விநாயகர் சதுர்த்தி நாளில் நிலாவை பார்க்கக் கூடாது

Updated On

விநாயகருக்கு உணவுகள் மீது அதீத பிரியம் உண்டு. பக்தர்கள் கொடுக்கும் அனைத்து பதார்த்தங்களையும் விரும்பி உண்ணுவர். பக்தர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று வகை வகையான பதார்த்தங்கள் செய்து விநாயகருக்கு படைப்பது வழக்கமாக உள்ளது.

விநாயகர் சதுர்த்தி அன்று வானில் நிலாவைப் பார்க்கக் கூடாது என்று சொல்வதற்குக் காரணம் என்ன?

ஒருநாள் அவரது பக்தர் ஒருவர் பாலகணபதிக்கு தனது வீட்டில் விதவிதமான பதார்த்தங்களைப் படைத்துள்ளார். அவரது வீட்டில் அன்று முழுக்க இருந்து அனைத்து உணவுகளையும் ருசித்து சாப்பிட்டார் விநாயகர்.
வயிறு நிறைய சாப்பிட்டு முடிக்கும் போது நள்ளிரவு ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் சாப்பிட விரும்பிய விநாயகர், மிஞ்சிய மற்ற அனைத்து உணவுகளையும் ஒரு பையில் எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்து சென்றார்.

சாப்பிட்ட களைப்பில் மெதுவாக நடந்த விநாயகர் தடுமாறி கீழே விழுந்து விட்டார். அவர் கையில் இருந்த உணவும் கீழே விழுந்துச் சிதறிவிட்டது. உடனே எழுந்து தன் மேல் படிந்த மண்ணை உதறித் தட்டிய அவர், யாரும் பார்த்தார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார். நள்ளிரவு என்பதால் ஒருவரும் விழித்திருக்கவில்லை. எனவே சிதறிய பதார்த்தங்களை எடுத்துக் கொண்டு நிமிர்ந்த விநாயகர் வானில் நிலா இருப்பதைப் பார்த்தார்.

தன்னைப் பெரிய அழகன் என்று நினைத்துக் கொள்ளும் சந்திரன், விநாயகர் தள்ளாடி நடந்து வந்து கீழே விழுந்ததையும், மண்ணில் விழுந்த உணவுகளைப் பொறுக்கி எடுத்ததையும் பார்த்து கேலியாகச் சிரித்துக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த விநாயகருக்குக் கடுமையாக கோபம் வந்துவிட்டது.
“என்னைப் பார்த்தா சிரிக்கிறாய்?” என்று ஆத்திரமாகக் கேட்டார் விநாயகர்.
உன்னுடைய பெரிய தொந்தியையும் யானை முகத்தையும் பார்த்ததால் எனக்குச் சிரிப்பு பொங்கி வந்து விட்டது. அந்தக் கால்களை அசைத்து அசைத்து நடந்து வரும் போது கீழே விழுந்து புரண்டதைப் பார்த்தால்…” என்று மீண்டும் சிரிக்கத் தொடங்கினான் சந்திரன்.

அடக்க முடியாத சினம் கொண்ட விநாயகர், “நீ செய்த தவறுக்கு இனிமேல் நீ வானில் தோன்றாமல் மறைந்து ஒழிவாய்” என சாபம் அளித்தார். அந்த காலத்தில் சந்திரன் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளிலும் முழுமையாக வானில் தோன்றி ஒளிவீசிக் கொண்டிருந்தது. விநாயகரின் சாபத்தால், தான் இனிமேல் தோன்றவே முடியாமல் போய் விடுமே என்று எண்ணினான் சந்திரன். தவறை உணர்ந்த அவன், “என் பிழை பொறுத்து மன்னிக்க வேண்டும் விநாயகப் பெருமானே!” என்று வேண்டிக்கொண்டான்.

கோபம் தணியாத விநாயகர், “உன் தவறுக்கு பாடம் கற்பிக்கிறேன். இன்னும் 15 நாட்களில் நீ மெல்லமெல்லத் தேய்ந்து முழுவதும் மறைந்து விடுவாய். அதன் பிறகு ஒருநாள் முழுக்க நீ மறைந்தே இருப்பாய். அடுத்த 15 நாட்களில் மீண்டும் முழு உருவத்தை அடைந்து ஒளிவீசுவாய். ஆனால் அதுவும் ஒரு நாள் தான்” என்று கூறினார்.
சதுர்த்தி நாளில் என்னை அவமதித்தித்ததால் உனக்கு இந்த சாபம் ஏற்பட்டது. இனிமேல் சதுர்த்தியில் உன்னைப் பார்க்கும் அனைவருக்கும் நீ கேடுகளை விளைவிப்பாய்.” என்றும் சாபம் அளித்தார்.

சதுர்த்தி என்பது வளர்பிறை நாளின் நான்காவது நாள். விநாயகரை சந்திரன் அவமதித்த நாளும் சதுர்த்தி தினம் தான். அன்று அவர் விநாயகரின் சாபத்தைப் பெறும் நிலை ஏற்பட்டது. அதனால், நான்காம் பிறை நாளில், அதாவது சதுர்த்தி அன்று யாராவது நிலாவைப் பார்த்தால் அவர்களுக்கு பிரச்னைகள் வரும் என்று சொல்கிறார்கள். ‘நான்காம் பிறையைப் பார்த்தால் நாய் படாத பாடு’ என்று சொல்வதையும் கேட்டிருப்போம். அதுவும் இதனால்தான். ஆனால், இந்த கருத்து விநாயகர் சதுர்த்திக்குப் பொருந்தாது. விநாயகர் சதுர்த்தியன்று பூஜைகளை எல்லாம் முடித்து விட்டு, அருகிலிருக்கும் ஆலயத்திற்குச் சென்று விநாயகரை வணங்கி, பின் நிலவை தரிசிக்கலாம்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore