வெள்ளையாகணுமா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க

Updated On

ஒருவரது சருமம் உட்புறத்தில் ஆரோக்கியமாக இருந்தால், தானாக சருமம் வெளியே பிரகாசமாகவும், அழகாகவும், வெள்ளையாகவும் காட்சி அளிக்கும். ஆனால் பல்வேறு காரணிகளான மாசுபாடு, அதிகளவு வெயிலில் சுற்றுவது, அலுவலக வேலைச் சுமை மற்றும் குடும்ப வாழ்க்கையில் உள்ள மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் போன்றவை சருமத்தைப் பாதித்து, அதன் பொலிவை சீரழிக்கின்றன.

ஆனால் சரியான மற்றும் ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவதன் மூலம், சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ள முடியும். அதோடு சருமத்திற்கு முறையான பராமரிப்புக்களைக் கொடுத்து வர வேண்டியது அவசியம். உங்களுக்கு சருமத்தை வெள்ளையாக்குவதற்கு எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

அவகேடோ

அவகேடோவில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இது சருமத்தில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும். மேலும் சருமத்தை வறட்சியடையாமல் மற்றும் சரும சுருக்கம், முகப்பரு, பொலிவிழந்து காணப்படும் சருமம் போன்றவற்றையும் தடுக்கும். அவகேடோ சூப்பர் உணவுகளுள் ஒன்று என்பதால், இதை சாப்பிட்டால் ஒருவரது சரும ஆரோக்கியம் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமும் மேம்படும். எனவே உங்களது அன்றாட டயட்டில் இந்த பழத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கைக்குத்தல் அரிசி

கைக்குத்தல் அரிசியில் மக்னீசியம் அதிகம் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இவை சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும். குறிப்பாக இதில் உள்ள புரோட்டீன், பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்யும். மேலும் இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் சீராமைடுகள், சருமத்தில் நீர்ச்சத்தை தக்க வைத்து, சருமத்தை வறட்சியடையாமல் வைத்துக் கொள்ளும்.

கேரட்

கேரட் சருமத்திற்கு மிகவும் நல்லது. இதில் பீட்டா-கரோட்டீன், வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை ஏராளமாக உள்ளது. கேரட்டை ஒருவர் தினமும் சாப்பிட்டு வந்தால், அது உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ளும். மேலும் இது சருமத்திற்கு வெயிலில் இருந்து பாதுகாப்பு அளித்து, விரைவில் முதுமைத் தோற்றம் பெறுவதைத் தடுக்கும்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தை ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து பாதுகாப்பு அளித்து, சருமத்திற்கு மென்மைத்தன்மை மற்றும் இளமைத்தன்மையை அளிக்கும். டார்க் சாக்லேட் சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதா கதிர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும். மேலும் ஒருவர் இந்த சாக்லேட்டை சாப்பிட்டு வந்தால், சரும பொலிவு அதிகரித்து அழகாக காணப்படலாம்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளை ஒருவர் அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், சரும பொலிவு மேம்படும். இந்த வகை காய்கறிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, பார்ஸ்லி, ப்ராக்கோலி, லெட்யூஸ், வெந்தய கீரை, கொத்தமல்லி போன்றவற்றை உணவில் சற்று அதிகம் சேர்த்து வாருங்கள். இது பொலிவிழந்து காணப்படும் சருமத்தை பொலிவோடு காட்டும்.

முட்டைகள்

முட்டையில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ளது மற்றும் இது சருமத்தை மென்மையாகவும், முதுமைத் தோற்றத்திற்கான அறிகுறிகளின்றியும் வைத்துக் கொள்ளும். முட்டையில் உள்ள ஜிங்க் சத்து மற்றும் மஞ்சள் கருவில் உள்ள பயோடின், சரும செல்களுக்கு ஊட்டமளித்து, சருமத்தை பிரகாசமாக காட்டும். முக்கியமாக இதில் உள்ள வைட்டமின் ஏ, பாதிக்கப்பட்ட செல்களை சரிசெய்வதோடு, சருமத்தை இளமையாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ளும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ உடல் எடையைக் குறைக்க மட்டும் தான் உதவும் என்று நினைத்தால், அது தவறு. ஒருவரது அழகை மேம்படுத்தவும் க்ரீன் டீ உதவியாக இருக்கும். முக்கியமாக இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் இருந்து அனைத்து விதமான ப்ரீ-ராடிக்கல்களையும் வெளியேற்றும். இதன் விளைவாக சருமத்தின் முதுமைத் தோற்றம் தடுக்கப்படும். அதோடு பருக்கள் வருவதும் தடுக்கப்படும்.

ஆரோக்கியமான கொழுப்புக்கள்

அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை ஒருவர் உட்கொண்டு வந்தால், அது சரும பிரச்சனைகளான முகப்பரு, தோல் உரிந்து அசிங்கமாக காணப்படுவது, அழற்சி போன்றவற்றைத் தடுக்கும். இத்தகைய ஆரோக்கியமான கொழுப்புக்கள் நட்ஸ்கள், மீன்கள் போன்றவற்றில் அதிகம் உள்ளது. ஆகவே நீங்கள் அழகாகவும், வெள்ளையாகவும் காட்சியளிக்க நினைத்தால், இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.

ரெட் ஒயின்

ரெட் ஒயின் சருமத்தின் பொலிவை தக்க வைப்பதோடு, இளமையிலேயே முதுமைத் தோற்றம் பெறுவதைத் தடுக்கும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். எனவே அழகாக ஜொலிக்க நினைத்தால், இந்த பானத்தைக் குடியுங்கள்.

தண்ணீர்

தண்ணீர் சருமத்திற்கு மிகவும் நல்லது. ஒருவர் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க நாள் முழுவதும் போதுமான அளவு நீரைக் குடிக்க வேண்டும். இதனால் உடல் வறட்சி தடுக்கப்படுவதோடு, உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கும். ஆகவே உங்கள் அழகை அதிகரிக்க நினைத்தால், எப்போதும் தண்ணீரை அதிகம் குடியுங்கள்.

 திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore