குறைந்த நேரத்தில் மிகவும் எளிமையாக தயாரிக்க கேரட் சாப்பாடு சிறந்த ஒன்றாகும். இது குழந்தைகள் விரும்பும் வகையில் சற்று இனிப்பு சுவையிலும் மற்றும் மசாலா சுவையிலும் இருக்கும். குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு கொண்டு செல்ல, உடனடியாக தயாரிக்க இது எளிமையான சாப்பாடாகும். தினமும் ஒரே மாதிரியான கலவை சாதத்தை செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மறுக்கின்றனர். அதனால் சற்று வித்தியாசமாக செய்து கொடுங்கள்.
தேவையான பொருட்கள்
அரை கப் அரிசி அல்லது 3 கப் சாப்பாடு
அரை கப் கேரட் (துருவியது)
½ டீஸ்பூன் கடுகு
1 சிறிய பட்டை
1 பிரியாணி இலை
1 ஏலக்காய்
2 கிராம்பு
1 பச்சை மிளகாய்
1 கொத்து கறிவேப்பிலை
பெருங்காயம் சிறிதளவு
1.5 தேக்கரண்டி எண்ணெய்
தேவைக்கேற்ப உப்பு
குழந்தைகள் விரும்பும் படி அழகு படுத்த
1 பெரிய வெங்காயம்
10 முதல் 12 முந்திரி
10 முதல் 12 திராட்சை
சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பின்பு அதில் மற்றும் திராட்சை சேர்த்து வதக்கவும். அதை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
அதே பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
இப்போது நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கவும்.
பச்சை மிளகாய், கறிவேப்பிலை வதங்கியதும் துருவிய கேரட் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். மூன்று முதல் நான்கு நிமிடம் மிதமான தீயில் நன்றாக வதக்கவும்.
கேரட் நன்றாக வதங்கியதும் வேகவைத்த சாதத்தை சேர்த்து கிளறவும், இப்போது உப்பு சரிபார்த்து அடுப்பை அணைக்கவும்.
கடைசியாக வறுத்த வெங்காயம், முந்திரி, திராட்சையும் சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
இது குழந்தைகளுக்கு ஆரோக்கிமான மற்றும் சுவையான உணவாகும்.