சிசேரியனில் இவ்வளவு சீக்ரட் உள்ளதா?

Updated On

பிரசவம், ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பு; ஒரு புதிய உயிரைப் பூமிக்கு அழைத்துவரும் 10 மாதத் தவத்தின் பரபரப்பு. எல்லா பெண்களுக்கும் `சுகப் பிரசவம்’ சாத்தியமாவது இல்லை. பல்வேறு காரணங்களால் சில பிரசவங்களில் சிசேரியன் அவசியமாகிறது. உலகம் முழுதும் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சிசேரியன்  அறுவைசிகிச்சை முறை இருக்கிறது. ரோமானியப் பேரரசர் சீசர் அப்படியான அறுவைசிகிச்சையில் பிறந்தவர்தான் என்கிறது வரலாறு.

நெருக்கிய உறவினருக்கு சமீபத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. நார்மல் டெலிவரி ஆகிவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், எப்படி சிசேரியன் என்று கேட்டேன், “டாக்டர் குறிப்பிட்ட நாளில் நான் மருத்துவமனையில் சேர்ந்தேன். அங்கே, எனக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி வந்து அலறினார். அந்த பயத்தில், எனக்கு சிசேரியன் செய்திடுங்க பிளீஸ் என்று நான் அலற ஆரம்பித்துவிட்டேன். கடைசியில், எனக்கும் சிசேரியன்” என்றார்.

இன்று பல பெண்கள், `சிசேரியனே வலி இல்லாத பிரசவத்துக்குச் சிறந்த வழி’ என, சுகப் பிரசவ வாய்ப்பு இருந்தும் தாங்களாக முன்வந்து சிசேரியன் செய்துகொள்கின்றனர். சிலர், ஜோதிடத்தை நம்பி சிசேரியன் செய்கின்றனர். பொதுவாக, சுகப் பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டு தாய் அல்லது சேயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையிலேயே சிசேரியன் பரிந்துரைக்கப்படும்.

சிசேரியன் ஏன் பரிந்துரைக்கப்படுகிறது?

முன்பே தீர்மானிக்கப்பட்ட சிசேரியன், சுகப் பிரசவம் சாத்தியப்படாத நேரத்தில் செய்யப்படும் அவசர சிசேரியன் என இரண்டு வகைப்படும்.

கருவுற்று 38-வது வாரத்தில் பனிக்குடம் உடைந்து, பெண்ணின் பிறப்புறுப்பு வழியாகக் குழந்தையை வெளியே எடுப்பது சுகப் பிரசவம். இதற்கு, பெல்விஸ், பேசேஜ், பவர், பாசஞ்சர் எனும் நான்கு ‘P’ முக்கியம்.

‘பெல்விஸ்’ என்பது இடுப்புக் குருத்தெலும்புப் பகுதி. `பாசேஜ்’ என்பது கர்ப்பப்பையில் இருந்து செர்விக்ஸ், வெஜைனா வழியாகக் குழந்தை பயணிக்கும் பாதை. `பவர்’ என்பது பிரசவத்தின்போது கர்ப்பப்பையில் இயற்கையாக உருவாகும் அழுத்தம். குழந்தையை `பாசஞ்சர்’ (பயணி) என்கிறோம்.

உயரம் குறைந்த பெண்களின் இடுப்பு எலும்பின் சுற்றளவு சிறிதாக இருக்கும். இது, செபலோபெல்விக் டிஸ்புரோபோர்ஷன் (Cephalopelvic disproportion (CPD) எனப்படும்.

உடலுறவின்போது விந்து கர்ப்பப்பைக்குள் செல்ல அனுமதிக்கும் பாதை,  செர்விக்ஸ். விரிந்து சுருங்கும் தன்மை உடைய இதன் சராசரி குறுக்கு அளவு இரண்டு முதல் மூன்று செ.மீ. கரு உருவான உடன் இது இறுக மூடிக்கொள்ளும். பிறகு, பிரசவத்தின்போது குழந்தை இதன் மூலமாகவே வெளியே வரும். முதல் சுகப்பிரசவத்துக்குப் பிறகு இதன் சுருங்கி விரியும் தன்மை சற்றுக் குறைய வாய்ப்பு உள்ளது.

நான்கு கிலோவுக்கு அதிகமான  எடை உள்ள குழந்தையால், வெளியேற முடிவது இல்லை. குழந்தையின் மிருதுவான மண்டைஓடு வெளியே வரும் முயற்சியில் ஒன்றன் மேல் ஒன்று நகர்ந்து அழுத்தப்பட்டு தலையின் அளவு குறையும். இதனால் 37 வாரங்கள் முடிவதற்குள் குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது . இதைத் தவிர்க்க, சிசேரியன் செய்யப்படுகிறது.

பனிக்குடம் உடைந்து, குழந்தை வெளியே வர முற்சிக்கும்போது, தாயின் சிறுநீர்ப்பையை குழந்தையின் தலை அழுத்த நேரிடும். திரும்பத் திரும்ப அழுத்தும்போது, சிறுநீர்ப்பை அழுகிவிட வாய்ப்பு உள்ளது. இது, `பிஸ்டுலா’ எனப்படுகிறது. இதைத் தவிர்க்க சிசேரியன் பயன்படும்.

கர்ப்பப்பையில் உள்ள நீரில் மிதக்கும் சிசுவானது கை, கால்களைக் குறுக்கிக்கொண்டு மடங்கி இருக்கும். இந்த நிலையில் இல்லாமல் குழந்தையின் எலும்பு, உடல் தசை வளர்ச்சி அதிகமாக இருந்தால் குழந்தை செர்விக்ஸ் வழியாக வெளியேறுவது கடினம்.

பிரீச் பொசிஷன் (Breech position)

பிரசவ வலி வந்ததும் குழந்தை, தானாகத் தலைகீழாகத் திரும்ப வேண்டும். அப்படித் திரும்பாமல் போனால்,  `பிரீச் பொசிஷன்’ எனப்படும். இந்த நிலையில், முதலில் குழந்தையின் தலை வெளிவருவதற்குப் பதிலாக, கால் மற்றும் புட்டம் வெளியே வரும். இந்த பொசிஷனில் பல குழந்தைகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன. ஆனால், தலை கடைசியாக வெளிவருவதால், மூளைக் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆகவே, இந்த நிலை இருந்தால், சிசேரியன் பரிந்துரைக்கப்படும்.

ட்ரான்ஸ்வெர்ஸ் லெய்டு (Transverse laid)

37 வாரங்கள் முடிந்தும் குழந்தை மேலிருந்து தலைகீழாகத் திரும்புகையில், இடையே அகப்பட்டு திரும்ப முடியாமல் மாட்டிக் கொள்ளும். இந்த நிலையிலும் சிசேரியன் செய்யப்படும்.

பிளசன்டா ப்ரேவியா (Placenta praevia)

கரு உருவானதும் பிளசன்ட்டா எனப்படும் நஞ்சுக்கொடி கர்ப்பப்பையின் மேல் அல்லது கீழ் சுவரில் உருவாகும். இது வட்டு வடிவில் கருஞ்சிவப்பாக  இருக்கும். இது சராசரியாக 23 செ.மீ நீளமும்,  மூன்று செ.மீ உயரமும் இருக்கும். இது, தாயின் உடலுடன் குழந்தைக்கு தொப்புள்கொடி மூலம் தொடர்பு ஏற்படுத்தும். தாயின் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை   குழந்தைக்குக் கொடுத்தல், கழிவுகளை வெளியேற்றுதல் ஆகிய முக்கியப் பணிகளைச் செய்யும். ஒன்பது மாதங்களாகக் கரு முழு வளர்ச்சி பெற உறுதுணையாக இருக்கும். இது, கர்ப்பப்பையின் மேல் சுவரில் உருவாகி  இருந்தால் பிரச்னை இல்லை. கீழ் சுவரில் (லோயர் யூட்ரின் செக்மென்ட்) உருவானால், அதுவே குழந்தை வெளியேறத் தடையாக இருக்கும். பிரசவத்தின் போது பிளசன்டா இவ்வாறு பாதையை அடைத்துக்கொண்டால், தாய்க்கு அதிகமான ரத்தப்போக்கு உண்டாகும். ஆனால், வலி இருக்காது. இந்த நிலையே பிளசன்டா ப்ரேவியா எனப்படும். இந்த நிலையில் சிசேரியன்தான் குழந்தையைக் காப்பாற்ற ஒரே வழி. இந்தக் கோளாறு நிறைய முறை கருக்கலைப்பு செய்பவர்கள், ஏற்கெனவே சிசேரியன் ஆனவர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது.

ஜெனிடல் ஹெர்பீஸ்  (Genital Herpies)

பிறப்புறுப்புப் பாதையில் வரும் தொற்றுதான், ஜெனிடல் ஹெர்பீஸ். குறிப்பாக, ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பாலியல் நோய்கள் தாக்கப்பட்ட தாய்க்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம். சுகப்பிரசவத்தின்போது குழந்தைக்கும் இந்தத் தொற்று பரவும். எனவே, இவர்களுக்கும் சிசேரியன் அவசியம்.

ஃபீட்டல் டிஸ்ட்ரெஸ் (Fetal distress)

இது தொப்புள்கொடி, குழந்தையின் கழுத்தில் மாலையாகச் சுற்றிக்கொண்ட நிலை. சில குழந்தைகளின் தொப்புள்கொடி மிக நீளமாக இருக்கும். கர்ப்பப்பையில் சிசு மிதக்கும்போது, கழுத்தில் சுற்றிக்கொள்ளும். ஒரு சுற்று சுற்றி இருந்தால், சுகப் பிரசவம் செய்ய முடியும்.  ஐந்தாறு சுற்று சுற்றி இருந்தால், குழந்தையின் சுவாசம் தடைப்படும். இதயத் துடிப்பு சிக்கலாகும்.

மல்ட்டிபிள் பர்த் (Multiple birth)

இரட்டைக்குழந்தைகளில்,  முதலில் வெளியே வர வேண்டிய குழந்தையின் தலை வெளியே வராமல் புட்டம் வந்தால், கண்டிப்பாக இரண்டு குழந்தைகளையும் சிசேரியன் மூலமாகவே வெளியே எடுக்க வேண்டும். பொதுவாகவே, இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் தாய்க்கு பிளசன்ட்டா ப்ரேவியா இருக்க வாய்ப்புகள் அதிகம். ஓட்டிப் பிறந்த இரட்டைக்குழந்தைகளை வெளியே எடுக்க சிசேரியன்தான் ஒரே வழி.

சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் சாத்தியமா?

பலருக்கும் உள்ள பொதுவான சந்தேகம், முதல் சிசேரியன் ஆன பிறகு, அடுத்து சுகப் பிரசவம் சாத்தியமா என்பதுதான். சிலருக்குச் செங்குத்தாகத் தோலைக் கிழித்து சிசேரியன் செய்தால், அடுத்து சுகப் பிரசவம் நடக்க வாய்ப்பு இல்லை என முடிவுக்கு வந்துவிடுகின்றனர். சிசேரியனின்போது தோல் எவ்வாறு கிழிக்கப்படுகிறது என்பது முக்கியம் அல்ல. உள்ளே இருக்கும் கர்ப்பப்பை எவ்வாறு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்பதுதான் முக்கியம். முதல் பிரசவத்தில் கர்ப்பப்பை குறுக்கே வெட்டி தையல் போடப்பட்டிருந்தால், அடுத்த சுகப் பிரசவம் செய்வது சுலபம். செங்குத்தாக வெட்டப்பட்டுத் தையல் போட்டிருந்தால், அடுத்த பிரசவத்தில், தையல் பிரிய வாய்ப்பு உள்ளது. சிசேரியனில் கர்ப்பப்பையை எவ்வாறு கிழிப்பது என்பது, குழந்தையின் தலை இருக்கும் திசை மற்றும் நிலையை ஸ்கேனில் பரிசோதித்த பிறகுதான் சொல்ல முடியும். எனவே, சிசேரியன் என்றாலே தவறான விஷயம் என்று எண்ண வேண்டாம். யாருக்கு சிசேரியன் தேவை என்று மருத்துவர் முடிவு செய்வார். மருத்துவர் வழங்கிய ஆலோசனையைப் பின்பற்றி, டயட், உடற்பயிற்சி பின்பற்றினால், சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பு அதிகரிக்கும். அதையும் மீறி, குழந்தையின் பொசிஷன் மாறும்போது, சிசேரியன் செய்யத் தயங்க வேண்டாம். இதன் மூலம், தாய் – சேய் இருவரது உயிரையும் பாதுகாக்க முடியும்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore