ஆடி வெள்ளி தரும் கோடி நன்மைகள் | Aadi Velli 2023

Updated On

Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு

இன்று ஆடி இரண்டாம் வெள்ளி மிகவும் சிறப்பான நாள் ஆகும்.  ஆடிக் கிருத்திகை, ஆடித்தபசு, ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு என ஆடியில் கொண்டாடுவதற்கும் வழிபடுவதற்கும் பலன் பெறுவதற்கும் ஏராளமான விசேஷங்களும் வைபவங்களும் இருக்கின்றன. இவற்றில் மிக மிக முக்கியமானது ஆடி வெள்ளி.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் இறைவியை நாடிச்  சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் மாதமாகக் கருதப்படுகின்றது. காரணம் சந்திரன் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதாகும்.

ஆடி வெள்ளி முக்கியத்துவம் | Aadi Velli 2023

‘ஆடிச் செவ்வாய் தேடிக்குளி’ என்றும், ‘ஆடிப்பட்டம் தேடி விதை’, ‘ஆடிப்பெருக்கு கோடியாய் கிடைக்கும்’ என்பதெல்லாம் முன்னோர் வாக்கு. தமிழ்  மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும். ஆடி மாதம் பிறந்தாலேஅனைத்து பண்டிகைகளையும் அழைத்து கொண்டு வரும்  என்று கூறுவார்கள்.
இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை,  அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால், குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில்  மேன்மையும் ஏற்படும். ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள்,  குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் உண்டாகும்.
எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும்  இறைவியின் திருமேனியைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி  வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.
எனவே தான் ‘கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி’ அன்று தேடிச்சென்று வழிபட வேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும். அதுமட்டுமல்ல  திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வநிலை உயரும். எட்டுவகை லட்சுமிக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும். கிழமைகளில் சுக்ர வாரம்  என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். துள்ளித் திரியும் சிங்கத்தில் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால்  நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும்.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore