திருக்குறள் - 291     அதிகாரம்: 
| Adhikaram: vaaimai

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

குறள் 291 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vaaimai enappaduvadhu yaadhenin yaadhondrum" Thirukkural 291 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொய் சொல்லாத மெய்யென்று சொல்லப்படுவது யாதென்று வினவின், பிறர்க்கு யாதொன்றானும் தீமை பயவாத சொற்களைச் சொல்லுதல், வாய்மை யாது என்றார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது மெய்யினது தன்மை. பெரும்பான்மையும் காமமும் பொருளும் பற்றி நிகழ்வதாய பொய்ம்மையை விலக்கலின் , இது 'கூடா ஒழுக்கம்' , 'கள்ளாமை' களின் பின் வைக்கப்பட்டது.) வாய்மை எனப்படுவது யாது எனின் - மெய்ம்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்று வினவின், தீமை யாதொன்றும் இலாத சொலல் - அது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல். ('தீமை யாதொன்றும் இலாத' என இயையும். 'எனப்படுவது' என்பது 'ஊர் எனப்படுவது உறையூர்' என்றாற் போல நின்றது. இதனான் நிகழ்ந்தது கூறல் என்பது நீக்கப்பட்டது. அது தானும், தீங்கு பயவாதாயின் மெய்ம்மையாம் : பயப்பின் பொய்ம்மையாம் என்பது கருத்து.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


வாய்மை எனப்படுவது யாது எனின்-மெய்ம்மையென்று சொல்லப்படுவது யாதென்று வினவின் ; தீமை யாது ஒன்றும் இலாத சொலல்-அது எவ்வகை யுயிர்க்கும் எவ்வகைத் தீங்கும் எட்டுணையும் விளைக்காத சொற்களைச் சொல்லுதலாம். வாய்மையின் இலக்கணம் பிறர்க்கும் பிற வுயிர்கட்கும் தீங்கு பயவாமையே யன்றி நிகழ்ந்தது கூறலன்று என்பது கருத்து. இது திருக்குறளை ஒப்புயர்வற்ற உலக அற நூலாக்கும் இயல்வரையறையாம். உண்மை, வாய்மை, மெய்ம்மை என்னும் ஒரு பொருட்சொல் மூன்றும், முறையே, உள்ளமும் வாயும் உடம்புமாகிய முக்கரணத்தொடு தொடர்புடையனவாகச் சொல்லப்பெறும். இனி, உள்ளது உண்மை, வாய்ப்பது வாய்மை, மெய் (substance) போன்றது மெய்ம்மை எனினுமாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


வாய்மை என்று சொல்லப்படுவது யாது என்றால், அது மற்ற உயிர்களுக்குத் தீங்கினைச் சிறிதும் உண்டாக்காத சொற்களைச் சொல்லுதலாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வாய்மை என்பது எது என்றால் எந்த ஒரு வகையிலும் தவறு இல்லாமல் சொல்வது.

Thirukkural in English - English Couplet:


You ask, in lips of men what 'truth' may be;
'Tis speech from every taint of evil free.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).

ThiruKural Transliteration:


vaaimai enappaduvadhu yaadhenin yaadhondrum
theemai ilaadha solal,

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore