ஒரு பெண் கருவுற்ற உடனே அவள் படும் ஆனந்தம் என்பது எல்லையில்லாதது. அந்த பத்து மாதங்களும் அவள் படும் கஷ்டங்கள் கூட அந்த பிஞ்சு குழந்தையின் பாத வருடலில் காணாமல் போய்விடும். ஒன்பது மாதத் தொடக்கத்திலயே கருவில் இருக்கும் குழந்தை திரும்புதல், சுற்றுதல், கை கால்களை அசைத்தல், காலால் உதைத்தல், விக்கல் எடுத்தல், நிலையை மாற்றுதல், ஏன் சில சமயங்களில் உங்கள் செல்லக் குழந்தை குட்டிக் கரணமே அடிக்கும். இப்படி தன் குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளையும் தொட்டு பார்த்து பார்த்து பூரிக்கும் ஒரு தாயின் சந்தோஷம் அளவு கடந்தது.
இப்படி பத்து மாதங்களும் வயிற்றில் வளரும் குழந்தை என்னவெல்லாம் செய்யும் என்பதைத் தான் இக்கட்டுரையில் நாம் பார்க்க போகிறோம்.
உதைத்தல்
நீங்கள் முதல் தடவையாக கருவுற்று இருந்தால் 24 வது வாரம் வரை உங்களால் குழந்தையின் உதைத்தலை உணர இயலாது. ஆனால் உங்கள் குழந்தை அசைவில் தான் இருக்கும். இதுவே மூன்றாவது அல்லது இரண்டாவது முறை கருவுற்ற தாய்மார்கள் எளிதாக சீக்கிரமாகவே குழந்தையின் அசைவை உணர்ந்து கொள்கிறார்கள்.
மறுபடியும் உதைத்தல்
குழந்தைக்கு வெளியே என்ன நடக்கிறது என்று தெரியும். சத்தம், ஒளி மற்றும் சில உணவுகள் போன்றவற்றிற்கு கூட அவர்கள் உங்களிடம் பதிலளிப்பார்கள். அவர்கள் சின்னஞ் சிறிய பெரியவர்கள். அவர்கள் உடம்பை நீட்டி நெளித்து ஓய்வெடுக்க விரும்புவார்கள். யோகா, உடற்பயிற்சி போன்றவை உங்கள் மனதை அமைதிபடுத்துவதோடு உங்கள் குழந்தையின் மனதையும் அமைதிப்படுத்தும்.
இயல்பான விஷயமா?
ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி செயல்படுவார்கள். எனவே மற்ற உறவினர்கள் நண்பர்கள், ஏன் உங்கள் மூத்த குழந்தைகளுடன் கூட ஒப்பிடாமல் இருங்கள். ஒரு நாளைக்கு சராசரியாக 15-20 தடவை குழந்தை உதைக்கும். அதே மாதிரி அதன் நேரம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். சில குழந்தை பகல் நேரத்திலும் சில குழந்தைகள் இரவு நேரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். நீங்கள் சாப்பிட்ட பிறகு இந்த செயல் இருந்தால் அமைதியாக உட்கார்ந்து உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்யுங்கள்.
கணக்கிடுதல்
இதற்கென்று எந்த வரைமுறையும் கிடையாது. தினமும் உங்கள் குழந்தையின் இயல்பான செயல்களை கவனித்து வந்தாலே போதும். உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனமாக கவனித்து வாருங்கள். அதில் எதாவது மாற்றம் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
அறிதல்
குழந்தை உதைத்தலை கணக்கிட அமைதியாக உட்கார்ந்து கவனியுங்கள். ஸ்நாக்ஸ் அல்லது குளிர்ந்த பானம் குடித்து விட்டு கால்களை மேலே தூக்கி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடுவது குழந்தையை எழச் செய்யும். அடுத்த இரண்டு மணி நேரத்தில் குறைந்தது 10 அசைவுகளை நீங்கள் கணக்கிடலாம். குழந்தை சுற்றுதல், விக்கல், உதைத்தல், தொந்தரவு செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும். இந்த செயல்கள் குறைந்தால் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
கவலை
குழந்தையின் செயல்கள் குறையும் போது எப்பொழுதும் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. குறைவான செயல்பாட்டை கண்டறிய கருத்தியல் மதிப்பீடு சோதனைகள் உள்ளன. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் குழந்தையின் செயல்பாட்டை மருத்துவர் கண்காணித்து உங்களுக்கு கூறுவார். எனவே அநாவசியமாக கவலை கொள்ளத் தேவையில்லை.
36 வாரத்துக்கு பின்
குழந்தை வளர வளர அதன் செயல்பாடுகள் மாறிக் கொண்டே இருக்கும். குழந்தை உதைப்பதை குறைத்து விட்டால் தொப்புள் கொடியுடன் விளையாடுதல் மற்றும் நீட்டித்தல் போன்ற மற்ற செயல்பாடுகளில் ஆர்வம் காட்டும்.
எதிர்கால நடத்தை
கருவில் அதிக சுறுசுறுப்பாக செயல்படும் குழந்தை எதிர்காலத்திலும் அப்படி இருப்பார்கள் என்று சில ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது எல்லா குழந்தைகளுக்கும் பொருந்தவில்லை. ஒவ்வொரு குழந்தையும் கருவில் இருக்கும் போதும் சரி வளரும் போதும் சரி மாறுபடத்தான் செய்கின்றனர்.
கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு தாய்க்கும் சவாலான விஷயம் மட்டுமல்ல சந்தோஷமான விஷயமும் கூட. எனவே இந்த பத்து மாதங்களும் உங்கள் மன அழுத்தத்தை குறைத்து உங்கள் குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளையும் உணர்ந்து மகிழுங்கள். அவர்களுடன் உரையாடுங்கள். இது தாயுக்கும் சேயுக்கும் நல்ல பந்தத்தை உருவாக்கும்.