அம்மாவாக இருப்பது அனைத்து பெண்களுக்குமே மகிழ்ச்சிதான். அதிலும் புதிதாக அம்மாவானவர்கள் முழுநேரமும் தங்கள் குழந்தை அருகிலேயே அமர்ந்து அவர்களை கவனித்து கொள்வார்கள். உலகிலேயே அழகான ஒன்று மழலை மொழியை கேட்பது, அதேபோல் உலகிலியே கடினமான ஒன்று குழந்தைகள் பேசுவதை புரிந்து கொள்வது. ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகள் பேச தொடங்கியிருக்க மாட்டார்கள். அவர்களின் தேவை என்னெவென்பதைபுரிந்து கொள்வது மிகவும் கடினம்.
குழந்தைகள் திடீரென அழுவது போல உங்களுக்கு தோன்றலாம், ஆனால் அவர்கள் அழ தொடங்குவதற்கு முன் சில சைகைகளை செய்திருப்பார்கள். அதை நீங்கள் முன்னரே அறிந்திருந்தால் அவர்களின் அழுகையை தடுத்திருக்கலாம். இதுபோல ஒவ்வொரு செயலுக்கு முன்னும் குழந்தைகள் சில சைகைகளை செய்வார்கள். அதன் அர்த்தத்தை புரிந்து கொள்வதில்தான் நீங்கள் எப்படி பட்ட பெற்றோர் என்பது உங்களுக்கே புரியும். இங்கே குழந்தையின் ஒவ்வொரு சைகைக்கும் என்ன அர்த்தம் என்பதை பார்ப்போம்.
கால்களால் உதைத்தல்
குழந்தைகள் கால்களால் உதைப்பது அவர்களின் மகிழ்ச்சியின் அறிகுறியாகும். நீங்கள் கவனித்து பார்த்தால் உங்கள் குழந்தை தண்ணீரில் விளையாடும்போதும், நீங்கள் அவர்களுடன் விளையாடும்போதும் கால்களை உதைப்பதை தெரியும். ஏனெனில் அந்த சமயங்களில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குழந்தையை சந்தோஷப்படுத்த விரும்பினால் அவர்களை உங்கள் மடியில் படுக்க வைத்துக்கொண்டு பாடவோ அல்லது விளையாடவோ செய்யுங்கள். இது அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.
முதுகை வளைத்தல்
குழந்தைகள் முதுகை வளைப்பது அந்த சூழல் பிடிக்காதது அல்ல வலியின் அறிகுறியாகும். பெரும்பாலும் குழந்தைகள் மார்பு பகுதியில் வலி இருந்தால் முதுகை அதிகம் வளைப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் மென்மையாக அவர்களின் மார்பு பகுதியில் மசாஜ் செய்து விடுங்கள். ஒருவேளை நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும்போது முதுகை வளைத்தாள் அது போதுமென்பதற்கான அறிகுறியாகும். அதற்கு மேல் அவர்களை பால் குடிக்க கட்டாயப்படுத்தாதீர்கள். இல்லையெனில் அழ தொடங்கிவிடுவார்கள்.
தலையை முட்டுதல்
குழந்தைகள் தரையை நோக்கியோ அல்லது எதிரே உள்ள பொருள் மீதோ தலையால் முட்டினால் அது எரிச்சல் அல்லது வலியால் அவதிப்படுவதின் வெளிப்பாடாகும். அந்த சூழ்நிலையில் குழந்தையின் தலையுடைய முன்புறத்தையும், பின்புறத்தையும் மென்மையாக தடவி கொடுப்பது அவர்களுக்கு ஆறுதலாய் அமையும். ஒருவேளை அதன்பிறகும் உங்கள் குழந்தை தொடர்ந்து தலையை முட்டிக்கொண்டிருந்தால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுகி சோதனை செய்துகொள்ளுங்கள், ஏனெனில் உங்கள் தலை போல உங்கள் குழந்தையின் தலை வலுவானது அல்ல.
காதை பிடித்தல்
உங்கள் குழந்தை காதுகளை பிடித்து கொண்டு சிரித்தால் அது அவர்கள் அவர்களுடைய காதுகளை கண்டுபிடித்து விட்டதன் அறிகுறியாகும். ஏனெனில் நீங்கள் கவனித்து பார்த்தால் உங்கள் குழந்தையை யார் தூக்கினாலும் அவர்கள் காதுகளை பிடித்து விளையாடுவார்கள். அதேபோன்ற அமைப்பு தன்னிடமும் இருக்கும்போது அது அவர்களுக்கு மகிழ்ச்சியாகத்தானே இருக்கும். ஒருவேளைஉங்கள் குழந்தை காதுகளை பிடித்துக்கொண்டு அழுதால் அது காதில் வலி அல்லது தொற்றுநோய் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாகும். அதேபோல காதுகளை பிடித்து இழுத்தாள் அது பல் முளைப்பதற்கான அறிகுறியாகும்.
முட்டியை மடக்குதல்
குழந்தைகள் முட்டியை மடக்குவது எப்பொழுதும் செய்யும் ஒன்றாக இருக்கலாம், அதே சமயம் சில நேரங்களில் பசி அல்லது கோபத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். கோபமாக இருக்கும்போதும், பசியுடன் இருக்கும்போதும் குழந்தைகள் கையை கையை மடக்கி இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களுடன் விளையாடி பிஞ்சு கைகளால் வாங்கிக்கட்டி கொள்ளாதீர்கள். குழந்தை முட்டியை மடக்கி இருக்கும்போது பாலூட்டி பாருங்கள், குடிக்கவில்லையெனில் அவர்களின் மனநிலையை மாற்றும் வகையில் அவர்களுடன் விளையாடுங்கள். குழந்தை பிறந்து மூன்று மாதமாகியும் கைகளை மூடும் பழக்கமிருந்தால் மருத்துவரிடம் சென்று சோதனை செய்துபார்த்து கொள்ளுங்கள்
முழங்கால்களை சுருட்டுதல்
குழந்தைகள் முழங்கால்களை சுருட்ட்டினால் அது செரிமானக்கோளாறு என்று அர்த்தம். உங்கள் குழந்தை முழங்கால்களை சுருட்டினால் அது வாயுக்கோளாறோ அல்லது மலச்சிக்கலாகவோ இருக்கலாம். எனவே உங்கள் குழந்தை வாயுக்கோளாறால் கால்களை மடக்கினால் அவர்களுக்கு ஏப்பம் விட உதவி செய்யுங்கள். உங்கள் குழந்தை உங்களுக்கு முக்கியமெனில் வாயுவை ஏற்படுத்தக்கூடிய உணவுகளை உண்ணாதீர்கள். ஒருவேளை உங்கள் குழந்தை மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவரிடம் தூக்கி செல்லுங்கள், போதுமான அளவு நீர் கொடுங்கள்.
கை அதிர்வு
இது குழந்தை அசாதாரண சூழ்நிலையில் எச்சரிக்கையாய் இருப்பதற்கான அறிகுறி ஆகும். பொதுவாக பிறந்த குழந்தைகள் திடீரென அதிக சத்தத்தை கேட்கும்போதோ அல்லது அதிக வெளிச்சத்தை உணரும்போதோ கைகளை வேகமாக அசைப்பார்கள். அதேபோல திடீரென தரையில் படுக்கவைக்கும் போது கையை வேகமாக அசைப்பார்கள், ஏனெனில் அந்த தருணத்தில் குழந்தைகள் பாதுகாப்பின்மையாய் உணருவார்கள். இது நீங்கள் பயப்பட கூடிய அளவுக்கு பெரிய பிரச்சினை அல்ல. குழந்தைகள் நான்கு மாதம் கடந்தவுடன் இந்த பழக்கம் தானாக நின்றுவிடும். உங்கள் குழந்தையை தூங்க வைக்கும்போது அருகிலியே நில்லுங்கள், நீங்கள் அவர்களை சுற்றியே இருப்பது அவர்களை பாதுகாப்பாய் உணரச்செய்யும்.