காலை உணவு என்பது ஒருநாளின் தொடக்கத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. இப்போது பெரும்பாலானோர் தங்களின் பணிநேரத்தை காரணமாக காட்டி காலை உணவை தவிர்த்து வருகின்றனர். மேலும் சிலர் உடல் எடையை குறைப்பதற்காக காலை உணவை தவிர்க்கின்றனர். ஆனால் காலை உணவை தவிர்த்தால்தான் உடல் எடை அதிகரிக்கும் என்பது அவர்கள் அறியாத அதிர்ச்சிகரமான உண்மை.
காலை உணவை தவிர்ப்பது எவ்வளவு ஆபத்தானதோ அதைவிட ஆபத்தானது தவறான காலை உணவை உண்பது. நம்மில் பெரும்பாலானோர் செய்வது இதைத்தான். ஆரோக்கியமென நினைத்து நாம் சாப்பிடும் பல காலை உணவுகள் நமக்கு பல தீங்குகளை ஏற்படுத்துகிறது. எந்தெந்த உணவுகளை காலை நேரத்தில் தவிர்ப்பது நல்லது என்பதை இங்கே பார்க்கலாம்.
மெதுவடை
தமிழர்களின் உணவுகளில் மிகமுக்கியமான ஒன்று மெதுவடை. காலை நேரத்தில் இட்லியுடன் சேர்த்து மெதுவடையை சாப்பிடுவதை ஒரு சம்பரதாயமாகவே மாற்றிவிட்டனர். உளுந்து உடலுக்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும் இரவு முழுவதும் அமைதியாக இருக்கும் செரிமான மண்டலம் உளுந்தை செரிக்கவைத்து அதில் உள்ள சத்துக்களை உறிஞ்ச நீண்ட நேரம் எடுக்கும். இதனால் உங்கள் செரிமான மண்டலம் நீண்ட நேரம் இயங்க வேண்டிவரும். இதில் 334 கலோரிகள் இருக்கிறது இதனை கரைக்கவே நீங்கள் அதிக வேலை செய்ய வேண்டி வரும். எனவே காலை நேரத்தில் மெதுவடை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
வடாபாவ்
இது வாடா இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற ஒரு சிற்றுண்டி. அலுவலகம் செல்லும் பலருக்கும் இதுதான் காலை உணவாக இருக்கிறது. இப்போது இது தமிழநாட்டிலும் பிரபலமாகி வருகிறது. காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பிரெட்டுக்கு இடையே உருளைகிழங்கை வைத்து சாப்பிடுவது எவ்வளவு பெரிய ஆரோக்கிய கேடு என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். இதில் கிட்டத்தட்ட 286 கலோரிகள் உள்ளது.
பரோட்டா
பரோட்டா ஆரோக்கியத்திற்கு ஏற்றது அல்ல என அனைவரும் நன்கு அறிவோம். இருந்தாலும் ருசிக்காக அதனை சாப்பிடுவதை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறோம். காலை நேரத்தில் பரோட்டா சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்களே சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றது. காலையில் பரோட்டா சாப்பிட்டால் அந்த நாள் முழுவதும் நீங்கள் மந்தமாகத்தான் இருப்பீர்கள்.
பட்டர் டோஸ்ட்
மிகவும் விரைவாக செய்யக்கூடிய ஒரு காலை உணவு. உண்மையில் இது இந்தியாவை சேர்ந்த உணவல்ல ஆனால் அனைத்து இந்தியர்களாலும் விரும்பப்படும் ஒரு உணவாகும். வெண்ணெயில் சில சத்துக்கள் இருந்தாலும் அதனை நிறமூட்டப்பட்ட பிரெட்டுடன் சேர்த்து சூடுபண்ணும் போது அதன் சத்துக்கள் யாவும் மாயமாகி வெறும் கலோரிகளே உங்களுக்கு பரிசாக கிடைக்கிறது.
பூரி
பூரியை காலை உணவாக சாப்பிடுபவர்களுக்கு அன்று நாள் முழுவதும் ஒருவிதமான தலைவலி இருக்கும். அதுதான் எண்ணெய் மயக்கம். காலை நேரத்தில் எண்ணெயில் பொறித்த உணவுகளை முடிந்தளவு சாப்பிடாமல் இருப்பதே நல்லது. அதிலும் பூரியுடன் கொடுக்கப்படும் வேகவைத்த உருளைக்கிழங்கு நிச்சயம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்காது.
ஆங்கில உணவுகள்
காலை நேரத்தில் ஆங்கில உணவுகளை சாப்பிடும் பழக்கம் இந்தியா முழுவதும் பரவி வருகிறது. இது சுவையானதாகவும், ஸ்டைலாகவும் இருக்கலாம். ஆனால் இது ஆரோக்கியமானதா என்றால் அதற்கு பதில் இல்லை என்றுதான் கூறவேண்டும். இவற்றில் என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்த்தால் ஒரு கேக், பாதி வெந்த இறைச்சி, பாதி வேகவைக்கப்பட்ட முட்டை அதனுடன் ஒரு பழச்சாறு. காலை நேரத்தில் இதனை சாப்பிட்டால் உங்கள் உடலில் அதிகரிக்க போவது தேவையில்லாத கேடு விளைவிக்கக்கூடிய கொழுப்புகள் மட்டுமே.
நூடுல்ஸ்
இதன் பாதிப்பு இந்தியா முழுவதும் அறிந்ததுதான். ஆனால் இன்னும் இது விற்பனை கடைகளில் செய்யப்படுவது துரதிர்ஷடவசமானது. காலை நேரம் மட்டுமல்ல இதனை எப்பொழுது சாப்பிட்டாலும் ஆரோக்கிய கேடுதான். ஆனால் காலையில் சாப்பிடும்போது விளைவுகள் சற்று அதிகமானதாக இருக்கும். இரண்டு நிமிஷத்தில் செஞ்சுறலாம் அப்படி விளம்பரங்களில் சொல்ராங்கனு இத சாப்பிட்டுட்டு அவஸ்தை படாதீங்க. இது மக்களின் உயிரோடு விளையாடும் அனைத்து கம்பெனிகளுக்கும் பொருந்தும்.
கார்ன்ப்லேக்ஸ்
விளம்பரங்கள் என்னதான் இவை எடை குறைப்பிற்கு உதவும் என்று கூறினாலும் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் இவற்றால் எந்த பலனும் இல்லை என்பதே நிதர்சனம். இவற்றில் செயற்கை சர்க்கரையும், உப்பும் சேர்க்கப்பட்டு இருக்கும். உண்மையான தானியங்களில் இருக்கும் சத்துக்கள் மிகக்குறைந்த அளவே இதில் இருக்கும்.
வறுத்த முட்டை
முட்டை என்பது மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றுதான். ஆனால் அதனை வறுக்கும்போது அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்து வெறும் கொழுப்புகளே அதிகரிக்கிறது. ஒரு முட்டை வறுவலில் கிட்டத்தட்ட 90 கலோரிகள் இருக்கும்.
பிஸ்கட்
காலை நேரத்தில் டீயில் பிஸ்கட்டை நனைத்து சாப்பிடவிட்டு அலுவலகம் செல்லும் பல இளைஞர்களை நீங்கள் பார்க்கலாம். இதுபோன்ற பிஸ்கட்களில் இருப்பது மாவு மற்றும் செயற்கை சுவையூட்டிகள் மட்டுமே. இதனை நீங்கள் சாப்பிடும்போது உங்களுக்கு எந்தவித சத்துக்களும் கிடைப்பதில்லை மாறாக மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள்தான் அதிகரிக்கிறது. இதுபோன்ற காலை உணவுகள் உங்கள் உடலில் கலோரிகளை அதிகரித்து உடல் எடையை வேகமாக அதிகரிக்க செய்யும். எனவே காலை உணவை தவிர்க்காமல் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் உண்ணவும்.