Rahu Ketu Peyarchi Rasi Palan viruchigam in Tamil – ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் விருச்சிகம்

On 2022-03-17 2:48:13

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan viruchigam

ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் விருச்சிகம் - Rahu Ketu Peyarchi Rasi Palan for viruchigam in Tamil

விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அதிக புத்திக்கூர்மையும், சமூகப் பற்றும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 1, 7-ல் சஞ்சரித்த சர்ப கிரகங்கள் திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). ராகு 6-ஆம் வீட்டிலும், கேது 12-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பது சிறப்பான அமைப்பாகும். உடல் நிலை சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிலும் நிதானத்துடன் செயல்பட்டு இருக்கும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். சமுதாயத்தில் கௌரவ பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கடந்த கால கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறைந்து கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நெருங்கியவர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு திருப்திகரமாக அமைந்து ஏற்றங்களை அடைவீர்கள். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்புகள் ஏற்படும்.

ராகு 6-ல் சஞ்சரிப்பது மட்டுமில்லாமல் ஒரு ராசியில் நீண்ட நாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு 17-01-2023 முடிய 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிலும் தைரியத்துடன் செயல்படும் திறன், உங்களின் நீண்ட நாளைய கனவுகள் நிறைவேறும் வாய்ப்புகள் வரும் நாட்களில் ஏற்படும்.

உங்கள் ராசிக்கு 2, 5-க்கு அதிபதியான குரு பஞ்சம ஸ்தானமான 5-ல் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை சஞ்சாரம் செய்வது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கும் அமைப்பாகும். பண வரவுகள் சிறப்பாக இருந்து கடன்கள் யாவும் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சுப காரியங்கள் யாவும் தடையின்றி கைகூடும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு உறுதுணையாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வர். உயர் அதிகாரிகளின் ஆதரவும், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மனநிம்மதியை ஏற்படுத்தும். உங்களுக்கு இருந்த நீண்ட நாள் நெருக்கடிகள் விலகி திறமைகளை வெளிகாட்டுவதற்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

சனி வரும் 17-01-2023 முதல் 4-ல் சஞ்சரிக்க உள்ளதால் அர்த்தாஷ்டம சனி நடைபெற இருப்பதாலும், குரு வரும் 22-04-2023 முதல் உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதாலும் இக்காலத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடி, தேவையற்ற சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. ராகு 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் பலம் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் இருந்த சொல்ல முடியாத பிரச்சினைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாகவும் தைரியத்துடனும் செயல்படுவீர்கள். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். கணவன்- மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவதால் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவுகள் மன மகிழ்ச்சி அளிக்கும். பண வரவுகள் தாராளமாக இருந்து குடும்பத் தேவைகள் யாவும் தடையின்றி பூர்த்தியாகும். நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். பூமி, மனை வாங்கும் யோகம் வரும் நாட்களில் உண்டு.

உத்தியோகம்

பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களை அடைய முடியும். எடுக்கும் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடியும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வரும் நாட்களில் உயர்வான நிலையை எட்ட முடியும். சக நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கடந்த கால நெருக்கடிகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வம்பு, வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்து மன நிம்மதி அடைவீர்கள். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவதால் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். வெளியூர் தொடர்புகளால் மேன்மைகளை அடைவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சரளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சாதகமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை கையாண்டு நல்ல லாபத்தை அடைவீர்கள். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பல பொது நல காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

அரசியல்

பெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்ததை விட அதிகமான அனுகூலங்கள் கிடைக்கும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்க்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் அனைவரையும் திருப்திபடுத்த முடியும். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் பண வரவுகள் சிறப்பாக அமையும். நீர் வரத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடு வரும் நாட்களில் குறையும். நவீன முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி, நிலம், மனை போன்றவற்றை வாங்கும் வாய்ப்புகள் உண்டு. உறவினர்களின் ஆதரவு மனநிம்மதியை தரும்.

கலைஞர்கள்

எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று உங்களின் நடிப்புத் திறன் வெளிச்சத்திற்கு வரும். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுகளால் மனநிறைவு உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. புதிய முதலீடுகளில் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் சற்று குறையும். இசைத்துறையில் உள்ளவர்களுக்கும் சாதிக்க கூடிய அளவிற்கு வாய்ப்புகள் தேடி வரும்.

பெண்கள்

உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மணமாகதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமணம் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி, உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.

மாணவ மாணவியர்

உங்களுக்கு இருந்த மந்த நிலை முழுமையாக விலகி கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெற முடியும். போட்டி தேர்வுகளில் சிறப்பான பரிசுகளை பெறுவீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். மேற் கல்விக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், குரு 5-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்து எல்லாம் நடக்கும். கேது 12-ல் குரு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் வெளியூர் பயணங்கள் மூலம் நல்லது நடக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். பண வரவுகள் தாராளமாக இருக்கும் என்பதால் உங்கள் கடன் பிரச்சினைகள் குறையும். நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் பணி சுமை குறைந்து நிம்மதியுடன் பணி புரிய முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் மூலம் நல்ல செய்தி வரும். எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைய முடியும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

ராகு பரணி நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதும், சனி 3-ல் குரு 5-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்கள் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கூட்டு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பயன்படுத்தி வளர்ச்சி அடைய முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினைகளும் ஏற்படாது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் கிடைத்து உங்கள் வாழக்கை தரம் உயரும். உங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதாலும், 3-ல் சனி, 5-ல் குரு சஞ்சரிப்பதாலும் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகள் நடக்கும். 12-ல் கேது ராகு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் தூர பயணங்கள் மூலம் அலைச்சல் இருந்தாலும் அதன் மூலம் அனுகூலம் கிடைக்கும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உடல் நிலை சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். கடந்த கால மருத்துவ செலவுகள் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். பொன் பொருள் சேரும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். செய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். வேலையாட்கள் உதவியாக இருப்பதால் பெரிய ஆடரை கூட எளிதில் கையாண்டு நல்ல லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் மறைந்து நிம்மதியுடன் தொழில் செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைபளு குறைவது மட்டுமில்லாமல் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி வரும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதாலும், வரும் 22-04-2023 முடிய குரு 5-ல் சஞ்சரிப்பதாலும் பொருளாதார ரீதியாக வளமான பலன்கள் கிடைக்கும். சனி 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். வண்டி வாகனங்கள் மூலம் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சில நேரங்களில் அவர்களே தேவையற்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்துவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவதோடு எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். தொழிலாளர்களும் கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவார்கள். பயணங்களால் சாதகப்பலன் அமையும். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். எதிர்பார்க்கும் இட மாற்றம் கிடைக்கும். உங்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். உங்கள் மீது இருந்த வீண் அவபெயர் விலகும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதால் உங்கள் உழைப்பால் நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 6-ல் குரு, 12-ல் கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் பண விஷயத்தில் நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. அலைச்சல் காரணமாக உடல் அசதி உண்டாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகி குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலன்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று தாமத நிலை உண்டாகும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்தே லாபத்தினைப் பெற முடியும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்க பெறும் என்றாலும் தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்ளவும்.

Click the links to get ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore