கோடையில் உடலில் நீர் வற்றி, உறுப்புகளுக்கு தேவையான நீர் ஆதாரங்கள் பாதிக்கப் படுவதால், அடிக்கடி நாவறட்சி, தாகம், சிறுநீர் போகும்போது எரிச்சல் போன்றவை ஏற்படும். சிறுநீர் தொடர்பான பாதிப்புகளுக்கு இங்கே சில மருத்துவ முறைகள்:
நீர் எரிச்சல் தீர:
காக்கிரட்டான் வேரை அரைத்துப் பாலில் காய்ச்சி அருந்தலாம். கல்யாண முருங்கை இலைச் சாற்றை மோரில் கலந்து இருவேளைகள் அருந்த, பயன் கிடைக்கும். வல்லாரைக்கீரை, கிழாநெல்லி இவற்றை அரைத்து, காலை வேளையில் தயிரில் கலந்து அருந்தலாம்.
சிறுநீர்த்தடை விலக:
சங்கு புஷ்ப இலை, வேர், பட்டை இவற்றை சாறு பிழிந்து 20 மிலி வெள்ளாட்டுப் பாலுடன் அருந்தலாம். நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு நீங்க: நன்னாரிவேர் 5 கிராம் அரைத்து, பசுபாலில் கலந்து அருந்தலாம். உடல் சூட்டை நன்றாகத் தணிக்கும் தன்மையுள்ளது. பனங்கற்கண்டை பொடித்து பாலில் கலந்து அருந்தலாம். புளியங்கொட்டைத் தோலை நன்கு காயவைத்து, பொடியாக்கி, அதைப் பசும்பாலில் கலந்து அருந்தலாம். அன்னாசிப் பழச் சாறும் நீர்கடுப்பிற்கு நல்லது.
சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் ரணம் நீங்க:
சந்தனக்கட்டையை பால்விட்டு அரைத்து அதை அருந்தினால் நிவாரணம் கிடைக்கும். கடுமையான வெயிலில் குடை, தொப்பி இல்லாமல் வெயிலில் செல்வதை தவிர்க்கவேண்டும்.
– எஸ். வளர்மதி