எலுமிச்சை என்றதும், அதன் புளிப்புச்சுவைதான் நம் கண்முன் வந்து நிற்கும். ஆனால், அதன் பலன்கள் அதிகம் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.
நம் உடலானது 60 சதவிகிதம் தண்ணீரால் உருவாக்கப்பட்டது. ஆனால், நாம் அதைச் சரியாகப் பாதுகாத்துக்கொள்ளும் அளவுக்கு தண்ணீர் அருந்துவதில்லை. இதைச் சரி செய்யவே, தினமும் காலையில் நாம் குடிக்கும் தண்ணீருடன் எலுமிச்சையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். இதனால், உடலில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி பெறுவதுடன், உடலுக்கு வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை கிடைக்கிறது. அத்துடன் இதில் நிறைய ஆக்சிஜனேற்ற தடுப்பான்களும் (Antioxidants) நிறைந்துள்ளன. தண்ணீருடன் எலுமிச்சையை நான்கு துண்டுகளாக நறுக்கிப்போட்டாலே புளிப்புச்சுவை கலந்து, புது சுவை கொடுக்கும். இதைத்தான் `எலுமிச்சைத் தண்ணீர்’ என்று சொல்கிறார்கள்.
எளிய முறையில் செய்யக்கூடிய இந்த எலுமிச்சைத் தண்ணீரின் பலன்கள் என்னவென்று பார்ப்போம்.
ஆக்டிவ் பிரெயின்
எலுமிச்சைத் தண்ணீர் தலைவலியை குறைக்கும், மூளையில் உள்ள செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்து ஞாபகசக்தியை அதிகரிக்க உதவும். நாம் எந்த ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துகிறோமோ அதில் நன்றாக கவனம் செலுத்த உதவுகிறது.
துர்நாற்றத்தில் இருந்து விடுதலை
எலுமிச்சைத் தண்ணீர் குடித்தால், இது ஆன்டிசெப்டிக்காக செயல்பட்டு வாயில் உள்ள கெட்ட கிருமிகளை நீக்கி, துர்நாற்றத்திலிருந்து விடுவிக்கும். எப்போதும் வாயைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவும்.
இதயம், ரத்தத்தை சமநிலைப்படுத்தும்
எலுமிச்சை தண்ணீர் பருகி வந்தால் இதயக்கோளாறுகளில் இருந்து விடுபடலாம் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. எலுமிச்சையில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், அது உடலின் ரத்த அளவை சரியான அளவில் வைத்துக்கொள்ள உதவும். இதனால் ரத்த அழுத்தம் ஏற்படாது.
நுரையீரலைச் சுத்தம் செய்யும்
நுரையீரலில் படிந்துள்ள அழுக்கை அகற்றி, சுவாச மண்டலத்தை சுத்தம் செய்வதோடு தடையின்றி சுவாசிக்க உதவும்.
மிஸ்டர் க்ளீன் :
தினமும் காலை 500 மி.லி எலுமிச்சைத் தண்ணீர் அருந்தினால் செரிமானத் திறனை அதிகப்படுத்தும். அன்றைய நாள் முழுவதும் உத்வேகத்துடன் இருக்க உதவும். மேலும், உணவு செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தும், இதனால், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம். அதேபோல், கல்லீரலையும் சுத்தம் செய்து அதன் வேலைகளை செம்மையாகச் செய்ய உதவுகிறது.
சிறுநீரகக் கல்லுக்கு பை… பை…
தினமும் எலுமிச்சைத் தண்ணீர் குடித்து வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் தொற்று நோய்கள் நீங்கும்.
சருமத்துக்கு பாதுகாப்பு
எலுமிச்சைத் தண்ணீர் முகத்திலும் உடலிலும் உள்ள செல்கள் இளம் வயதில் முதிர்ச்சித் தன்மை அடைவதில் இருந்தும் சுருக்கத்தில் இருந்தும் பாதுக்காக்கும். எப்போதும் இளமையாக இருக்க உதவும். எலுமிச்சையை சருமங்களிலும் உடலிலும் தேய்த்துக்கொண்டால் பூச்சிகளின் தொந்தரவுகளைத் தவிர்க்கலாம்.
வலிக்கு மருந்து
உடலில் உள்ள மூட்டுகளில் ஏற்படும் வலிகளை நீக்கும், காய்ச்சலைக் குறைக்கும். உடலின் வெப்பத்தை சரியான அளவில் பாதுகாக்கும்.
மனதுக்கு ஆறுதல் தரும்
தினமும் காலை காபி குடிப்பதற்குப் பதிலாக மிதமான சூட்டில் எலுமிச்சைத் தண்ணீரைக் குடித்து வந்தால் மனதுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். அதோடு, நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் உதவும். ஆக, உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றத்தில் எலுமிச்சை பெரும்பங்கு ஆற்றுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, நோய்களுக்கு எதிராகப் போராட உதவுகிறது. இதிலுள்ள 4கலோரிகள் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை சரியான முறையில் வைத்துக் கொள்வதுடன் உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ வழிசெய்கிறது.