மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
“பட்டி” பெருகும்
உழவனின் உயிர்த் தோழானாக இருந்து மாடாக உழைத்த மாடுகளை (கால்நடைகளை) போற்றி நன்றி கூறும் நோக்கோடு பொங்கி, விருந்து படைத்து, நன்றி கடன் செய்யப் பெறும் நிகழ்வே மாட்டும் பொங்கலாகும். இப் பொங்கல் பொங்குவதனால் “பட்டி” பெருகும் என்பது ஐதீகம்.
உழவுக்கும், வண்டி இழுக்கவும், சூடு மிதிக்கவும், நீர் இறைக்கும் சூத்திரத்தைச் சுற்றுவதற்கும் இன்னும் பல தேவைகளுக்கு எருது மாடுகளும், பால், சாணம், இனப்பெருக்கத்திற்கு பசு மாடுகளும் பல வகையில் உழவனுக்கு உதவி செய்கின்றன. சில சந்தற்பங்களில் பசு மாடுகள்கூட எருது மாட்டின் வேலைகளைச் செய்கின்றன.
தற்காலத்தில் விவசாய உற்பத்தில் பல விதமான இயந்திரங்கள் பாவனையில் வந்துள்ள காரணத்தால் மாடுகளின் தேவை குறைந்துள்ள போதிலும் எம் மூதாதையினர் செய்து வந்த மாட்டுப் பொங்கல் விழா தற்பொழுதும் உழவர்களால் மட்டும் கொண்டாடப் பெற்று வருகின்றது.
மாட்டுப் பொங்கல் தினம் மாடுகளைக் குளிப்பாட்டி, விபூதிக் குறி வைத்து, சந்தணம், குங்குமம் பொட்டுகள் இட்டு, மலர் சாத்தி அல்லது மலர் மாலை சாத்தி, மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து மாட்டுத் தொழுவத்தில் பொங்கல் பொங்கி மாட்டை கடவுளாக மதித்து அதற்கு படையல் படைத்து உண்ணக் கொடுத்து, தாமும் உண்டு மகிழ்வர்.
“நன்றி மறப்பது நன்றல்ல அது மிருகமாயினும்” என்பதே இதன் மூலம் நம் மூதாதையினர் எமக்கு உணர்த்திய பாடமாகும்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.