியும் என மூவகைப்படும்; பொருட்சுவை மெய்ப்பாடும் அணியும் என இருவகைப்படும். மெய்ப்பாடுகள் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி, சமந்தம் (சமநிலை) எனத் தொண்டாம் (ஒன்பதாம்). இவை யெல்லாம் தொண்சுவை யென்றும், சொல்லப் பெறும். அணிகள் உவமை, உருவகம் முதலியனவாக அறுபதிற்கு மேற்படுவன. இசைச்சுவை ஐவகைப்பட்ட அஃறிணையுயிர்களாலும் நுகரப் படுதலின், ஏனையிரண்டும்போல் அத்துணைச் சிறந்ததன்றாம். ஆயின், சொல்லொடு கூடின் மிகச்சிறந்ததாம். சொற்சுவையினும் பொருட்சுவையே சிறந்ததென்பது சொல்லாமலே விளங்கும். சொற்சுவைகளுள் தொடை ஐந்து; வண்ணம் எண்ணிறந்தன அணி வரையறைப்படாதன. வாய்ச்சுவை கைப்பு, கார்ப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என ஆறு. வாயுணவின் என்பது பாடவேறுபாடு.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


செவியில் சுவையை அறியாது வாய் உணர்வு விரும்பும் மானிட பதர்கள் அழிந்தால் என்ன? அல்லது வாழ்ந்தால் என்ன?.

Thirukkural in English - English Couplet:


His mouth can taste, but ear no taste of joy can give!
What matter if he die, or prosperous live?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?.

ThiruKural Transliteration:


seviyiR suvaiyuNaraa vaayuNarvin maakkaL
aviyinum vaazhinum en.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore