புத்தாண்டு பலன்கள் -2020

Updated On

மேஷம்

விடா முயற்சியால் வெற்றியை அடையும் மேஷ ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு சனி 10லும் குரு 9லும் இருக்கின்றார்கள்.  சனியும், குருவும் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இது. சமுதாயத்தில் பிரபலம் அடையும் வாய்ப்பு ஏற்படும். தன்னம்பிக்கை பிறந்து, தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கும், அரசு சார்ந்த பணியில் உள்ளவர்களுக்கும், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பான முன்னேற்றத்தை தரும். தடைப்பட்ட காரியங்கள் சுமூகமாக நடந்து முடியும். கடன் பிரச்சினை தீரும்.  குரு கேதுவின் சேர்க்ககையினால் ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த கோவிலுக்கு சென்று வர வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த நண்பர்களை சந்திப்பீர்கள். பயணங்களின் போது கவனம் கொள்வது நல்லது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வழக்குகளின் வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது நல்லது. உறவினர்களிடம் உஷாராக இருக்க வேண்டிய காலமிது.

தொழில்

சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தாராளமாக இந்த ஆண்டில் தொடக்கத்தில் ஆரம்பிக்கலாம். எதையும் சமாளித்து தொழிலில் முன்னேற்றம் அடைய சாதகமான நேரம் இது. கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுக்கிரனும் புதனும் சாதகமான வீட்டில் இருப்பதால் சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சொந்த வீடு, வாகனங்கள், விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

திருமணம்

முயற்சி ஸ்தானத்தில் இருக்கும் ராகுவினால் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி நெருக்கம் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு. பாக்கிய குரு பலனை அள்ளித் தர போகின்றார். குடும்பத்தில் தீராத பிரச்சினைகள் அனைத்தும் தீரும். சுபச் செலவு ஏற்படும். அதிகரிக்கும் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். இதற்கு முன் நீங்கள் செய்த அனாவசிய செலவினை யோசித்து வருத்தப்படுவீர்கள்.

மாணவர்களுக்கு

கடகத்தில் விழும் சனியின் பார்வையால் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவீர்கள். விடுபட்ட பட்டப் படிப்பினை முடிப்பதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.

வேலைவாய்ப்பு

அரசு சம்பந்தப்பட்ட வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.  தனியார் துறையில் வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பெண்கள் தாங்கள் விருப்பப்பட்ட வேலையில் சேருவதற்கான வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு விசா கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு.

அஷ்டமத்து சனியால் கடந்த வருடம் கஷ்டங்களை அனுபவித்து இருந்தாலும் அந்த கஷ்டங்களை எல்லாம் கடந்து வரக்கூடிய நல்ல வருடம் தான் இது. மொத்தத்தில் வரப்போகும் புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தரக்கூடியதாக இருக்கும். விடாமுயற்சி உங்களுக்கு விஸ்வரூப வெற்றியைத் தேடித்தரும்.

 

ரிஷபம்

ராஜயோகத்தைக் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, இந்தப் புத்தாண்டு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகின்றது. கடந்த மூன்று வருடங்களாக அஷ்டம சனியின் மூலம் கடுமையான பலன்களை சந்தித்திருப்பீர்கள். கடன் பிரச்சனை, மன வேதனை, உடல் ஆரோக்கியமின்மை, மனவேதனை இப்படி எல்லாவிதத்திலும் கஷ்டம் உங்களை வாட்டி வதைத்திருக்கும். அதற்கான விடிவுகாலம் பிறந்து விட்டது. இனி வரப்போகும் காலங்களில் உங்களின் வாழ்க்கை பாதை முன்னேற்றத்தை நோக்கி தொடரப் போகின்றது.  உங்கள் தொழில் முன்னேற்றம் அடையும். வேலைக்கு செல்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் வருமானம் சீராக இருக்கும். வீடு வாகனம் மனை வாங்கும் யோகம் உண்டு. வீட்டில் சுப விசேஷங்கள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதால் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். இதனால் சுப செலவு ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே சுமூகமான உறவு இருந்துவரும். உடல் நலம் சீராக இருக்கும்.

மாணவர்கள்

ரிஷபத்திற்க்கு 5ஆம் இடமான கன்னி ராசிக்கு, சனி பார்வை விலகி விட்டதால் மாணவர்கள், கல்வி கற்பதில் முன்னேற்றம் அடைவீர்கள். சோம்பல், அசதி இவையெல்லாம் தகர்த்தெறியப்பட்டு திடீர் உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுவீர்கள். மேல்படிப்பு படிப்பவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கும். உங்களின் முயற்சி முன்னேற்றத்தை தரும்.

திருமணம்

7ஆம் இடத்தில் இருந்த குரு சில சங்கடங்களையும், சில நன்மைகளையும் கொடுத்துக் கொண்டிருந்தார்.  ஆனால் இப்பொழுது 2020இல் 7ஆம் இடத்திலிருந்து நகர்ந்து விட்டார். ஏழாம் இடத்திற்கு சனி பார்வையும் இல்லை. உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் குரு பார்வை உள்ளதால், திருமணத் தடை இப்பொழுது நீங்கி விட்டது. திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் ஆண் பெண் இருவருக்கும் நிச்சயம் கெட்டிமேள சத்தம் கேட்கும்.

வேலைவாய்ப்பு

கடந்த இரண்டு வருடங்களாக வேலைவாய்ப்பு இல்லாமல் நீங்கள் பட்ட கஷ்டங்கள் இதோடு முடிவுக்கு வந்தது. வேலைவாய்ப்பை தேடுபவர்களுக்கு கண்டிப்பாக உத்தியோகம் கிட்டும். நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தோடு, எதிர்பார்த்த பதவியுடன் வேலை நிச்சயம் அமையும். வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் உங்களின் பேச்சை இது வரை கேட்காதவர்களும் இனி கேட்டு நடப்பர். அரசு துறையில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

தொழில்

சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களாக இருந்தால், உங்களுக்கு இதுவரை இருந்த தடைகள் நீங்கி உங்கள் தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். புதிதாக நண்பர்கள் வட்டம் கிடைப்பதன் மூலம் உங்களின் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உங்கள் சாமார்த்தியத்தின் வெளிப்பாட்டை கண்டவர்கள், வியப்படைவார்கள். இடையில் சிறு சிறு ஏற்ற இறக்கங்கள் வந்து போகும். அந்த சமயத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வங்கியில் கடன் வாங்க முயற்சிப்பவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கும்.

ரிஷப ராசிக்காரர்கள் கொஞ்சம் பகட்டாக வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அப்படி நினைக்காமல், அனாவசிய பேச்சுகளை குறைத்து, உங்களது உழைப்பை அதிகப்படுத்தினால் உங்களுக்கான வெற்றிகளும் நிச்சயம் அதிகமாகத் தான் கிடைக்கும். தினம்தோறும் உங்கள் தாய் தந்தையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றி தான்.

 

மிதுனம்

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றப்போகும் மிதுன ராசிக்காரர்களே, இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு சில சங்கடங்களையும், பல நன்மைகளையும் தரக்கூடியதாக அமையப்போகின்றது. கடந்த வருடம் உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் குரு மறைந்தும், 7வது இடத்தில் சனி அமர்ந்து கொண்டு சங்கடங்களை மட்டும் அளித்தனர். தோல்வி என்னும் பள்ளத்தில் இருந்த நீங்கள், சற்று உயர்ந்து சமநிலைக்கு வரப் போகிறீர்கள்.

7ஆம் இடத்தில் இருந்து கொண்டு கஷ்டங்களை தந்த சனிபகவான், 2020இல் 8ஆம் இடத்திற்கு செல்கின்றார். இதன் மூலம் உங்களைப் பற்றி தவறாக புரிந்து கொண்டவர்கள், உங்களின் நல்ல மனதை புரிந்து கொள்வார்கள். புதிய நண்பர்கள் உங்களுக்காக உதவிக்கரம் நீட்டுவார்கள். இருந்தாலும், உங்கள் வீட்டில் சிறுசிறு குழப்பங்கள் வந்து போக வாய்ப்பு உண்டு. குடும்பத் தலைவிகளுக்கு சந்தோஷமான காலம் இது. குடும்பத்தில் விசேஷங்கள் நடப்பதன் மூலம் சுப விரயங்கள் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை கொள்வது அவசியம். அஷ்டம சனியால் சில மருத்துவ செலவுகள் வந்து போகும்.

மாணவர்கள்

5வது இடமான துலாம் ராசியை சனி பார்க்கப் போகின்றார். குருவின் பார்வை இல்லாத காரணத்தால் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு உண்டு. அதாவது நீங்கள் படித்ததை உங்களால் நினைவு வைத்துக்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உங்கள் முயற்சியை அதிகப்படுத்தி, படிக்கும் நேரத்தை கூடுதலாக்கி கல்வியில் முழு கவனத்தையும் செலுத்துவதன் மூலம் வெற்றி அடையலாம்.

வேலைவாய்ப்பு

வேலை தேடி முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு, வாய்ப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தில், எதிர்பார்த்த பதவியில், வேலை கிடைக்க வாய்ப்பு இல்லை. என்றாலும், உங்களுக்கு அமையும் வேலையை ஏற்றுக் கொள்ள வேண்டிய காலம் இது. உங்களின் திறமைக்கு ஏற்ற வேலை கிடைப்பது சிறிது கஷ்டம் தான். ஆகவே கிடைத்த வேலையை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வரும் காலங்களில் உங்கள் தகுதிகள் நிரூபிக்கப்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள்.

திருமணம்

7ஆம் இடத்தில் குரு இருக்கின்றார். குரு 7லிருந்து 8ஆம் இடத்திற்கு செல்லும் போது குடும்பத்தில் புதிய உறவுகள் ஏற்படும். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். 8ல் சனியின் பார்வையும் உள்ளதால் உங்கள் வார்த்தைகளை கட்டுப்படுத்த வேண்டும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிரச்சனைகள் அதிகம் ஆனால் பிரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சொந்தத் தொழில்

சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களாக இருந்தால், உங்களுக்கு சிறு சிறு தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. வாய்ப்புகள் உங்களைத் தேடி வருவது போல் சூழ்நிலை அமைந்தாலும் கடைசியில் அது உங்கள் கைகளில் இருந்து நழுவிப் போய்விடும். அஷ்டம குரு, அஷ்டம சனி இரண்டும் உங்களுக்கு வருவதால் கஷ்டங்கள் இரட்டிப்பாகும். யாரிடமும் வாக்குவாதம் கூடவே கூடாது. வாக்குவாதத்தின் மூலம் வரும் பிரச்சனைகளை சமாளிக்க இந்த வருடமே வீணாகிவிடும்.

உங்களுடன் வேலை செய்யும் சக ஊழியர்களிடம் கெட்ட பெயர் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. யாரிடமும் வாக்குவாதமோ சண்டையோ போட வேண்டாம். வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் தயவு செய்து உங்களின் வேலையை விட வேண்டாம். வேலை பார்க்கும் இடத்தில் வரும் சங்கடங்களை பொறுத்துக் கொள்ள வேண்டிய காலமிது. வேலையை விட்டு விட்டால் திரும்பவும் வேலை கிடைப்பது கஷ்டம்தான். பொறுமை அவசியம் தேவை.

2ஆம் இடத்திற்கு குரு பார்வையும், சனி பார்வையும் சேர்ந்து இருக்கும் போது நீங்கள் சொல்லும் நல்லவை கூட மற்றவர்களுக்கு கேட்டதாக தெரியும். வார்த்தையில் மிக மிக கவனம் தேவை. அநாவசியமான பேச்சுக்களையும், வீண்வம்புகளையும் குறைப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

வழிபாடு

காலை எழுந்தவுடன் குலதெய்வ வழிபாட்டை முடித்து விட்டு மற்ற காரியங்களை தொடங்குவதன் மூலம் உங்கள் சங்கடங்கள் குறையும். குலதெய்வம் தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனையும், திருப்பதி ஏழுமலையானையும் வழிபடுவதன் மூலம் நன்மை அடையலாம். துர்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் விளக்கு ஏற்றுவதன் மூலம் உங்கள் சங்கடங்கள் நீங்கும்.

 

கடகம்

எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் கடக ராசிக்காரர்களே, கடந்த இரண்டு வருடங்களாக சந்தோஷத்தை மட்டும் அனுபவித்து வந்த நீங்கள் இந்த வருடம் நன்மைகளையும், தீமைகளையும் சரிசமமாக அனுபவிக்க போகிறீர்கள். உங்கள் ராசிக்கு 7ல் சனி வரப் போகின்றார். இதனால் சில சங்கடங்கள் வரும். சனி தன் சொந்த வீட்டில் இருப்பதால் வக்கிர நிலை குறைவாக இருக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். உங்களின் வாக்குவன்மை அதிகரிக்கும். புதிய உறவுகள் தேடிவரும். உறவினர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து,  விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். ஏனென்றால் உறவுகளுக்கிடையே பிரிவை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. சங்கடங்களை எதிர்கொள்ள தான் வேண்டும். சங்கடங்களை சந்தோஷமாக மாற்றும் நேரம் விரைவில் வரும்.

மாணவர்கள்

5ல் குரு இருந்து பல நல்ல பலன்களைக் கொடுத்து இருந்தாலும், தற்சமயம் 6ஆம் இடத்தில் மறையப் போகின்றார். 6ல் இருந்து 12ம் இடமான விரய ஸ்தானத்தை பார்க்கின்றார். இதனால் கல்வி பயில்வதில் பல நன்மைகள் இருந்தாலும், உங்களின் சோம்பல் தன்மையினால் சிறு சிறு பிரச்சனைகள் வரும். சோம்பலை தவிர்த்து கல்வியில் ஆர்வத்தை அதிகப்படுத்துவது நல்லது. உங்கள் நண்பர்கள் கெட்டவர்கள் என்று தெரிந்தால், அவர்களின் நட்பினை தள்ளி வைக்க வேண்டும். மாணவர்கள், பெற்றோரின் அறிவுரையை கேட்டு நடந்து கொள்ள வேண்டிய காலம் இது.

திருமணம்

திருமணத்தடை விலகும். கணவன் மனைவி இடையே அநாவசியப் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. நிச்சயம் ஆனவர்களாக இருந்தால், திருமணத்திற்கு பிறகு உங்களின் அன்பை வெளிப்படுத்துவது நல்லது. கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு.

வேலைவாய்ப்பு

நீங்கள் எதிர்பார்த்த வேலை, நீங்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில், எதிர்பார்த்த ஊதியத்தில், எதிர்பார்த்த பதவியில் கிடைக்கும். அந்த வேலை உங்களுக்கு மகிழ்ச்சியையும் அளிக்கும். அது உங்களுக்கு பல மடங்கு பலத்தை தந்து உங்கள் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும்.

சொந்தத் தொழில்

சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களாக இருந்தால், உங்கள் ராசிக்கு 7ல் சனி இருக்கின்றார். 2ஆம் இடத்தை குரு பார்க்கின்றார். உங்கள் தொழில் எந்த பாதிப்பும் இல்லாமல் முன்னேற்றமடையும். ஆனால் உங்களைப் பற்றிய தவறான வதந்திகள் வெளியில் பரவுவதற்கான வாய்ப்பு உண்டு. எக்காரணம் கொண்டும் அதனை வளர விட வேண்டாம். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம் இது. தேவைப்பட்டால் மட்டும் கடன் வாங்குவது நல்லது. சேமிப்பது பிற்காலத்தில் உதவும் என்பதை மறவாதீர்கள்.

வேலைக்கு செல்பவர்கள்

குரு 6ல் இருந்து 10ஆம் இடத்தைப் பார்ப்பதால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். நீங்கள் எதிர்பார்க்கும் சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். உடன் வேலை செய்பவர்களிடம் இருந்து சற்று தள்ளியே இருப்பது நல்லது. உங்களுடன் இருக்கும் நண்பர்களே உங்களின் பின்னால் குழி தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.

வழிபாடு

குலதெய்வ வழிபாடு அவசியமாகும். செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் முருகனை வழிபடுவதன் மூலம் தொழிலில் வரும் சங்கடங்களை தவிர்க்கலாம். பசுவிற்கு தானம் செய்வது நன்மையை தரும்.

 

சிம்மம்

எதையும் வெளிப்படையாக கூறும் சிம்ம ராசிக்காரர்களே, உங்களுக்கு சனி 6ஆம் இடத்தில் மறைந்து அமோகமான பலன்களை கொடுத்தாலும், 12-ஆம் இடத்தைப் பார்க்கும் சனி சில சங்கடங்களையும், வீண் விரயங்களையும் தரப்போகிறார். மற்றபடி இந்த வருடம் சந்தோஷமான வருடமாக தான் அமையும். சுப விசேஷங்களினால், சுபவிரயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. சொந்த வீடு, மனை, வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் உறவினர்களிடையே மதிப்பும் மரியாதையும் உங்களுக்கு அதிகமாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத் தலைவிகளுக்கு இந்த வருடம் சந்தோஷமாக அமையும். உடல் நலத்தில் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உடல் நலனை அக்கறையாக பார்த்துக் கொள்வது நல்லது. உடல் நலக் குறைவினால் மருத்துவச் செலவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. வீட்டில் களவு போவதற்கான வாய்ப்பு உள்ளதால் உங்கள் பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. பண பரிமாற்றத்தில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.

மாணவர்கள்

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகம் இருந்தாலும் உங்கள் சோம்பலினால் சிறுசிறு தடைகள் உண்டாகும். ஆர்வத்துடன் கல்வியில் ஈடுபடுவதால் முழுமையான வெற்றியை அடைய முடியும். இந்த வெற்றியானது நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகத்தான் இருக்கும். விடாமுயற்சியுடன் சோம்பலைத் தவிர்த்து ஈடுபடவேண்டும். கல்வியை பாதியில் விட்டவர்களும் இந்த வருடம் உங்கள் படிப்பினை தொடரலாம்.

திருமணம்

திருமண தடை விலகும். உங்கள் ராசிக்கு 7ஆம் இடமான கும்ப ராசிக்கு, விரய ஸ்தானத்தில் சனி இருப்பதால் திருமண செலவு ஏற்படும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த வருடம் நிச்சயம் உங்கள் வீட்டில் குழந்தையின் அழுகை ஒலிக்கும்.

வேலை

உங்கள் திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தில், எதிர்பார்த்த பதவியில் நிச்சயம் வேலை வாய்ப்பு அமையும். விடாமுயற்சி ஆனது உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும்.

வேலைக்கு செல்பவர்களுக்கு

அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். நல்ல வருமானம் கொடுக்ககூடிய ஆண்டாக இது அமையும். உங்களின் வாக்குவன்மை அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு உங்கள் அலுவலகத்தில் அனைவரும் செவி சாய்ப்பார்கள். உங்கள் மேலதிகாரியிடம் பாராட்டை பெறுவீர்.

சொந்தத் தொழில்

சொந்தத் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உங்கள் தொழில் மேன்மை அடைய நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய காலம் இது. உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள். அதிர்ஷ்டலஷ்மி உங்கள் கதவை தட்டும் நேரம். சற்று சோம்பல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விழிப்புணர்ச்சியுடன் செயல்பட்டு உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு, உங்கள் தொழிலை வளர்க்க நல்ல காலம் இது. வங்கிக் கடன் கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வரும் காலங்களில் உங்கள் வாழ்க்கையில் சுபிக்ஷ்ம் நிறைந்து இருக்கும்.

வழிபாடு

குலதெய்வ வழிபாட்டின் மூலம் சங்கடங்களை தவிர்க்கலாம். வியாழக்கிழமைகளில் ராகவேந்திரர், ஷுரடி பாபா மகான்களின் கோவிலுக்கு சென்று வருவது சிறப்பான பலனை தரும். பசுவிற்கு பச்சரிசி, வெல்லம் வியாழக்கிழமைகளில் தருவது நல்லது.

 

கன்னி

மன்னிக்கும் மனப்பான்மை கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த வருடம் உங்களுக்கு பல நன்மைகளையும் சில சங்கடங்களையும் கொடுக்கப் போகின்றது. சனி, குரு இருவரும் உங்களுக்கு ஆட்சி பலத்துடன் இருந்து பல நன்மைகளை கொடுக்கப் போகிறார்கள். தற்சமயம் 10ல் ராகுவும் 4-ல் கேதுவும் இருக்கிறார்கள். 2020 செப்டம்பரில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சியில் 9ல் ராகுவும் 3ல் கேதுவும் இடம் பெயர்வதால், கேது நன்மையையும், ராகு சில சங்கடங்களையும் தரப்போகிறார். மற்றபடி உங்களுக்கு இந்த வருடம் நல்லபடியாக அமையும். உங்கள் வருமானம் சீராக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு கஷ்டங்கள் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்ப தலைவிகளுக்கு கொஞ்சம் கடினமான காலம் தான் இது. உங்கள் கணவரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை வர வாய்ப்பு உள்ளதால் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குழந்தைகளால் சங்கடம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

மாணவர்கள்

4ல் உள்ள சனி பகவான், 5ம் இடத்தில் அமர போவதால் நீங்கள் கல்வி பயில்வதில் சிறுசிறு தடைகள் ஏற்படும். உங்கள் படிப்பில் கவனம் அதிகம் தேவை. கெட்ட சகவாசங்ளில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஆனால் சில சங்கடங்களை கொடுத்த சனி உங்களுக்கு பல நன்மைகளையும் தரப்போகிறார். அதிக கவனத்துடன் ஈடுபடும்போது உங்கள் முயற்சியில் வெற்றி அடையலாம்.

வேலைவாய்ப்பு

10 ஆம் இடமான மிதுன ராசியை குரு பார்க்க ஆரம்பித்துவிட்டார். இவ்வளவு நாளாக வேலைக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் நிச்சயம் வேலை கிடைக்கும். சனி பார்வை 2லும், 11லும் உள்ளதால் எதிர்பார்த்த அளவுக்கு சம்பளம் கிடைக்காது.

திருமணம்

சனிபகவான் 5ல் இருந்து 7ஆம் இடத்தை பார்ப்பதால், திருமணத்தில் தடைகளும், மனக்கசப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவசரமாக எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டாம். பெரியோர்களின் ஆலோசனைபடி, நடந்து கொள்வதன் மூலம் சங்கடங்களை தவிர்க்கலாம். கணவன்-மனைவி இடையே சங்கடங்கள் உருவாக வாய்ப்பு உள்ளதால் அனுசரித்து செல்வது நல்லது.

சொந்தத் தொழில்

சொந்த தொழில் மற்றும் வியாபாரம் செய்பவராக இருந்தால், உங்களுக்கு 10ல் குரு பார்வை இருப்பதால் பல விதமான நன்மைகள் ஏற்படும். ஆனால் 11ல் சனி பார்வை இருப்பதால், உங்கள் லாபமானது மொத்தமாக கிடைக்காது. உங்கள் வாடிக்கையாளர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் தொழில் வியாபாரம் மேன்மையை நோக்கி செல்லக்கூடிய காலம் இது. எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். கடன் வாங்காதீர்கள்.

வேலைக்கு செல்பவர்களுக்கு

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான மரியாதை கூடும். ஆனால் நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கவில்லை என்றால் வேலையை விட்டுவிட வேண்டாம். உங்கள் உழைப்பிற்கான ஊதிய உயர்வு வெகு விரைவில் உங்களை வந்து சேரும். பொறுமை அவசியம் தேவை.

வழிபாடு

புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாரை வழிபட வேண்டும். நீங்கள் பிறந்த கிழமையிலோ அல்லது புதன் கிழமையிலோ பசு மாட்டுக்கு பச்சைப்பயிறு வெல்லம் கொடுத்து வருவது சிறந்த பலனை அளிக்கும்.

 

துலாம்

எதையும் எதிர்கொள்ளும் தைரியம் கொண்ட துலாம் ராசியாளர்களே, உங்களுக்கு இந்த வருடம் பல சந்தோஷங்களையும், சில சங்கடங்களையும் கொண்டதாக அமையும். உங்களுக்கு இந்த சமூகத்தில் இருந்த தாழ்வான நிலை மாறி மதிப்பும் மரியாதையும் கூடும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பொதுவான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பொன், பொருள், ஆடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் ராசிக்கு 4ல் சனி இருந்து கொண்டு 6ஆம் இடத்தைப் பார்ப்பதால், உங்கள் தாயின் உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். குழந்தைகளின் நடவடிக்கைகளை கவனித்து கொள்வது நல்லது. குழந்தைகளின் நட்பு வட்டாரத்தை சரி செய்ய வேண்டும். தேவையற்ற அலைச்சல்கள் நீங்கி நிம்மதி அடைவீர்.

மாணவர்கள்

உங்கள் ராசிக்கு 5ஆம் இடமான கும்பராசியை குரு பார்க்கவில்லை. சனியும் பார்க்கவில்லை. ஆனால் சனி பகவான் உங்கள் 4ஆம் இடத்தில் இருப்பதால், நீங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அன்றைக்கு உண்டான பாடங்களை அன்றே படித்து விட வேண்டும். அடுத்த நாள் படித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வராமல் படித்தால் மட்டும் தான் முன்னேற்றம் அடைய முடியும். அதிக முயற்சி தேவை.

திருமணம்

உங்கள் ராசிக்கு 5-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் கண்டிப்பாக நிச்சயிக்கப்படும். சுபகாரியத் தடை விலகும். மனசஞ்சலம் தீரும். சந்தோஷமான வருடமாக இது அமையப் போகிறது. ஆனால் சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்கள் உடல்நலனில் பிரச்சனை உள்ளது போன்ற பிரமை இருக்கும். இதனை நீங்கள் வெளிக்காட்டிக் கொண்டால் உங்கள் திருமண பேச்சில் பிரச்சனைகள் ஏற்படும்.

வேலைவாய்ப்பு

4 ல் உள்ள சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான கடகத்தை பார்ப்பதினால் வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உங்களை விட திறமை குறைவாக உள்ளவர்களுக்கு கூட வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் நீங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். ஏப்ரல் மாதம் வரைதான் இந்த கஷ்டம் நீடிக்கும். அதன் பிறகு உங்களின் திறமைகள் நிரூபிக்கப்பட்டு வெற்றி பெறுவீர்.

சொந்தத் தொழில்

சொந்தத் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு 10ல் சனி பகவானின் பார்வை இருப்பதால் தொழில் முன்னேற்றம் நிதானமாகத்தான் இருக்கும். நிதானமாக உயரும் முன்னேற்றமானது பிற்காலத்தில் உங்களுக்கு நிலைத்து நிற்கும். தற்போது ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டதாக தான் அமையும். தேவைப்பட்டால் கடன் வாங்கலாம் அதிகமான தொகையை தேவை இல்லாமல் மூலதனம் செய்வதன் மூலம் சிக்கல் ஏற்படும்.

வேலைக்கு செல்பவர்களுக்கு

உங்கள் வேலை சுமை அதிகமாக இருக்கும். உங்களுடன் வேலை செய்யும் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். ஆனால் உங்கள் சாமர்த்தியத்தால் இந்த கஷ்டங்களை எல்லாம் நீங்கள் கடந்து செல்வீர்கள். கஷ்டங்கள் இருந்தாலும் எந்தவித கெடுதலும் நடக்காது.

வழிபாடு

குலதெய்வ வழிபாடு அவசியமானது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மஹாலக்ஷ்மியையும், துர்க்கையையும் வழிபட்டால் உங்கள் பிரச்சனைகள் தீரும். பசுவிற்கு பச்சரிசி, வெல்லம் இவற்றை தானமாக அளிக்க வேண்டும்.

 

விருச்சிகம்

எதையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியமும், திறமையும் கொண்ட விருச்சிக ராசியாளர்களே இந்த வருடம் உங்களுக்கு சந்தோஷமான வருடமாக அமையப் போகின்றது. கடந்த 8 வருடங்களாக நீங்கள் பட்ட அனைத்து அவமானத்திற்கும், கஷ்டத்திற்கும் விடிவுகாலம் வந்துவிட்டது. உங்கள் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உங்களை சுற்றி உள்ளவர்கள் இடத்தில் உங்களுக்கு இருந்த கெட்டபெயர் இனி மறைந்துவிடும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளால் சந்தோஷமும், மன அமைதியும் அடைவீர்கள். குடும்பத்தில் புதிய உறவுகளுக்கான வருகை உண்டாகும். உங்களின் வாக்கு வன்மை அதிகரித்தாலும், உங்கள் உறவினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. உங்கள் ராசிக்கு சனி பார்வை இருப்பதால் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் கொள்வது அவசியம். மருத்துவத்தில் வீண்விரயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மாணவர்கள்

உங்கள் ராசிக்கு 4ஆம் இடத்திற்கு சனி பார்வை வரப்போகிறது. குருவின் பார்வை 6ஆம் இடத்திற்கு சென்று விட்டது. இதனால் நீங்கள் படித்ததை உங்களால் நினைவு வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும். மனதை ஒரு நிலைப்படுத்தி, கல்வியில் அதிக ஆர்வம் காட்டினால் மட்டுமே வெற்றி பெற முடியும். இல்லையென்றால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

திருமணம்

7ஆம் இடமான விரய ஸ்தானத்தில் குரு பார்வை இருப்பதால் உங்கள் வீட்டில் சுப செலவுகள் ஏற்படும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நிச்சயம் திருமணம் நடக்கும். சந்தோசமான வாழ்க்கை உங்களுக்கு அமையும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து விடும்.

வேலைவாய்ப்பு

இதுவரை சனிபகவானாலும், குருவினாலும் சங்கடங்களை அனுபவித்த உங்களுக்கு இனி நல்ல காலம் பிறக்கப் போகிறது. உங்கள் தகுதிக்கும், நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்திலும், நீங்கள் எதிர்பார்த்த பதவியிலும், உங்கள் மனதிற்கு பிடித்த படி இந்த வருடம் நிச்சயம் வேலை கிடைக்கும். இந்த வருட ஆரம்பமே உங்களுக்கு அமோகம் தான்.

சொந்தத் தொழில்

சொந்த தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு 10ஆம் இடமான சிம்ம ராசிக்கு குரு பார்வை உள்ளதால் பல நன்மைகள் கிடைக்கப் போகிறது. இத்தனை நாட்களாக இருந்த தடை விலகும். முன்னேற்றம் அடைய கூடிய காலமாக இந்த வருடம் அமையும். புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்பும் உள்ளது. உங்கள் தொழில் அமோக வளர்ச்சி பெறும். தேவையற்ற அலைச்சல்கள் நீங்கி நிம்மதி பெறுவீர். தேவைப்பட்டால் மட்டும் கடன் வாங்கி கொள்ளலாம். ஆனால் உங்கள் வார்த்தையில் மட்டும் நிதானம் தேவை. அவசியமாக பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பதும் தவறு.

வேலைக்கு செல்பவர்களுக்கு

நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு, எதிர்பார்த்த சம்பள உயர்வு, மரியாதை கிடைக்கும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உண்டு. உங்கள் அலுவலகத்தில் ராஜமரியாதை உங்களுக்கு கிடைக்கப் போகும் வருடமாக அமையும்.

வழிபாடு

குலதெய்வ வழிபாடு செய்வது அவசியம். வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை சுண்டல் செய்து குருவிற்கு நைவேத்தியமாக படைத்து, அந்த பிரசாதத்தை குழந்தைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். பசுவிற்கு பச்சரிசி வெல்லம் கொடுத்து வருவது நன்மை தரும்.

 

தனுசு

சங்கடங்களை தைரியமாக எதிர்கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே, உங்களது சுய வீட்டில் அமரப்போகும் சனிபகவான் உங்களுக்கு படிப்படியாக நன்மையை தரப்போகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களை படாத பாடு படுத்திய சனிபகவான் இந்த வருடம் உங்கள் ராசியை விட்டு செல்கின்றார். ஏழரை சனியின் கடைசி மூன்று வருடம் மீதம் இருந்தாலும், இதுவரை பட்ட கஷ்டங்கள் குறைய ஆரம்பிக்கும். வருமானத்தில் தடை, கெட்ட பெயர், வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகள், இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடும். குடும்பத்தில் வாக்குவாதம் அதிகரிக்கும். விட்டுக்கொடுத்து பேசுவது நல்லது. உங்கள் ராசியில் குரு உள்ளதால், உடல் நலக் குறைபாடும் மருத்துவ செலவும் ஏற்படும். உங்கள் ராசியில் உள்ள குரு 5-ஆம் இடத்தைப் பார்ப்பதால் உங்கள் குழந்தைகளால் சந்தோஷமும், மனநிம்மதியும் பெறுவீர். இனிவரும் நாட்களில் சந்தோஷம் அதிகரிக்கக்கூடும். தந்தை வழி உறவுகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். ஏழரை சனியால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட விரிசல்கள் இனி மறைந்து ஒற்றுமை நிலவும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. கோவில்களுக்கு சுற்றுலா பயணம் செல்வதாக இருந்தால் குடும்பத்துடன் செல்வது நல்லது.

மாணவர்கள்

உங்கள் ராசியில் இருந்து 5ஆம் இடத்திற்கு குரு பார்வை இருப்பதால், படிப்பில் ஆர்வம் அதிகரித்து முன்னேற்றம் அடைவீர்கள். சோம்பல் தனத்தை விட்டு பெற்றோரின் அறிவுரைப்படி நடந்து கொள்வது முன்னேற்றம் தரும். பெரியோர்களிடம் பேசும் போது வார்த்தையில் மரியாதை தேவை. படிப்பை பாதியில் விட்டவர்கள் இந்த வருடம் உங்கள் படிப்பை தொடரலாம்.

திருமணம்

திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் நிதானமாக முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது. இந்த வருட கடைசியில் உங்களுக்கான திருமணம் நிச்சயிக்கப்படும். அவசரமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். கணவனுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த வருடம் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்காவிட்டாலும் கிடைத்த வேலைக்கு செல்வது நல்லது. உங்கள் தகுதிக்கு குறைவான வேலை என்று, வரும் வேலை வாய்ப்பை நிராகரிக்க வேண்டாம். உங்களுடைய திறமைகள் வெளிப்படும் நேரம் கூடிய விரைவில் வரப்போகிறது. நீங்கள் எதிர்பார்த்த சம்பளமும் பதவி உயர்வும் கூடிய விரைவில் கிடைத்துவிடும்.

சொந்தத் தொழில்

தடைகளை மட்டுமே சந்தித்த உங்களுக்கு இந்த வருடம் தடைகளை தகர்த்து முன்னேறும் காலமாக மாறப்போகிறது. சனி பகவான் உங்கள் ராசியை விட்டு வெளியே சென்று 10ஆம் இடமான தொழில் ஸ்தானத்தைப் பார்க்கப் போவதால், உங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ஆனால் லாபமானது குறைவாகத் தான் கிடைக்கப்பெறும். பலனை எதிர்பார்க்காமல் கடுமையான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருங்கள். வருங்காலத்தில் வெற்றி நிச்சயம். முதலீட்டை படிப்படியாக உயர்த்திக் கொள்வது நல்லது.

வேலைக்கு செல்பவர்கள்

வேலைக்குச் செல்லுமிடத்தில் மரியாதை இழந்து, சில பேர் வேலையே இழந்து கூட இருப்பீர்கள். அந்த கஷ்டங்களெல்லாம் இனி தீரும். இழந்த மரியாதைகளும், வேலையும் இனிவரும் காலங்களில் மீட்டெடுப்பீர்கள்.

வழிபாடு

குலதெய்வ வழிபாடு செய்வது அவசியம். செவ்வாய், வெள்ளி, மற்றும் சனிக்கிழமைகளில் பச்சரிசி சாதம், எள்ளு, வாழைப்பழம் இவற்றை ஒன்றாக பிசைந்து பசுமாட்டிற்கு கொடுப்பது நல்லது. உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வது நன்மையை தரும்.

 

மகரம்

சங்கடங்களை எதிர்த்து நிற்கும் மனதைரியம் கொண்ட மகர ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு சனிபகவான் வரப்போகின்றார். உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் தனுசு ராசிக்கு குரு வந்து விட்டார். அதனால் சுப செலவுகள் ஏற்படும். நன்மைகளும் தீமைகளும் சமமாக நடக்கக்கூடிய ஆண்டாக இது உங்களுக்கு அமையும். ராகுகேது பெயர்ச்சி நன்மைகளை தந்தாலும், சனிப்பெயர்ச்சி சில கஷ்டங்களைத் தரும். இருந்தாலும் உங்கள் வீட்டிற்கு சொந்தக்காரரான சனிபகவான் உங்களுக்கான கஷ்டங்களை சிறிது குறைத்துக் கொள்வார். உங்களின் விடாமுயற்சியாலும், கடுமையான உழைப்பினாலும் வரும் சங்கடங்களைத் தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப தலைவிகளுக்கு உங்கள் குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். ஆனால் உங்களின் கணவரிடம் வாக்குவாதமும், மன சங்கடம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனப்பக்குவமும், வார்த்தை பக்குவமும் அவசியம் தேவை. கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. உடல் நலனில் மிக அதிக கவனம் தேவை. வீண் விரையம் ஏற்படும். மே, ஜூன் ஜூலை இந்த மூன்று மாதங்களும் கவனமாக இருப்பது நல்லது.

மாணவர்கள்

உங்களுக்கு 5ம் இடமான ரிஷப ராசிக்கு குருபார்வை விலகிவிட்டது. படிப்பிற்கான செலவு அதிகரிக்க தொடங்கும். இதர விஷயங்களை தவிர்த்து விட்டு, படிப்பில் அதிக கவனம் செலுத்துவது மிக முக்கியம். ஏழாமிடத்தில் சனி பார்வை உள்ளதால் உங்கள் நட்பு வட்டாரத்தில் உடனிருப்பவர்களே உங்களுக்கு பின்னால் குழி தோண்ட வாய்ப்பு உள்ளது.

திருமணம்

ஏழாமிடத்தில் சனி பார்வை இருப்பதால் கல்யாண பேச்சை தள்ளிப்போடுவது நல்லது. ஏழரை சனியில் திருமணத்தை பற்றி பேசுவது நல்லது அல்ல. இந்த சமயத்தில் திருமணம் நடந்தால் கணவன் மனைவி இடையே பிரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவசரம் வேண்டாம். இரண்டு வருடம் கழித்து திருமண பேச்சினை தொடரலாம். பாதிப்புகள் குறையும்.

வேலைவாய்ப்பு

பத்தாமிடத்தில் சனி பார்வை இருப்பதால் வேலை கிடைப்பதில் சங்கடங்கள் உண்டாகும். கிடைக்கும் வேலை எதுவாக இருந்தாலும் அதனை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

சொந்தத் தொழில்

உங்கள் தொழிலில் முன்னேற்றம் மந்தமாகத் தான் இருக்கும். கடன் வாங்க வேண்டாம். யாரை நம்பியும், யாருக்காகவும், தொழிலிலோ, பண பரிமாற்றத்திற்கோ ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கோர்ட்டு, வழக்கு என்ற அளவிற்கு கூட பிரச்சனை வளர்ந்து வருவதற்கு வாய்ப்பு உள்ளது. விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே சங்கடங்களைத் தவிர்க்க முடியும்.

வேலைக்கு செல்பவர்கள்

உங்கள் அலுவலகத்தில் நீங்கள் எவ்வளவு தான் உழைத்தாலும் உங்களுக்கான நல்ல பெயர் கிடைக்காது. எதிர்பார்ப்பு இல்லாமல் தான் உழைக்க வேண்டும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பில்லை. உங்களை விட தகுதி குறைவாக உள்ளவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் கூட உங்களுக்கு தாமதமாகத் தான் கிடைக்கும். இது ஏழரை சனியின் தாக்கம். அவசரம் வேண்டாம். வாக்குவாதம் வேண்டாம். வீண்பேச்சு வேண்டாம். கவனம் அதிகம் தேவை.

வழிபாடு

குலதெய்வ வழிபாடு அவசியம். செவ்வாய்கிழமையில் முருகன் வழிபாடு செய்வது நல்லது. வெள்ளிக்கிழமையில் துர்கை வழிபாடு சங்கடங்களை தவிர்க்கும். பசுவிற்கு செவ்வாழைப்பழம் தந்து வர பிரச்சினைகள் குறையும்.

 

கும்பம்

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் கும்ப ராசியாளர்களே, இந்த வருடம் உங்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. இதனால் இந்த வருடம் சந்தோஷங்களையும் கஷ்டங்களையும் சமமான அளவு அனுபவிக்கப் போகிறீர்கள். குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம், பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு அவமரியாதை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொருட்கள் திருடு போவதற்கான வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு ஏதேனும் உடல் பிரச்சனைகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. நாட்கள் கடந்தால் பிரச்சினை அறுவைசிகிச்சை வரை போய்விடும். இந்த வருடம் உங்களுக்கு சந்தோஷத்திற்கும் குறைவிருக்காது, சங்கடத்திற்கும் குறைவிருக்காது. கால் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்பு உண்டு.

மாணவர்கள்

உங்கள் ராசியில் ஐந்தாம் இடத்தை குரு பார்க்கின்றார். உங்கள் படிப்பில் கவனக் குறைபாடு ஏற்படும். மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை தவிர்த்துவிட்டு படிப்பில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் சங்கடங்களை தவிர்க்கலாம். பெற்றோர்களின் சொற்படி நடப்பது நல்லது.

திருமணம்

உங்கள் ராசிக்கு குரு அதிசாரமாக பெயரும் சமயத்தில் குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். திருமணம் நிச்சயிக்கப்படும். ஆனால் சனி 12ல் இருந்து இரண்டாம் இடமான, குடும்ப வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால், நீங்கள் பேசும் வார்த்தையில் கவனம் தேவை. நீங்கள் பேசும் ஒரு தவறான வார்த்தை கூட உங்கள் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளை நடக்க விடாமல் தடுத்துவிடும். இனிவரும் காலங்களில் கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படக்கூடும் என்பதால் விவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

வேலை வாய்ப்பு

வேலை கிடைப்பதில் சில சங்கடங்கள் இருக்கும். ஆனால் கடுமையான விடாமுயற்சியினால் உங்களுக்கான வேலைவாய்ப்பு விரைவில் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

சொந்தத் தொழில்

சொந்த தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு, உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சனியும், குருவும் இணைந்து அமரப் போகிறார்கள். ஆரம்பத்தில் தொழில் மந்த நிலையில் இருக்கும். உங்கள் தொழிலில் முதலீட்டை அதிக படுத்த வேண்டிய சூழ்நிலை வந்தாலும், அதிகமான முதலீட்டை மூன்று வருடங்களுக்கு தவிர்ப்பது நல்லது. நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் பங்குதாரர்களிடம் கவனமாக செயல்பட வேண்டும்.

வேலைக்கு செல்பவர்கள்

நீங்கள் செய்யாத வேலைக்கு கூட உங்களுக்கு இதுவரை நல்ல பெயர் கிடைத்திருக்கும். ஆனால் இனிவரும் காலத்தில் நீங்கள் கஷ்டப்பட்டு செய்யும் வேலைக்கு கூட நல்ல பெயர் கிடைக்காது. இந்த ஏழரை வருடத்திற்கு சில சங்கடங்களை அனுபவித்து தான் ஆக வேண்டும். வார்த்தையில் நிதானம் தேவை. வேலையை இறப்பதற்கு கூட நிலைமை மோசமாக வாய்ப்பு உள்ளது. அலுவலகம் சம்பந்தப்பட்ட கோப்புகள் திருடு போகும் வாய்ப்பு உள்ளது. விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

வழிபாடு

குலதெய்வ வழிபாடு அவசியம். சாதம், வெல்லம், தேங்காய் இவைகளை ஒன்றாக பிசைந்து பசுமாட்டிற்கு கொடுத்துவந்தால் சங்கடங்கள் குறையும். சுமங்கலிகளுக்கு செருப்பு தானம் செய்வது சிறந்த பலனை அளிக்கும்.

 

மீனம்

எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மீனம் நண்பர்களே, இந்த வருடம் உங்களுக்கு ஆரம்பமே அமோகம் தான். சனி பகவான் உங்கள் ராசிக்கு 10லிருந்து 11ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். அதுமட்டுமல்லாமல் 10ல் உள்ள குரு உங்களுக்கு பதவி உயர்வினை தருவார். உங்களுக்கே தெரியாத உங்களால் நம்ப முடியாத திறமைகள் உங்களிடமிருந்து வெளிவரும். பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு அதிகரிக்கும். உங்களின் வாழ்க்கை தரம் உயரும். உங்களுக்கான மரியாதை உயரும். ராகு உங்கள் 4ம் இடத்தில் இருந்துகொண்டு சங்கடத்தை கொடுத்தார். கேது 10ம் இடத்தில் இருந்து உங்கள் அலுவலகத்தில் சங்கடங்களை கொடுத்தார். இந்த வருடம் ராகு 3லும் கேது 9-ம் இடம் பெயர்ந்து உங்களுக்கான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கப் போகிறார்கள். சனி பகவான், குரு பகவான், ராகு, கேது எல்லாம் சரியான இடத்தில் அமைந்துள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சில சங்கடங்கள் இருக்கும். உங்கள் குழந்தைகளிடத்தில் கவனிப்பு தேவை. நிறைய சந்தோஷமும் சில சங்கடங்கள் மட்டுமே இந்த வருடம் உங்களுக்கு இருக்கும்.

மாணவர்கள்

படிப்பில் முன்னேற்றம் இருந்தாலும், சில குழப்பங்கள் உங்கள் மனதில் இருந்து வரும். உடலில் சோம்பல் உண்டாகும். சோம்பலைத் தவிர்த்து படிப்பதின் மூலம் முன்னேற்றத்தை அடையலாம். உடம்பில் ஏதாவது ஒரு பிரச்சினை இருப்பது போன்ற பிரம்மை ஏற்படும். அதனை தவிர்த்து சுறுசுறுப்பாக செயல்படுவது அவசியம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சுப விசேஷங்கள் நடைபெறும். அதற்கான சுபச் செலவுகளும் அதிகமாக வரும்.

திருமணம்

உங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். மனதிற்கு பிடித்தமான வாழ்க்கை துணை அமையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த வருடம் நிச்சயம் குழந்தை வரம் கிடைக்கும். சந்தோஷம் நிறைந்திருக்க கூடிய வருடமாக இது அமையும்.

வேலை தேடுபவர்களுக்கு

பத்தாமிடத்தில் குரு இருந்து நீங்கள் நினைத்த வேலையை தேடி தருவார். நீங்கள் நினைத்த ஊதியத்தில், நினைத்த பதவியில் உங்கள் மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்கும். இரண்டாம் இடத்திற்கு குரு பார்வை இருப்பதால் உங்கள் வார்த்தையில் கவனம் தேவை.

சொந்தத் தொழில்

சொந்த தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உங்களது வியாபாரத்தை விரிவுபடுத்த கூடிய நேரம் வந்து விட்டது. லாபஸ்தானத்தில் சனி இருக்கும் போதே உங்கள் வருமானத்தை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இனிவரும் லாபத்தினை வீடு, மனைகளில் முதலீடு செய்வது நல்லது. ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டாம். அதிக கடன் வாங்கி முதலீடு செய்யாமல் தொழிலை விரிவு படுத்துவது நல்லது. இப்பொழுது வாங்கும் கடனை பிற்காலத்தில் உங்களால் திருப்பி தர இயலாது.

வேலைக்கு செல்பவர்களுக்கு

உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் தேடி வரும். சம்பள உயர்வு, பதவி உயர்வு, எல்லாம் தேடி வரும். உங்களுக்கு நேரம் நன்றாக உள்ளது என்ற தலை கணத்தில், நீங்கள் அடுத்தவரை ஏளனம் செய்யாதீர்கள். அது பிரச்சினையில் போய் முடியும். வேலை சுமை குறையும்.

வழிபாடு

குலதெய்வ வழிபாடு அவசியம். ஞாயிற்றுக்கிழமைகளில் கோதுமை மாவு, வெல்லம் இவற்றை கலந்து பசுவிற்கு தந்து வந்தால் உங்களுக்கான கஷ்டங்கள் குறையும்.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore