முட்டை இல்லாத வாழைப்பழ கோதுமை கேக் செய்துபாருங்கள்!!

Updated On

வீட்டில் இருக்கும் பொருட்கள் மற்றும் வாழைப்பழத்தை வைத்து இந்த கேக்கை சுலபமாக செய்து முடிக்க முடியும்.  இதில் சில காய்ந்த திராட்சை, முந்திரி, பாதாம் ஆகியவற்றை நறுக்கி சேர்ப்பதன் மூலம் இந்த கேட்கின் சுவை அதிகரிக்கிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இந்த கேக்கை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

கேக் என்றாலே முட்டை சேர்த்து தான் செய்ய வேண்டும் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர், ஆனால் இந்த கேக்கில் வாழைப்பழம் சேர்ப்பதால் நாம் முட்டை சேர்க்கவேண்டியது இல்லை.

தேவையான பொருட்கள் 

  1. 4 வாழைப்பழம் 
  2.  1.5  கப்  கோதுமை மாவு
  3. ⅔ கப் சூரியகாந்தி எண்ணெய்
  4. ஒரு டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5.  அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா
  6. ஒரு சிட்டிகை உப்பு
  7. அரைக் கப் சர்க்கரை
  8. ஒரு டீஸ்பூன் வெண்ணிலா சாறு
  9. நறுக்கிய பருப்புகள்

 

செய்முறை

மாவு கலவையை தயார் செய்வதற்கு முன்பு பாத்திரத்தை  சூடுபடுத்த வேண்டும். நீங்கள் கேக்கை அடுப்பில் வைத்து வேக வைக்கப் போகிறீர்கள் என்றால் ஒரு குக்கரில் அல்லது அடி கனமான பாத்திரத்தில் மணல் அல்லது தூள் உப்பு சேர்த்து அதன்மேல் ஒரு ஸ்டாண்டை வைத்து மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.

நீங்கள் மைக்ரோவேவ் பயன்படுத்தினால் 180 டிகிரி செல்சியஸ் அல்லது 350 டிகிரி பாரன்ஹீட் அளவில் முன்கூட்டியே சூடுபடுத்த வேண்டும்.

 

மாவு கலவை தயார் செய்ய

வாழைப்பழத்தை தோல் உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி அதை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும், அதனுடன் சர்க்கரை, எண்ணெய் மற்றும் வெண்ணிலா சாரு அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

 மற்றொரு பாத்திரத்தில் கோதுமை மாவு பேக்கிங் பவுடர்,  உப்பு மற்றும் பேக்கிங் சோடா  சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

வாழைப்பழ கலவையுடன் உலர்ந்த திராட்சை, முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தா அனைத்து பருப்புகளையும் சேர்த்து நன்றாக கலந்தவுடன் சலித்த மாவு கலவையை சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலக்கவும். மாவு கெட்டியாக இருப்பது போல் தெரிந்தால் காய்ச்சி ஆற வைத்த பாலை சிறிது ஊற்றி நன்றாக கலக்கவும்.

கேக் பேன் அல்லது கனமான சிறிய பாத்திரம் இருந்தால் அதில்  சிறிது  எண்ணெய் தடவி அதன்மேல்  கோதுமை மாவை தூவி  அதிகமாக உள்ள மாவை தலைகீழாக தட்டி  எடுத்துக்கொள்ளுங்கள்,  பின்னர் தயார் செய்து வைத்த  மாவு கலவையை அதில் ஊற்றி குக்கர் அல்லது மைக்ரோவேவில்  வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

மைக்ரோவேவில் வேகவைத்தால் 180 டிகிரி செல்சியஸில் 45 நிமிடம் முதல் 50 நிமிடம் எடுத்துக் கொள்ளும். 

குக்கர் அல்லது அடி கனமான பாத்திரத்தில்  மிதமான  தீயில் வேகவைத்தால் 25 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் ஆகும்.  இந்த நேரம் பாத்திரம் மற்றும் தீயின் அளவைப் பொறுத்து மாறுபடும்.  20 நிமிடம்  கழித்து குக்கரை நீக்கி ஒரு சிறிய குச்சி அல்லது கத்தியை வைத்து குத்திப் பாருங்கள் அதில் மாவு ஒட்டாமல் வந்தால் கேக் தயாராகிவிட்டது என்று எண்ணிக் கொள்ளலாம்.  மாவு குச்சியில் ஓட்டினால் இன்னும் சிறிது நேரம் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்போது சுவையான வாழைப்பழ கேக் தயாராகிவிட்டது. கேக் ஆறியதும் பேனிலிருந்து எடுத்து நறுக்கி பரிமாறவும். இதை சூடான காபி மற்றும் டீயுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு

 கோதுமை மாவுக்கு பதிலாக மைதா மாவையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 சூரியகாந்தி எண்ணெய்க்கு பதிலாக உருக்கிய வெண்ணையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உலர்ந்த பருப்புக்கு பதிலாக  சாக்லேட் சிப்ஸ் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை சேர்த்து செய்யலாம், அப்படி சேர்த்தால் நிறம் வித்தியாசமாகும், அழகாகவும் இருக்கும்.

நீங்கள் பயன்படுத்தும்  பாத்திரம் மற்றும் மைக்ரோவேவை பொருத்து நேரம் மாறுபடும்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore