உங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி பூஜை இப்படி செய்தால் கோடி புண்ணியம் கிட்டும்

Updated On

இந்து மதத்தின் புனித நூலான பகவத் கீதையை அருளிய ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அவதரித்த தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழகத்தில் ஆகஸ்ட் 11ம் தேதியான இன்றும்,  வடமாநிலங்களில் ஆகஸ்ட் 12ம் தேதியும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி என்றாலே நம் நினைவுக்கு வருவது, குட்டி கிருஷ்ணனும், குட்டி ராதையும் தான். அதோடு, குழந்தைகளுக்கு குட்டி கிருஷ்ணரைப் போல வேடமிடுவது, அவரை வீட்டுக்கு அழைப்பது போல பாத சுவடுகள் போடுவது போன்ற நிகழ்வுகள் தான்.

அதை தவிர வீட்டில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி எப்படி கொண்டாடுவது, விரதம், பூஜைகள் எப்படி செய்வது என்பதை இங்கு பார்ப்போம்…

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் பௌர்ணமி தினத்திற்கு பின்னர் வரும் அஷ்டமி திதியை கிருஷ்ண ஜெயந்தி என கொண்டாடப்படுகின்றது.

விரதம் இருத்தல்:


எப்போதும் விரதம் இருப்பதைப் போல கிருஷ்ண ஜெயந்திக்கு விரதம் இருந்தால் பல விஷேச பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள் முன்னோர்கள்…இந்த நாளில் காலையில் எழுந்து நீராடி, திலகம் அணிந்து கிருஷ்ணரை வழிபட வேண்டும்.
இந்த தினத்தில் மூன்றே முக்கால் நாளிகையாவது (ஒரு நாளிகை 24 நிமிடங்கள்) விரதம் இருப்பது நல்லது. இதனால் நாம் மூன்று பிறவிகளில் செய்த பாவங்கள் தீரும். மழலைச் செல்வம், குறையாத செல்வங்கள் போன்ற வரங்கள் தருவார்.விரதத்தின் போது பழங்கள், பழச்சாறுகள் எடுத்துக் கொள்ளலாம். அப்படி முடியாதவர்கள் அரிசியால் செய்ததைத் தவிர வேறு ஏதேனும் உணவை உண்ணலாம்.

எப்படி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவது?


கிருஷ்ணர் பிறந்த போது மூவர் மட்டும் விழித்திருந்ததாகக் கூறப்படுகிறது. வசுதேவர்- தேவகி மற்றும் சந்திர பகவான். இதனால் கிருஷ்ண ஜெயந்தி பூஜையான சூரியன் மறைந்த பின்னர், மாலை நேரத்தில் செய்வது சிறந்தது.

பூஜிப்பதற்காக கிருஷ்ணனின் புகைப்படம் அல்லது விக்கிரகம், சிலை ஏதேனும் ஒன்றை பூஜை செய்வதற்கு முன்னர் நன்கு சுத்தம் செய்து சந்தனம், குங்கும திலகம் இடவும். பூஜிக்கு இடத்தில் ஒரு பலகை வைத்து அதன் மீது வைக்கவும்.

முடிந்தால் நீங்களே களிமண்ணால் கிருஷ்ணர் சிலையை செய்து வழிபடுவது சிறந்தது.

பூஜை தொடங்கு வதற்கு முன்னர் கிருஷ்ணருக்கு முன் ஒரு வாழை இலையைப் போட்டு அதன் மீது சிறிது அரிசியை பரப்பி, அதன் மீது ஒரு வெண்கல குடம் நிறைய நீருடன் வைத்து, அதன் மீது மாவிலை வைத்து, தேங்காயை கலசம் போல வைக்கவும்.

கலசத்தின் வலது புறம் மஞ்சளால் பிள்ளையாரைப் பிடித்து வைக்கவும். பின்னர் அந்த கலசத்திற்கும் பிள்ளையாருக்கும் திலகம் இடவும், பூக்கள், மாலைகள் இடவும்.

பலகாரம்:

கிருஷ்ணருக்கு பிடித்த சீடை, முருக்கு அல்லது உங்களால் செய்ய முடிந்த இனிப்பு வகைகளும், நாவல் பழங்கள், விளாம்பழம் உள்ளிட்டவற்றைவைத்து பூஜையை தொடங்கலாம். பூஜை தொடங்குவதற்கு முன், கிருஷ்ணருக்கு பிடித்த நெய்வேத்தியங்கள் வைத்து வணங்கவும். குறைந்தது சிறிது வெண்ணெய்யும், அவல் வைத்தல் நல்லது.

கிருஷ்ண பாதம்:


உங்கள் வீட்டில் குட்டி குழந்தைகள் இருந்தால், அவர்கள் பாதங்களில் அரிசி மாவால் கிருஷ்ண பாத சுவடு வைக்கலாம், அல்லது நம், கைகளால் கிருஷ்ண பாதங்களை வெளியிலிருந்து, வீட்டின் உள் நோக்கி வருவது போல சுவடு பதிக்கவும்.

பூஜை ;


பூஜை தொடங்குவதற்கு முன் நெய் விளக்கேற்றி அதன் முன் பூஜை பொருட்களைவைத்து பிள்ளையாரையும், கிருஷ்ணரையும் வணங்கி பூஜையை தொடங்கலாம். தடை ஏதும் இல்லாமல் பூஜை நிறைவேறவும்.கிருஷ்ணரை மனதில் நினைத்துக் கொண்டு கிருஷ்ண துதிகள், மந்திரங்களை சொல்வது நல்லது.
கலசத்தையும், கிருஷ்ணரையும் வணங்கி தீப, தூப ஆராதனை செய்ய வேண்டும். கிருஷ்ண துதி செய்யும் போது மலர்களை கிருஷ்ணர் மீது தூவவும்.குறைந்தது கிருஷ்ணர், ராதைக்கான காயத்திரி மந்திரமாவது கூறுங்கள்..

கிருஷ்ணர் காயத்ரி மந்திரம் :

ஓம் தேவகிநந்தனாய வித்மஹே,
வாசுதேவாய தீமஹி,
தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்.
ராதாவிற்கான காயத்ரி மந்திரம் :

ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே,
கிருஷ்ணப்ரியாயே தீமஹி,
தந்நோ ராதா ப்ரசோதயாத்.இதை உச்சரித்து கிருஷ்ணரை வழிபாடு செய்யலாம்.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore