7.4% வட்டி தரும் அரசின் மாஸ் திட்டம்!

Updated On

Senior Citizen Savings Scheme 7.4% வட்டி தரும் அரசின் மாஸ் திட்டம்! நன்மைகள் என்ன? எப்படி இணைவது!

இந்திய அரசாங்கத்தின் சிறு சேமிப்புத் திட்டங்களில், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்துக்குப் பிறகு அதிக வட்டி கொடுக்கப்படும் திட்டம் இந்த Senior Citizen Savings Scheme தான்.

இந்த திட்டத்தில் சேரும் பயனாளர்களுக்கு, தற்போது ஆண்டுக்கு 7.4 சதவிகிதம் வட்டி கொடுக்கிறார்கள். ஒவ்வொரு காலாண்டுக்கும் இந்த திட்டத்தின் வட்டி விகிதங்கள் மாறும். அரசின் திட்டம் என்பதால் நம்பி பணத்தைப் போடலாம்.

சரி, இந்த திட்டத்தில் எப்படி இணைவது? யார் எல்லாம் இணையலாம்? இந்த திட்டத்தில் இணைந்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இணைவதற்கான வழிமுறைகள் என்ன?

தகுதியானவர்கள் யார்

1. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த Senior Citizen Savings Scheme திட்டத்தில் இணைய முடியும்.

2. 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆனால் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் கூட இந்த திட்டத்தில் இணையலாம். ஆனால் அவர்கள் முறையாக superannuation அல்லது VRS விதிமுறைகள் படி ஓய்வு பெற்று இருக்க வேண்டும். இப்படி ஓய்வு பெற்றவர்கள், தங்கள் ஓய்வு கால சலுகைகளைப் பெற்று ஒரு மாத காலத்துக்குள், இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியவர்கள்

1. இந்தியாவின் பாதுகாப்புப் படைவீரர்கள் எப்போது ஓய்வு பெற்று இருந்தாலும், அவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். ஆனால் சில விதிமுறைகளை அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டுமாம். 2. வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர்கள் இந்த Senior Citizen Savings Scheme திட்டத்தில் இணைய முடியாது. அதே போல இந்து கூட்டுக் குடும்ப உறுப்பினர்களும் இந்த திட்டத்தில் சேர முடியாது.

எவ்வளவு முதலீடு செய்யலாம்

குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை இந்த Senior Citizen Savings Scheme-ல் முதலீடு செய்யலாம். முதலீடுகள் 1000-ன் மடங்குகளில் மட்டுமே செய்ய முடியும். அதாவது 2000 ரூபாய், 3000 ரூபாய், 126000 ரூபாய்,558000 ரூபாய் என்று தான் முதலீடு செய்ய முடியும். 5500 ரூபாய். 7200 ரூபாய் என முதலீடு செய்ய முடியாது.

எப்படி முதலீடு செய்யலாம் ரொக்கம் & வங்கி பணப் பரிமாற்றம்

1 லட்சம் ரூபாய் வரை இந்த Senior Citizen Savings Scheme-ல் முதலீடு செய்ய ரொக்கத்தைப் பயன்படுத்தலாம். 1 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய விரும்புபவர்கள் காசோலை (Cheque) அல்லது டிமாண்ட் டிராஃப்ட் (DD) வழியாகத் தான் பணத்தைச் செலுத்த வேண்டும்.

Senior Citizen Savings Scheme மெச்சூரிட்டி & நீட்டிப்பு

Senior Citizen Savings Scheme-ல் முதலீடு செய்யும் பணம் 5 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும். முதலீடு செய்த தேதியில் இருந்து 5 வருடங்கள் கணக்கிடப்படும். இதே திட்டத்தில் மேற்கொண்டு தொடர விரும்புபவர்கள், இந்த திட்டத்தில் போட்ட பணம் முதிர்ச்சி அடைந்த ஒரு வருடத்துக்குள், மீண்டும் 3 வருடங்களுக்கு நீட்டிப்பு செய்து கொள்ளலாம். இந்த நீட்டிப்பு வசதி, ஒரே ஒரு முறை மட்டுமே செய்ய முடியும்.

டெபாசிட் செய்தவரின் மரணம்

ஒருவேளை Senior Citizen Savings Scheme-ல் டெபாசிட் செய்தவர் மரணித்துவிட்டால், டெபாசிட் முதிர்ச்சி அடைந்ததாகச் சொல்லி பணத்தை நாமினி அல்லது சட்ட ரீதியிலான வாரிசுகளிடம் கொடுக்கப்படும். ஒருவேளை முதிர்ச்சி அடைந்த பின்பும், க்ளெய்ம் செய்யத் தவறி இருந்தால், நாமினி அல்லது சட்ட ரீதியிலான வாரிசுகள், முறையாக ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, டெபாசிட் செய்தவரின் இறப்புச் சான்றுகளோடு சமர்பித்தால், கணக்கு குளோஸ் செய்து பணத்தைக் கொடுப்பார்கள்.

வரிச் சலுகைகள் என்ன

வருமான வரிச் சட்டப் பிரிவு 80C-ன் கீழ், 1.5 லட்சம் ரூபாயை முதலீடு செய்வதை, வருமான வரித் துறையிடம் கணக்கு காட்டி வருமான வரிக் கழிவு பெறலாம். Senior Citizen Savings Scheme-ன் வட்டி வருமானத்துக்கு வருமான வரி உண்டு. ஆண்டுக்கு 50,000 ரூபாய்க்கு மேல் வட்டி வருகிறது என்றால் டிடிஎஸ் பிடித்தம் வேறு செய்து கொள்வார்கள்.

வட்டி வருமானம் எப்படி வரும்?

இந்த திட்டத்தில் முதலீடு செய்து இருந்த பணத்துக்கான வட்டியை, ஒரு முழு ஆண்டுக்கு கணக்கிட்டு, ஒவ்வொரு ஆண்டும், நாம் எங்கு இந்த Senior Citizen Savings Scheme-ல் சேர்ந்து இருக்கிறோமோ, அதே வங்கி அல்லது அஞ்சலகங்களில் இருக்கும் நம் சேமிப்புக் கணக்குக்கே, வட்டி பணம் வந்து சேர்ந்துவிடும்.

ஜாயிண்ட் அக்கவுண்டாக தொடங்கலாமா

ஆம், தொடங்கலாம். ஆனால் கணவன் மனைவி மட்டுமே இணைந்து, Senior Citizen Savings Scheme திட்டத்தில் ஜாயிண்ட் அக்கவுண்டைத் தொடங்க முடியும். மற்றவர்களோடு இணைந்து ஜாயிண்ட் அக்கவுண்டைத் திறக்க முடியாது. அதே போல ஒன்றுக்கு மேற்பட்டவர்களை நாமினிகளாக குறிப்பிட முடியும். இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் போதே, நாமினிகளின் விவரங்களை தெளிவாகக் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

எப்படி சேர்வது

  • இந்தியாவின் அஞ்சலகங்கள், பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள்… இந்த Senior Citizen Savings Scheme-மை வழங்குகின்றன. குறிப்பாக இந்த திட்டத்தை ஆன்லைனில் திறக்க முடியது. விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து கைப்பட பூர்த்தி செய்து அஞ்சலகங்கள் அல்லது வங்கியில் சமர்பிக்க வேண்டும்.திட்டத்தை வழங்கும் வங்கிகள் பட்டியல்

    Allahabad Bank

  • Andhra bank
  • State Bank of India
  • Bank of Maharashtra
  • Bank of Baroda
  • Bank of India
  • Corporation Bank
  • Canara Bank
  • Central Bank of India
  • Dena Bank
  • Syndicate Bank
  • UCO Bank
  • Union Bank of India
  • Vijaya Bank
  • IDBI Bank
  • Indian Bank
  • Indian Overseas Bank
  • Punjab National Bank
  • United Bank of India
  • ICICI Bank…

என பல வங்கிகள் இந்த திட்டத்தைவழங்குகின்றன.

தேவையான டாக்குமெண்ட்கள்

1. பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம்… போன்ற அடையாளச் சான்றுகளில் ஒன்று.

2. தற்போது வசிக்கும் விலாசத்துடன் வங்கி அல்லது அஞ்சலக பாஸ் புத்தகம் அல்லது ஸ்டேட்மெண்ட், பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, மின்வாரிய ரசீதுகள், ஆதார்… போன்ற முகவரிச் சான்றுகளில் ஒன்று.

3. முதன்மை விண்ணப்பதாரரின் கணவன், மனைவி, அப்பா, அம்மா பெயர்

4. காசோலை (Cheque), டிமாண்ட் டிராஃப்ட் (Demand Draft)

5. நாமினி விவரங்கள் போன்றவைகள் இருந்தால் போது சட்டென Senior Citizen Savings Scheme- இணைந்துவிடலாம்.

முதிர்ச்சி அடைவதற்கு முன்பே பணத்தை எடுக்க முடியுமா?

முடியும். இந்த திட்டத்தில் முதலீடு செய்து 2 வருடங்களுக்குள் பணத்தை வெளியே எடுக்க வேண்டும் என்றால், மொத்த டெபாசிட் பணத்தில் 1.5 % அபராதமாகச் செலுத்த வேண்டி இருக்கும். இதுவே 2 வருடங்களுக்கு மேல் ஆனால் 5 வருடங்களுக்குள், டெபாசிட் செய்த பணத்தை வெளியே எடுக்க வேண்டும் என்றால், டெபாசிட் செய்த மொத்த பணத்தில் 1 %-த்தை அபராதமாகச் செலுத்த வேண்டி இருக்கும்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore