அகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி

Updated On

அகத்திக் கீரையை யாரும் எளிதில் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. ஏனென்றால் அதில் கசப்புத் தன்மை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. சுவை கசப்பாக இருந்தாலும் இதன் மருத்துவ நன்மைகளை பார்த்தால், இதனை பிடிக்காதவர்களுக்கு கூட வியப்பாகத்தான் இருக்கும். அகத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால் இந்த கீரை அகத்தி கீரை என அழைக்கப்படுகிறது. அகத்தி கீரையின் முக்கிய மருத்துவ குணங்கள் ஏராளம். சித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது. அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக்கீரையில் மாவுச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின்(உயிர்ச்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன.

அகத்தி கீரையின் பயன்கள் :

அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்திற்கு ஒரு முறையாவது அகத்திக் கீரை சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும்.
அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.
உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்தி கீரையீன் இலையை தேங்காய் எண்ணையுடன் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.
குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால் இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்து தலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும்.
அகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால் அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
தொண்டை புண், தொண்டை வலி ஆகியவை உள்ளவர்கள் அகத்தி கீரையை பச்சையாக மென்று சாப்பிட்டால் விரைவில் தொண்டை பிரச்சனை குணமாகும். அகத்தி கீரை வயிற்றில் உள்ள புழுவை கொல்லும். மேலும் மலச்சிக்கலை தீர்க்கும்.

குறிப்பு :

இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் ரத்தம் கெட்டுப்போகவும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தவும். வாயு கோளாறு உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. மருந்து சாப்பிடுபவர்கள் இந்த கீரையை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மருந்தின் வீரியத்தை அகத்திகீரை குறைத்து விடும்.



திருத்தமிழ்
© 2025 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore