12 இராசிகளும் அந்த இராசியனர் வணங்க வேண்டிய கோவில்களும் அதற்கான சிறப்பு நாட்களும்!!

Updated On

ராசியான வாழ்க்கை அமைவதில்லை என்று பலரும் புகார் சொல்வர்.ஆனால் எல்லோருக்கும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிறக்கும் போதே ஒரு நட்சத்திரமும் ராசியும் உடன் வந்துவிடும்.அதை சரியாய் கணித்து அதன் பலன் உணர்ந்து வாழ்க்கை வழி நடத்தினால் எல்லாம் சுபமாய் நலமாய் அமையும் அப்படிபட்ட இராசியை பற்றியும் அதற்குரிய கோவில்கள் அங்கே சென்று வணங்குவதனால் கிடைக்க போகும் பலன்கள் பற்றியும் ஒரு விரிவான பார்வையே இந்த கட்டுரை…

இந்து மதத்தில் இந்த ராசி நட்சத்திரம் அதிகம் பார்க்கப்பட்டு பின்பற்றப்பட்டாலும்,மற்ற மதத்தினரும் கொஞ்சம் இதன் மேல் நம்பிக்கை கொண்டுள்ளனர்.அதற்கு ஒரு சிறிய உதாரணம் செய்தித்தாள்,வார இதழ்,வானொலி, இனையதளம், தொலைக்காட்சி, என அனைத்திலும் நாள்தோறும் ராசி பலனுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

மொத்தம் இராசிகள் 12 அவைகள் 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம்,4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி,7. துலாம்,  8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியன ஆகும்.

இராசி மண்டல வலயத்தினுள் 27 நட்சத்திர கூட்டங்கள் உள்ளது.இந்த 27 நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் (3.33 பாகை) 3 பாகை 20 கலைகள் கொண்ட நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசியும் ஒன்பது நட்சத்திர பாதங்களை (2 1/4 நட்சத்திரங்களை) கொண்டனவாக உள்ளது.

வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்டது என்பது இறை நம்பிக்கை உள்ளவர்களின் கருத்து. ஆனால் எல்லாம் விதிப்படி என்று அமைதியாய் இருந்துவிடாமல் இறைவனை உளமார வேண்டி வேண்டுதலை வழக்கமாகி கொண்டால் விதியும் நம் வசமாகும் அதுவும் நம் இராசிக்குரிய கோவிலில் அதை செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.

மேஷ ராசி முருகன் உங்களுக்கான தெய்வம்:-

அஸ்வினி, பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் முதல் பாதம் வரை உள்ளவர்களுக்கு மேஷ ராசி இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதி. செவ்வாய் பகவானின் அதிதேவதை முருகப்பெருமான்.அதனால், மேஷராசிக்காரர்கள் முருகப்பெருமானை முழு மூச்சாய் நம்பி வழிபட வேண்டியது அவசியம்.அருகில் உள்ள முருகன் கோவிலில் அடிக்கடி வழிபாடு செய்தாலே போதும்.

முருகப்பெருமானுக்கு உகந்த திருநாட்களில் பழநிக்குச் சென்று, நெய் தீபம் ஏற்றிவைத்தும், மலர்கள் சமர்ப்பித்தும் பழநியாண்டவனை வழிபடவேண்டும்.பழநிக்குச் சென்று வழிபடுவதால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.கூடுதலாக முருகப் பெருமானுக்கு நடைபெறும் விபூதி அபிஷேகத்தைத் தரிசித்து வழிபடுவதால் உங்கள் வினைகள் யாவும் தீர்ந்து போகும்.பழநிக்குச் செல்பவர்கள் போகரின் ஜீவசமாதியையும் தரிசித்து  வரலாம்.திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலும் இந்த ராசிக்காரர்கள் வழிபட உகந்த தலமாகும்.

ரிஷபத்திற்கு சிவன் உகந்த தெய்வம்:-

ரிஷப ராசிக்கு அதிபதி சுக்ரன்.  கலைகளுக்கு இவர்தான் அதிபதி. கார்த்திகை 2,3,4ம் பாதங்கள், ரோகிணி மற்றும் மிருகசீரிஷத்தின் முதல் இரண்டு பாதங்கள் வரை உள்ளவர்கள்  ரிஷப ராசிக்குள் வருவார்கள். ராசிநாதன் சுக்கிரனின் தன்மை, மற்றும் இந்த ராசியில் அடங்கும் நட்சத்திரங்கள் அடிப்படையில் இந்த ராசிக்காரர்கள் தரிசித்து வழிபடவேண்டிய தெய்வம், சிவன் குறிப்பிட்டு சொல்வதென்றால் கோவை சத்தியமங்கலம் செல்லும் வழியில் உள்ள கோவில்பாளையத்தில் அருளும் கால காலேஸ்வரர்.இவர்களின் வழிபாட்டுக்கு இந்த கோயில் மிகவும் உகந்தது. இங்குள்ள மூலவர் விசேஷ யோகங்களை அளிப்பவர். இங்கே பிரதோஷம், சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருவாதிரை நட்சத்திர தினங்களில் சென்று வழிப தும்பைப்பூ மாலை அணிவித்தோ, வில்வார்ச்சனை செய்தோ வழிபட்டால் ரிஷப ராசிகாரர்களுக்கு சகல நன்மையும் வந்து சேரும். இது தவிர இதே ராசிகாரர்கள் வழிபட வேண்டிய இன்னொரு கோவில் என்றால் விஸ்வாமித்திரர் தவம் புரிந்த தலம் முசிறியில் உள்ள சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் சிறந்தது.

மிதுனம் பெருமாளை பற்றுங்கள்:-

மிதுனத்துக்கு அதிபதியாக புதன் வருகிறார். கல்வி மற்றும் கலைக்கு புதன் உரியவராகிறார்.மிருகசீரிடம் 3, 4 ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2 3ம் பாதம் வரை உள்ளவர்கள் மிதுன ராசிக்குள் வருவார்கள். இவர்களின் நலம் சிறக்க திருவரங்கநாதரை வழிபடவேண்டும். தாமரை, துளசி மாலை அல்லது முத்து மாலை சாற்றி ஏகாதசி திதி, அல்லது புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வழிபடலாம்.குறிப்பாக, பஞ்சமி மற்றும் அஷ்டமி திதி நாட்களில் சென்று வழிபடுவதால் பன்மடங்கு பலன் உண்டு. இன்னொரு கோவில் திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணங்குடி ஸ்ரீ லோகநாத பெருமாளையும், திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாளையும் வழிபட்டு வந்தாலும் சிறந்த பலன் வந்து சேரும்.

கடகம் அம்மனை தவறாமல் நாடுங்கள்:-

கடக ராசிக்கு அதிபதி சந்திரன். புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை இந்த ராசிக்குள் வருவார்கள். திண்டிவனம் அருகில் திருவக்கரையில் மூன்றாம் பிறையுடன் காட்சி தரும் சந்திரமெளலீஸ்வரரையும் உடனுறை வரப்பிரசாதி துர்கை அம்மனையும்   வழிபடலாம் பஞ்சமி, அஷ்டமி, நவமி, பௌர்ணமி மற்றும் அமாவாசை திதிகளில் அல்லது ஞாயிறு, வெள்ளி அன்று, அரளிப்பூ, எலுமிச்சைப்பழ மாலை அணிவித்து அம்பாளை வணங்கினால், சகல தோஷங்களும் நீங்கி சந்தோஷம் உண்டாகும். முழு சந்திர பலமும் வாய்த்து வாழ்க்கை வளம் பெறும்.இது தவிர, அரியலூருக்கு அருகிலுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அருள் புரியும் ஸ்ரீ பிரகதீஸ்வரர், கோவை மாவட்டம் நவகரையில் அருளும் துர்கா பகவதி அம்மன் ஆகிய தெய்வங்களையும் மேற்சொன்ன நாட்களில் சென்று வழிபட்டு வரலாம்.

சிம்மத்துக்கு யோகம் தருவது நடராஜரே:-

சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன்.

மகம், பூரம் மற்றும் உத்திரம் முதல் பாதம் நட்சத்திரங்கள் உள்ளவர்கள் இந்த ராசியில் அடங்குவர். இந்த ராசிக்காரர்கள் வில்வத்தால் அர்ச்சனை செய்து ஞாயிறு, வியாழக்கிழமைகளிலும், அமாவாசை, தசமி, திரயோதசி திதி நாட்க ளிலும்  ராமநாதபுரத்துக்கு தென்மேற்கில் 15 கி.மீ தொலைவில் உள்ள உத்தரகோசமங்கையில் அருளும் மங்கள நாதரையும், பூண்முலை அம்மனையும் வணங்கி வர வேண்டும்.இங்குள்ள மரகத நடராஜரை வணங்கினால், வாழ்வில் அனைத்து வகை யோகங்களும் வந்து சேரும். இது தவிர உத்திரமேரூருக்கு அருகிலுள்ள திருப்புலிவனத்தில் அருளும் ஸ்ரீஅமிர்தகுஜாம்பாள் சமேத ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் மற்றும் சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமைகளில் சென்றும் வணங்கலாம். மேலும், ஆவுடையார் கோவிலில் அருளும் ஸ்ரீ யோகாம்பிகை உடனுறை ஸ்ரீ ஆத்மநாதரையும், சண்டிகேஸ்வரரையும் வணங்கி வழிபடலாம்.

கன்னிக்கு கண்கண்ட தெய்வம்  நரசிம்மம்!

கன்னி ராசிக்கு அதிபதியாக புதன் வருகிறார். உத்திரம் (2,3,4 பாதங்கள்), அஸ்தம், சித்திரை (1,2பாதங்கள்) ஆகிய 3 நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ராசியில் இடம்பெறுகின்றனர்.கன்னி ராசி, புதனுடைய அம்சம். கோபம், யுத்தம், சாந்தம் ஆகிய மூன்று குணங்களும் இந்த ராசிக்கு உண்டு. இந்த 3 குணங்களுக்கும் ஏற்ற கடவுளாக நரசிம்மர் விளங்குகிறார்.இந்த ராசிக்காரர்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிங்கிரிக்குடியில் அருள்பாலிக்கும் அருள்மிகு நரசிம்மர் திருக்கோயிலில் உள்ள பிரகலாதவரதன் சன்னதியில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் தயிர் சாதம், புளி சாதம் ஆகியவற்றை தானம் கொடுத்து அர்ச்சனை செய்து வணங்கி வந்தால் பெரும் பலன் கிடைக்கும் இது தவிர சென்னை கோயம்பேட்டில் உள்ள வைகுண்டவாசல் பெருமாள் கோயிலில் உள்ள நரசிம்மர் சன்னதியிலும் வழிபடலாம்.

துலாம் ராசிக்கு நல்லன துலங்க பெருமாள் வழிபாடு கட்டாயம்:-

சுக்கிரன் அம்சம் நிறைந்த துலாம் ராசியில் சித்திரை 3, 4ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ம் பாதங்கள் வரை உள்ள நட்சத்திரங்கள் அடங்கும்.இந்த ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய ஆலயங்கள் ஏராளமாக உள்ளன ஆனால் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு அருகில் ஐயம்பாளையத்தில் சின்ன குன்றில் எழுந்தருளி அருள்பாலிக்கும் உத்தமராய பெருமாளை ஏலக்காய் மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால்  சகல நன்மைகளும் தேடிவரும். சனிக்கிழமைகளில் வழிபடவேண்டியது முக்கியம்.புரட்டாசி சனிக்கிழமையும் ஏகாதசி திதியும் இன்னும் சிறப்பான நாட்களாகும்.அது அளவற்ற நன்மைகளை தரும். இது தவிர தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகில் உள்ள கோவிலூர் சென்னகேசவரையும் வழிபடலாம்.

விருச்சிகத்திற்கு விருட்சம் போல் வாழ்வை தர முருகன் துணை அவசியம்:-

விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்கள் விருச்சிகம் ராசியில் அடங்குவார்கள். எட்டாவது ராசியான இவர்களுக்கு மனஎழுச்சி அதிகம் உண்டு. அதைக் கட்டுப்படுத்த நாகை மாவட்டத்தில் உள்ள எட்டுக்குடி முருகனை வணங்கி வழிபடுவது அவசியம். 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் வான்மீகர் என்னும் சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருப்பதால், இங்கே வந்து வழிபடுபவர்களுக்கு மனச் சாந்தி உண்டாகும். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இங்கே வந்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். நெய்தீபம் ஏற்றி வழிபடுவதும், பால் காவடி எடுப்பதும் விசேஷமாகும். எட்டுக்குடி முருகன் கோயிலைப் போலவே, நாகப்பட்டினம் அருகில் உள்ள சிக்கல் சிங்காரவேலனையும் வணங்கிப் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முழு பலனை பெறலாம்.

தனுசுக்கும் நரசிம்மர் உற்ற துணையாயிருப்பார்:-

தனுசு ராசிக்கு அதிபதியாக குரு பகவான் வருகிறார். மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் ஆகிய நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ராசியில் அடங்குவார்கள். இவர்கள் திண்டுக்கல் அருகில் வேடசந்தூரில் என்ற ஊரில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு நரசிம்மரை இந்த ஆலயத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வந்து மஞ்சள் சார்த்தி வழிபட, மங்கலம் பெருகும். இதே போல் மோகனூரில் அமைந்திருக்கும் கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கும் சென்றும் வழிபட அளவற்ற பலன்கள் கிடைக்கும்.

மகரம் புகழ் உயர பெருமாளே துணை:-

மகர ராசிக்கு அதிபதி யாக சனிபகவான் அமைகிறார்.உத்திராடம் 2, 3, 4ம் பாதங்கள், திருவோணம் மற்றும் அவிட்டத்தின் முதல் இரு பாதங்கள் ஆகிய நட்சத்திரக்காரர்கள் இந்த ராசியில் அடங்குவர். இந்த ராசிக்காரர்களுக்கு, திருச்சி-சேலம் செல்லும் வழியில், காவிரிக் கரையில் உள்ள குணசீலம் என்னும் தலத்தில் அருள் புரியும் பெருமாளை வழிபடுவது அவசியம். திருவோண நட்சத்திர தினங்கள், வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு சென்று துளசி மாலை அணிவித்து, பெருமாளை வழிபட்டு வந்தால் ஆயிரம் நலம் பிறக்கும்.இது தவிர கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் அருள்பாலிக்கும்  அருள்மிகு வைகுண்ட நாராயண பெருமாளையும் இந்த ராசிக்காரர்கள் சென்று வழிபடலாம்.

கும்பத்துக்கும் பெருமாள் துணையே பிரதானம்:-

கும்ப ராசி சனி பகவானின் ராசி. அவிட்டம் 3, 4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதியின் முதல் மூன்று பாதங்கள் கும்ப ராசிக்குள்ளேயே வருகிறது. இவர்களுக்கு நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரத்தில் உள்ள பெருமாளை வணங்கி வழிபடுவது சிறப்பு பலனை தரும். புதன், வெள்ளி, சனிக்கிழமைகள் மற்றும் ஏகாதசி திதி நாட்களில் இந்த ஆலயத்துக்குச் சென்று மலர் மாலைகள் அணிவித்தும், நெய் தீபம் ஏற்றியும் பெருமாளை வழிபட்டு வரலாம். இது தவிர வேலூர் மாவட்டம், திருப்பாற்கடல் தலத்தில் அருளும் ரங்கநாதரையும் தாயாரையும் வழிபட்டு வரலாம் இது சகல நன்மைகளையும் தரும்.

மீனம் செழிக்க சிவனே துணை:-

மீன ராசி குரு பகவானின் ராசி. பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மீன ராசியில் அடங்குவர். இவர்கள் சேலம் மாவட்டம், கொல்லிமலையில் குடி கொண்டிருக்கும் அருள்மிகு அறப்பளீஸ்வரரை வழிபடலாம். இங்கே ஸ்வாமி சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். இவரையும் இங்கே உடனுறைந்து இருக்கும் அறம்வளர்த்த நாயகியையும் முன் மண்டப விதானத்தில் அமைந்த அஷ்டலட்சுமியுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் கீழ் நின்று திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில்அம்மையப்பனை வழிபடுவதால், அதீத நன்மைகள் கிடைக்கும். இங்குள்ள நந்தியெம்பெருமானுக்கு அருகம்புல் சமர்ப்பித்து வழிபடுவதும் விசேஷம்!இது தவிர மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் வழியில் உள்ள திருக்குருக்கையில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை யோகீஸ்வரரை வழிபடுவதாலும் மீன ராசியினர் வாழ்வில் மேன்மை அடையலாம்.

மேற்கண்ட அந்தந்த ராசியினருக்குரிய கோவில்களில் வாய்ப்பு கிடைக்கும் போது சென்று வணங்கலாம்.அந்த தெய்வங்களின் திருப்படத்தை உங்கள் வீட்டில் வைத்து தினமும் வணங்கலாம். இதை தொடர்ந்து செய்து வர வாழ்வின் சகல நன்மைகளையும் நிரந்தரமாய் அடையலாம்.உங்கள் இராசியின் முழு நன்மையும் உங்களுக்கு தவறாமல் கிடைக்க மறக்காமல் செல்லுங்கள் உங்கள் இராசி ஆலயத்திற்கு, வாழ்க வளமுடன் !திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore