பொங்கல் பண்டிகை கட்டுரை | Pongal Katturai in Tamil

Updated On

தமிழர் திருநாள் கட்டுரை | Tamilar Thirunaal Pongal Katturai in Tamil

பொங்கல் பண்டிகை சிறப்பு, பொங்கல் பண்டிகை வரலாறு மற்றும் பொங்கல் கொண்டாடுவது ஏன் என்பது பற்றியும் இந்த பதிவில் கட்டுரை வடிவில் பார்க்கலாம்.

பொங்கல் திருநாள் கட்டுரை | Pongal Thirunal Katturai in Tamil

முன்னுரை
பொங்கல் பண்டிகை வரலாறு
பொங்கல் பண்டிகையின் சிறப்புகள்
போகி பண்டிகை
தைப்பொங்கல்
மாட்டுப் பொங்கல்
காணும் பொங்கல்

முன்னுரை

கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்க்கே முன் தோன்றிய மூத்த குடியான தமிழ் மக்கள் கொண்டாடும் திருவிழாவே பொங்கல் பண்டிகையாகும்.
பொங்கல் என்ற சொல்லுக்கு கொதித்தல், மிகுதல், சமைத்தல், மற்றும் செழித்தல் என்ற பல பொருள் உண்டு.

தை முதல் நாள் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இது தமிழர் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் ஒரு உன்னத திருநாள். இது வேளாண்மையை அடிப்படையாக கொண்ட விவசாய திருநாள்.  இந்நாளில் தமிழர்களின் இறைவனான சூரியனுக்கு நன்றி செலுத்துவர்.

பொங்கல் பண்டிகை வரலாறு

தைப்பொங்கல் திருவிழா உலகில் உள்ள அனைத்து தமிழர்களாலும்  சூரிய நாட்காட்டியின் படி, தை மாதத்தின் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமாக தமிழர்கள் சூரிய நாட்காட்டியவே தங்கள் நாட்காட்டியாக கடைபிடித்து வருகிறார்கள்.  அதன்படி சூரியன் மகர ராசியில் நுழையும்போது சூரியனின் ஆறு மாத நீண்ட பயணத்தின் தொடக்கத்தை இந்த பொங்கல் திருவிழா குறிக்கிறது.

இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா, மேலும் புதுச்சேரி, இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா போன்ற பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

ஆற்று ஓரப் பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் வருடத்தில் மூன்று முறை அறுவடை செய்வார்கள், ஆனால் மானாவாரி இடங்களில் மழை பெய்யும் காலங்களில் மட்டுமே விவசாயம் செய்வார்கள். அந்த வகையான நிலங்களில் வருடத்தில் ஆடி மாதத்தில் விதை விதைத்து மார்கழி மாதத்தில் அறுவடை செய்வார்கள். அவ்வாறு அறுவடை செய்த தானியங்களை வைத்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து பூஜை செய்வர்.

உழவர் திருநாள் என்று போற்றப்படும் இந்த பொங்கல் பண்டிகைகள் நான்கு நாட்கள் நடத்தப்படுகிறது. போகி பொங்கல், தை பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு தினங்கள் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகை மிகவும் பழமையான விழா என்பதற்கு எடுத்துக்காட்டாக திருத்தக்கதேவர் சீவக சிந்தாமணியில்

“மதுக்குலாம் அலங்கல் மாலை

மங்கையர் வளர்த்த செந்தீப்

புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்”

என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் மாணிக்கவாசகர் எழுதிய ஒன்பதாம் நூற்றாண்டின் சிவ பக்தி உரையாட திருவெம்பாவை இந்த பொங்கல் திருவிழாவை பற்றி தெளிவாக குறிப்பிடுகிறது.

பொங்கல் பண்டிகையின் வரலாறு பற்றிய தகவல்கள் அதிகமாக சோழர் காலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றன. இது பல்வேறு கல்வெட்டுகளின் மூலம் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

ஆரம்ப கால பதிவுகளில் இந்த பொங்கல் என்ற பெயரானது வானகம், போனகம், திருப்போனகம், பொங்கல் போன்ற சொற்களாக கல்வெட்டுகளில் தோன்றுகிறது.

இந்தக் கல்வெட்டுகளில் பொங்கல் உணவை சமைப்பதற்கு உண்டான குறிப்புகள் தெளிவாக அப்பொழுதே பொறிக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையின் சிறப்பு

இந்தியாவில் கொண்டாடப்படும் மிகவும் பழமையான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. நமக்கு உணவளிக்கும் விவசாயத்திற்கு உதவும் சூரியன், உழவர்கள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. மத வேறுபாடு இன்றி ஒட்டுமொத்த இந்திய மக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் ஒரே பண்டிகை பொங்கல்.

பொங்கல் பண்டிகையை தை பொங்கல், உழவர் திருநாள், தமிழர் திருநாள், அறுவடை திருநாள், தை திருநாள் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை தமிழகத்தில் மட்டுமல்லாது இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், தென் ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் வாளும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் தினத்தன்று புது பானை வாங்கி, புது பச்சரிசியில் பொங்கல் வைப்பர்.  பொங்கல் பானை பொங்கி வழிவது போல இல்லத்தில் மகிழ்ச்சியும், செல்வமும் பொங்கி வழியவேண்டும் என்று இறைவனை வேண்டுவர்.

போகி பண்டிகை

மார்கழி மாதத்தின் கடைசி தினத்தன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பழையன கழித்து புதியன புகுதலே போகி. போகி பண்டிகை அன்று வீடுகளை சுத்தம் செய்து குப்பைகள் மற்றும் பயனற்ற பொருட்கள் அனைத்தையும் தீயில் இட்டு கொழுத்துவர். பழைய பொருட்களை நீக்கினால், புதிய பொருட்கள் சேரும் என்பது நம்பிக்கை.

போகி பண்டிகை அன்று வேப்பிலை, பூளைப்பூ, மற்றும் ஆவாரம்பூ சேர்த்து காப்பு கட்டும் வழக்கம் உள்ளது.

நம் முன்னோர்கள் கடந்த ஆண்டிற்க்கு நன்றி செலுத்தும் விதமாகவும், புது ஆண்டை வரவேற்க்கும் விதமாகவும் இந்த போகி பண்டிகை கொண்டாடினர். போக்கி என்பது மருவி போகி என்றாகிவிட்டது.

தை பொங்கல்

தை மாதத்தின் முதல் நாள் தை பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்று அனைவரும் புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடுவர். பெண்கள் வீட்டு வாசலிலும், பொங்கல் வைக்கும் இடத்திலும் வர்ண கோலங்கள் போட்டு அழகுபடுத்துவர்.

கோலத்திற்கு நடுவில் அடுப்பு கூட்டி புதுப்பானை வைத்து, அதனை சுற்றி மஞ்சள் கொத்தை கட்டி, அதில் சர்க்கரை பொங்கல் வைப்பர். பொங்கல் பொங்கும் போது பொங்கலோ பொங்கல் என்று சொல்லும் வழக்கம் உண்டு. அதன் பிறகு படையல் போடுவதற்கு வாழை இலை விரித்து அதன் மேல் மண் விளக்கேற்றி, சாணத்தில் பிள்ளையார் செய்து வைத்து, புது தானியங்கள், புது காய்கறிகள், மற்றும் கரும்பு வைத்து பூஜை செய்வர். பூஜை முடிந்ததும் உறவினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பொங்கலை உண்பர்.

மாட்டுப் பொங்கல்

பொங்கலுக்கு மறுநாள் உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் அல்லது பட்டிப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்று மாடுகளை குளிக்க வைத்து, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அவற்றை அலங்கரித்து பொங்கல் வைத்து வழிபடுவர். விவசாயத்திற்கு உதவும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் ஒரே இனம் அது தமிழர் இனம் தான். மட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு அல்லது மஞ்சு விரட்டு என்று சொல்லக்கூடிய ஏறு தழுவும் விழா நடக்கும்.

காணும் பொங்கல்

பொங்கலின் நான்காவது நாள் காணும் பொங்கல் அல்லது கன்னிப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

காணும் பொங்கல் பெண்களுக்கு மிக முக்கியமான நாளாகும். அன்று பொங்கல் அன்று வைத்த மஞ்சள் கொத்தை வீட்டு பெரியவர் பெண்களிடம் கொடுப்பர். அவர்கள் ஆசீர்வாதம் பெற்று வாங்கி அந்த மஞ்சளை அரைத்து முகத்திலும், பாதத்திலும் பூசிக் கொள்வர்.

காணும் பொங்கல் அன்று உறவினர்களை சந்தித்து ஆசீர்வாதம் வாங்குவதும் தொன்றுத் தொட்டு வரும் பழக்கங்களில் ஒன்றாகும். அதுமட்டுமல்லாது ஜல்லிக்கட்டு, உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற பல வீர விளையாட்டுகளும் நடைபெறும்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore