கார்த்திகை தீபம் ஏற்ற நல்ல நேரம் 2023

Updated On

கார்த்திகை தீபம் ஏற்றும் முறை மற்றும் நல்ல நேரம்

கார்த்திகை தீபம் | Karthigai Deepam 2023

திருக்கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

கார்த்திகை தீபம் ஏற்ற நல்ல நேரம்

இந்த ஆண்டு கார்த்திகை தீபம்(karthigai deepam date 2023) நவம்பர் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் நவம்பர 26ஆம் தேதி பிற்பகல் 2.41 மணிக்கு தொடங்கி நவம்பர்  27ஆம் தேதி பிற்பகல் 2.26 மணிக்கு முடிவடைகிறது.

திருவண்ணாமலையில் மலை மீது மகா தீபம் ஏற்றிய உடன் அனைவரின் இல்லங்களிலும் தீபங்களை ஏற்றலாம். இன்று மாலை 6 மணிக்கு மேல் நமது வீட்டில் தீபம் ஏற்ற நல்ல நேரமாகும்.

விளக்குகளின் எண்ணிக்கை

வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும் என்ற சந்தேகம் அனைவருக்குமே உண்டு. நமது வீட்டில் 27 விளக்குகள் ஏற்றுவது ஐதீகம். 27 விளக்குகள் ஏற்றினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

27 விளக்குகள் 27 நட்சத்திரங்களை குறிக்கும்.

கோலமிட்ட வாசல் – 5 விளக்குகள்

நிலைபடியில் – 2 விளக்குகள்

வாசல் நடைகளில் – 2 விளக்குகள்

திண்ணைகளில் – 4 விளக்குகள்

முற்றத்தில் – 4 விளக்குகள்

வீட்டின் பின்புறம் – 4 விளக்குகள்

மாடக்குழிகளில் – 2 விளக்குகள்

பூஜையறையில் – 2 விளக்குகள் ஏற்றி

வைத்து வணங்கினால் சர்வமங்கலம் உண்டாகும்.

தெய்வங்களுக்கு ஏற்ற வேண்டிய தீபங்களின் எண்ணிக்கை

விநாயகப்பெருமானுக்கு – 7 தீபங்கள்

முருகருக்கு – 6 தீபங்கள்

பெருமாளிற்கு – 5 தீபங்கள்

நாக அம்மனுக்கு – 4 தீபங்கள்

சிவனிற்கு – 3 /9 தீபங்கள்

அம்மனுக்கு – 2 தீபங்கள்

மஹா லஷ்மிக்கு  – 8 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.

தீபம் ஏற்றும் முறை

  • தீபத் திருநாளில் வடக்குத் திசை நோக்கி தீபம் ஏற்றினால் திருமணத்தடை அகலும். கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது என்று கூறுவார்கள். மேலும், தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்களாவது ஏற்றவேண்டும். வீட்டு வாசலில் குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது.
  • சுத்தமான பசு நெய், நல்லெண்ணெய் இவைகளை கொண்டு நம் வீட்டில் விளக்கினை ஏற்றலாம். இதனால் நமக்கு கிடைக்கும் பலன் நன்மையாக தான் இருக்கும். ஆனால் நெய்யையும் நல்லெண்ணையையும் கலந்து விளக்கினை ஏற்றக்கூடாது.
  • விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றி பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
  • பருத்தியால் ஆன பஞ்சுத்திரி அல்லது தாமரை தண்டு திரி கொண்டு வீட்டிலும் கோவில்களிலும் விளக்கு ஏற்றலாம். தாமரை தண்டினாலான திரியில் ஏற்றும் விளக்கிற்கு அதிக பலன் உண்டு.
  • விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.
  • அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.
  • பூஜை அறையில் தீபத்தை ஏற்றி விட்டு, பின்பு அந்த தீபத்திலிருந்து மற்றொரு தீபத்தை ஏற்றிக்கொண்டு அதன்மூலம் வாசலில் உள்ள தீபத்தை ஏற்ற வேண்டும்.
  • தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக் கூடாது.
  • தீப சரஸ்வதி என்று மூன்று முறையும், தீப லட்சுமி என்று மூன்று முறையும் ,தீப துர்கா என்று மூன்று முறையும்,குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் என தீபத்தை பன்னிரண்டு முறை வணங்க வேண் டும்.
  • தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore