மனித கம்ப்யூட்டர் – கேத்தரின் ஜான்சன்

Updated On

கணினிகளின் வரவுக்கு முன்னர் நாசாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த மனிதக் கணினிகளில் ஒருவர் கேத்தரின்!

“நாசாவில் அவர் பணியாற்றிய 33 ஆண்டுகளில் இனம் மற்றும் பாலினத் தடைகளை உடைத்து, அனைவருமே கணிதம் மற்றும் அறிவியலில் தேர்ந்து நிலவினை அடைய முடியும் என்கிற நம்பிக்கையைப் பல தலைமுறை இளைஞர்களிடம் உருவாக்கியிருக்கிறார்” – அமெரிக்கக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான அதிபர் விருது கேத்தரின் ஜான்சனுக்கு வழங்கப்படும் போது அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா கூறிய வரிகள் இவை.

அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியாவில் 1918-ம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆப்பிரிக்க வம்சாவளி குடும்பத்தில் பிறந்தவர் கேத்தரின் ஜான்சன். 14 வயதில் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தேர்ச்சி பெற்றவர்; மேற்கு விர்ஜினியாவில் கறுப்பர்களுக்கென்றே உள்ள ஒரு பிரத்தியேகக் கல்லூரியில் சேர்ந்து கணிதம் படித்தார். சிறு வயது முதலே கணிதத்தில் ஆர்வம் மிகுந்து காணப்பட்டார். அப்போது அமெரிக்காவில் நிலவிய நிறவெறி காரணமாக, ஆப்பிரிக்கர்களுக்கு வெள்ளை அமெரிக்கர்கள் படிக்கிற கல்லூரிகளில் இடம் கொடுக்கப்படவில்லை.

பின்னர் 1938-ம் ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளை மாணவர்களுக்குக் கல்வி வழங்கும் நிறுவனங்களை நடத்தும் மாகாணங்கள் கறுப்பின மாணவர்களுக்கும் கல்வி வழங்க வேண்டும் என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை அளித்திருந்தது. இதன்மூலம் மூன்று கறுப்பின மாணவர்களுக்கு அப்போது மேற்கு விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் இணைகிற வாய்ப்பு கிடைத்தது. அதில் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க மாணவியாக இணைந்தவர் கேத்தரின்.

நாசா வேலை

சிறிது காலம் ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருந்தவருக்குத் திருப்பு முனையாக அமைந்தது நாசா பணி. நாசாவின் (1958-ம் ஆண்டுதான் நாசா எனப் பெயர் பெற்றது) முன்னோடி விண்வெளி ஆய்வு அமைப்பில் 1953-ம் ஆண்டு கணிதவியலாளர்கள் பணியமர்த்தப்பட்டார். அக்காலத்தில் கணினிகளின் வளர்ச்சி இல்லாததால் மனிதர்களாளே கடினமான கணக்குகள் எல்லாம் தயார் செய்யப்பட்டன. அவர்கள் `மனிதக் கணினிகள்’ என்றே அழைக்கப்பட்டனர். சில நாள்கள் வரை அப்பணியில் ஈடுபட்டு வந்தவர் அதன் பிறகு லாங்க்லே விமான ஆராய்ச்சி பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அப்பொழுது அமெரிக்கர்கள், ஆப்பிரிக்கர்கள் எனத் தனித்தனியே பணி அறை, சாப்பிடும் அறை, கழிவறை எனப் பாகுபாடு பின்பற்றப்படுகிற நடைமுறை இருந்தது. கறுப்பர்கள் மட்டுமே உள்ள துறையில் டோரோத்தி வாகன் என்கிற கறுப்பினப் பெண்மணிக்குக் கீழ் பணி செய்யத் தொடங்கினார். ஆனால், இவை கேத்தரின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் இடையூறாக இருந்திருக்கவில்லை. வெகு விரைவாக ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த துறைகளில் எல்லாம் கேத்தரின் தன்னுடைய முத்திரையைப் பதித்தார்.

பின்னாளில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார், “நான் அங்குப் பாகுபாட்டை உணரவில்லை; ஏனென்றால் அங்குள்ள அனைவருமே ஆய்வுப் பணிகளில் மட்டுமே ஈடுபட்டிருந்தனர். எனக்கென ஒரு இலக்கு இருந்தது. அதை நோக்கி நான் பணி செய்துகொண்டிருந்தேன். எனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செய்ய வேண்டியது முக்கியமானதாக இருந்தது. நான் எந்தப் பாகுபாட்டையும் உணரவில்லை. அங்குப் பாகுபாடு நிலவியது நான் அறிந்திருந்தாலும், அதற்கு நான் பெரிதும் மதிப்பு கொடுக்கவில்லை” என்றார்.

பனிப்போர் காலம்

அமெரிக்க ஒன்றியத்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் பனிப்போர் உச்சத்தில் நிலவிய காலகட்டத்தில் தான் கேத்தரின் நாசாவில் பணிபுரிந்து வந்தார். ஒவ்வொரு துறையிலும் போட்டி போட்டுக்கொண்டு இருவரும் செயல்பட்டு வந்தவர். 1957-ம் ஆண்டு வரலாற்றில் முக்கியமான சம்பவம் நடைபெற்றது. அது கேத்தரின் வாழ்க்கையிலும் திருப்பு முனையாக அமைந்தது. ரஷ்யா உலகின் முதல் நாடாக தன்னுடைய செயற்கைக் கோளான ஸ்புட்நிக் 1-ஐ விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியது. இந்தச் சம்பவம் அமெரிக்காவுக்குக் கடும் போட்டியை ஏற்படுத்தியது. நாசாவின் அடுத்தடுத்த விண்வெளி திட்டங்களிலெல்லாம் கேத்தரின் மிக முக்கியப் பங்காற்றினார்.

முதல் அமெரிக்கராக ஆலன் ஹேபர்டை விண்வெளியில் தறையிறக்கிய திட்டத்தில் முக்கிய மூளையாகச் செயல்பட்டார். உலகைச் சுற்றி வந்த முதல் அமெரிக்கர் ஜான் க்ளேன் தன்னுடைய பயணத்தைத் தொடங்கும் முன்பாக `கேத்தரின் ஜான்சன் இயந்திரங்களைப் பரிசோதித்து சரியெனச் சொன்ன பிறகுதான் கிளம்புவதாகக் கூறியிருக்கிறார்’. அந்தத் திட்டமும் வெற்றிகரமாக அமைந்தது.

முதல் மனிதனை நிலவுக்கு அனுப்பிய அப்போலா 11 திட்டத்திலும் மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறார். நாசாவின் மூன்றாவது விண்வெளிப் பயணமான அப்போலோ 13 சில கோளாறுகள் காரணமாக தோல்வியடைந்ததை அடுத்து விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாகத் தரையிறக்குவதில் மூளையாகச் செயல்பட்டார். “அவர்கள் நிலவுக்குச் சென்றார்கள். நான் அதற்கான பாதையைக் கணக்கிட்டுக் கொடுத்தேன், அது என்னுடைய பணியாக இருந்தது, நான் அதைச் சரியாகவும் சிறப்பாகவும் செய்து முடித்திருந்தேன்”. கேத்தரின் 25-க்கும் மேற்பட்ட விண்வெளி சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

அதிபர் விருது

நீண்ட காலம் கேத்தரின் ஜான்சனின் பங்கு சரியாக அங்கீகரிக்கப்படாமல் இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவால் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அதிபர் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. அப்போது பேசிய ஒபாமா, “ஜான்சன் மற்றும் அவருடைய சக மனிதக் கணினிகளின் பங்களிப்பு, அசாத்திய திறமை மற்றும் 60-களில் கறுப்பினப் பெண்ணாக இருப்பதனால் நேர்ந்த இன்னல்களை எல்லாம் கடந்து தேசத்தின் நலனுக்காக அவர்கள் செய்த பணிகள் இல்லையென்றால் நம்முடைய நாடு இன்று முற்றிலும் வேறாக இருந்திருக்கும். ஜான்சன் நம்முடைய வரலாற்றுக்கு மதிப்பிட முடியாத பங்களிப்பைச் செய்திருக்கிறார், நம்முடைய அங்கீகாரமும் மரியாதையும் அவருக்கு என்றும் உரியதாகும்” என்றார்.

விண்வெளித் துறையில் அளப்பரிய சாதனைகளைச் செய்து பின்னாளில் உலகறியப் போற்றப்பட்ட கேத்தரின் ஜான்சன், கடந்த பிப்ரவரி 24 அன்று காலமானார்.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore