கதவு இல்லா வீடு, ஒரு அதிசய கிராமம்!!!

Updated On

வீடு கட்டும் போது நாம் முக்கியமாக கவனித்து நல்ல நாள் பார்த்து செய்வது நிலவு நிறுத்தும் செயல் ஆகும், அதற்கு காரணம் வீட்டிற்கு கதவு என்பது ஒரு முக்கியமான விஷயமாகும். வீட்டில் எதுவேண்டுமானாலும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் கதவு இல்லாமல் கட்டக்கூடாது என்று சொல்வார்கள்.
ஆனால் ஒரு கிராமத்தில் எந்த வீட்டிலும் நிலவு மற்றும் கதவு இல்லாமல் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பாப்பனம் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது, அதில் எந்த ஒரு வீட்டிலும் கதவு என்பதே இல்லை என்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்று. பழைய வீடுகள் தான் அப்படி உள்ளது என்றால், புதிதாக பல லட்சம் செலவு செய்த வீட்டிற்கும் கதவுகள் என்பதே இல்லை. அதற்கு காரணம் அந்த ஊரில் உள்ள முனியப்ப சுவாமி தான் என்று கூறுகின்றனர் அந்த கிராம மக்கள். இந்த கிராமத்தில் திருட்டு என்பதே இல்லை என்று கூறுகின்றனர்.

சுமார் 500 வருடங்களுக்கு முன்பு, விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் வசித்த மக்கள், பஞ்சத்தின் காரணமாக ஊரை விட்டுச் செல்ல நேர்ந்தது. அப்போது, அதுவரை அவர்கள் வழிபட்டு வந்த முனியப்ப சுவாமி கோயிலில் இருந்து ஓர் அசரீரி, ”என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்” என்று ஒலித்ததாம். அப்படியே முனியப்ப சுவாமியையும் தங்களுடன் எடுத்துக்கொண்டு புறப்பட்ட மக்கள் வந்து சேர்ந்த இடம்தான் இந்த பாப்பனம் கிராமம்.

பாப்பனம் கிராமத்துக்கு வந்ததும் மக்கள் செய்த முதல் வேலையே, தாங்கள் வழிபட்டு வரும் முனியப்ப சுவாமிக்கு ஒரு கோயில் கட்டியதுதான். கோயிலைக் கட்டி முடித்துக் கதவு வைக்க இருந்தபோது மறுபடியும் ஓர் அசரீரி, ”என் கோயிலுக்கு கதவு வைக்க வேண்டுமானால் தங்கத்தில்தான் வைக்க வேண்டும்” என்பதாகக் கேட்டது.

கோயிலுக்குத் தங்கத்தில் கதவு வைக்க யாரால் முடியும்? எனவே, கோயிலுக்குக் கதவுகள் வைக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். சுவாமியின் கோயிலுக்கே கதவு இல்லாதபோது தங்களுடைய வீட்டுக்கு மட்டும் கதவு எதற்கு என்று நினைத்த மக்கள், தங்கள் வீடுகளுக்கும் கதவுகள் வைக்காமலேயே விட்டுவிட்டனர். இருந்தும், எந்த அசம்பாவிதமும் இங்கே நிகழாமல் காத்து வருகிறார் முனியப்பசாமி.

இந்தக் கிராமத்து மக்கள் யாரும் கட்டிலில் உறங்குவது இல்லை. மண் தரையில்தான் உறங்குகிறார்கள். வெளியூரைச் சேர்ந்தவர்கள் இந்த ஊருக்கு வந்தால், அவர்களும் தரையில்தான் உறங்கவேண்டும். குழந்தைகளுக்கு தொட்டில் கட்டும் வழக்கமும் இந்த கிராமத்தில் இல்லை.

அறுவடைக் காலத்தில், முதலில் கொஞ்சம் அறுவடை செய்து முனியப்ப சுவாமிக்குக் காணிக்கை செலுத்திய பிறகே அறுவடையைத் தொடர்கிறார்கள். இதனால் ஆண்டுக்கு ஆண்டு விளைச்சல் அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore