திருக்குறள் - 922     அதிகாரம்: 
| Adhikaram: kallunnaamai

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.

குறள் 922 - திருவள்ளுவர் - ThiruValluvar

"unnarka kallai unil unka saandroaraan" Thirukkural 922 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கள்ளினை உண்ணாதொழிக; உண்ணவேண்டின் சான்றோரால் மதிக்கப்படுதலை வேண்டாதார் உண்க.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கள்ளை உண்ணற்க - அறிவுடையராயினார் அஃதிலராதற்கு ஏதுவாய கள்ளினை உண்ணாதொழிக; உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க - அன்றியே உண்ணல் வேண்டுவார் உளராயின், நல்லோரால் எண்ணப்படுதலை வேண்டாதார் உண்க. (பெறுதற்கரிய அறிவைப் பெற்று வைத்தும் கள்ளான் அழித்துக் கொள்வாரை, இயல்பாகவே அஃது இல்லாத விலங்குகளுடனும் எண்ணாராகலின் 'சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க' என்றார்.)'.

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கள்ளை உண்ணற்க - உயிரையும் மதிப்பையுங் காத்துக் கொள்ள விரும்புபவர் கள்ளை உண்ணாதிருக்க; உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க - அங்ஙனமன்றி உண்ணவே விரும்பின், அறிவுடையோரால் மக்களாகக் கருதப்படுதலை விரும்பாதவர் உண்க. ஆறறிவிற்குரிய மக்கட்பிறப்பையும் அதனாற் பெறக்கூடிய கல்வியறிவையும் பெற்றும், கட்குடியால் அவற்றை யிழந்துவிடுதலால், இயற்கையாகவே அவையில்லாத அஃறிணையினுங் கீழாகிப் பொதுவான உயிரினத்திலும் சேர்க்கப்படார் என்னுங் கருத்துத் தோன்ற , 'எண்ணப்பட வேண்டாதார்' என்றார்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


போதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கள்ளை அருந்த வேண்டாம். அருந்தவேண்டுமானால் அருந்து எடுத்துக் காட்டாக இருப்பவன் என்று நினைக்க வேண்டாம் என்றால்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அறிவை மயக்கும் கள்ளை அறிவுடையோர் உண்ணாது விடுவாராக; நல்லவரால் எண்ணப்படுதலை வேண்டாதவர் மட்டுமே விரும்பினால் கள்ளை உண்பாராக!

Thirukkural in English - English Couplet:


Drink not inebriating draught. Let him count well the cost.
Who drinks, by drinking, all good men's esteem is lost.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great.

ThiruKural Transliteration:


uNNaRka kaLLai uNil-uNka saandroaraan
eNNap patavaeNtaa thaar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore