திருக்குறள் - 1079     அதிகாரம்: 
| Adhikaram: kayamai

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.

குறள் 1079 - திருவள்ளுவர் - ThiruValluvar

"uduppadhooum unpadhooum kaanin pirarmael" Thirukkural 1079 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர் உடுப்பதனையும் உண்பதனையும் காண்பாராயின், அவர்மாட்டு உள்ள குற்றங்களை ஆராயவல்லாராவர் கயவர். இஃது அழுக்காறுடையா ரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


உடுப்பதூஉம் உண்பதூஉம் கீழ் காணின் - பிறர் செல்வத்தால் பட்டும் துகிலும் உடுத்தலையும் பாலோடு அடிசில் உண்டலையும் கீழாயினான் காணுமாயின்; பிறர்மேல்வடுக்காண வற்றாகும் - அவற்றைப் பொறாது அவர்மாட்டு வடுவில்லையாகவும் உண்டாக்கவல்லனாம். (உடுப்பது உண்பது என்பன ஈண்டு அவ்வத்தொழில்மேல் நின்றன, அவற்றால், பூண்டல் ஊர்தல் முதலிய பிற தொழில்களும் கொள்ளப்படும். அவற்றைக் கண்ட துணையானே பொறாமை யெய்தலின் 'காணின்' என்றும், கேட்டார் இது கூடும் என்று இயையப் படைத்தல் அரிது ஆகலின் 'வற்றாகும்' என்றும் கூறினார். இதனால், பிறர் செல்வம் பொறாமை கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


உடுப்பதும் உண்பதும் கீழ் காணின் - பிறர்தம் செல்வத்தின் பயனாக ஓவியப்பூம் பட்டாடையணிதலையும் அறுசுவை நெய்யுண்டி யுண்டலையும் கீழ்மகன் காணுமாயின்; பிறர்மேல் வடுக்காண வற்று ஆகும் - அவற்றைப் பொறாது அவரிடத்துக் குற்றமில்லாதிருக்கவும் ஒரு குற்றத்தைப் படைத்துக்கூறவல்லவனாம். 'உடுப்பது' , 'உண்பது' தொழிற்பெயர்கள்.இவற்றைத் தலைமை பற்றிக் கூறியமையால், அணிதல், பூணுதல்,பருகுதல், ஊர்தல் முதலிய பிற செல்வவினைகளுங் கொள்ளப்படும். கண்டவளவிற் பொறாமை கொள்ளுதலால் 'காணின்' என்றும், பொருந்தப் பொய்த்தல் வல்லமை தோன்ற 'வற்றாகும்' என்றும், கூறினார்.வல்லது- வற்று(வல்+து), 'உடுப்பதூஉம்', 'உண்பதூஉம்' இன்னிசையளபெடைகள். 'கீழ்' ஆகுபெயர். இக்குறளால் கீழ்மகன் பிறர் செல்வங் கண்டு பொறாமைப் படுதல் கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உடைகள் அணிவதையும் உணவுகள் உண்ணுவதையும் கண்டு அவர்களிடம் குற்றம் காண முயல்வார்கள் கீழானவர்கள்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


பிறர் நன்றாக உடுப்பதையும் சுவையோடு உண்பதையும் கீழ்மகன் கண்டால், அவற்றைப் பொறாமல், அவர் மேல் வடு உண்டாக்கவும் முயல்வான்

Thirukkural in English - English Couplet:


If neighbours clothed and fed he see, the base
Is mighty man some hidden fault to trace?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food and clothing.

ThiruKural Transliteration:


uduppadhooum uNpadhooum kaaNin piRarmael
vadukkaaNa vatraakum keezh.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore