விநாயகர் சதுர்த்தி என்றாலே நம் நினைவுக்கு வருவது கொழுக்கட்டை தான் அதிலும் மோதகம் கொழுக்கட்டை மிகவும் சிறப்பாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும்.
வெளியே தூய வெள்ளை நிறத்திலும் உள்ளே பொன்னிறத்தில் நாவை ஊற வைக்கும் பூரணத்தை வைத்து செய்யப்படும் மோதக கொழுக்கட்டையில் ஒரு சிறப்பு இருக்கிறது.
கொழுக்கட்டையின் மேலே இருக்கும் மாவுப் பொருள் அண்டம் என்றும் இனிப்பான பூரணம் பிரம்மம் என்றும் கூறப்படுகிறது.
வாழ்க்கையை பற்றற்று கடந்து சென்றால் தான் இனிப்பான கடவுளை அடையலாம் என்ற தத்துவத்தை விளக்குவதற்காக இந்தக் கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தியன்று வைக்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று கர்ப்பிணி பெண்கள் விநாயகருக்கு வெள்ளை எருக்கம் பூவில் மாலை கோர்த்து போட்டு வழிபட்டால் நன்மை கிட்டும்.
இந்தக் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 200 கிராம்
புழுங்கல் அரிசி – 200 கிராம்
வெல்லம் – 100 கிராம்
ஏலக்காய் – 3 எண்ணம்
தேங்காய் – ½ மூடி
உப்பு – ¼ டீஸ்பூன்.
செய்முறை:
முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை வடித்துவிட்டு ஒரு உலர்ந்த துணியில் போடவும்.
10 நிமிடங்கள் கழித்து எடுத்து மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும். பின் அடிகனமான பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து வறுத்தெடுக்கவும். மாவானது ஈரப்பதம் நீங்கி உலர்ந்தவுடன் வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும். பின் வறுத்த மாவினை சல்லடையில் போட்டு சலிக்கவும். இப்போது கொழுக்கட்டை தயாரிக்க மாவு தயார்.
பின்னர் தேங்காயை துருவி, மண்டை வெல்லத்தை பொடியாக தட்டிக் கொள்ளவும். பாசிப்பயிற்றை வேகவைத்து ஏலக்காயை தூளாக்கிக் கொள்ளவும்.
தேங்காய் துருவல், மண்டை வெல்லம், மசித்த பாசிப்பயிறு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒரு சேரக் கலக்கவும். இப்போது பூரணக் கலவை தயார்.
இப்போது கொழுக்கட்டை மாவில் உப்பினைக் கலந்து சூடான தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கிளறி, மாவினை சப்பாத்தி மாவு பதத்திற்கு திரட்டவும்.
அதில் இருந்து எலுமிச்சை அளவு மாவினை எடுத்து உருட்டி கிண்ண வடிவில் செய்யவும். அதில் சிறிதளவு பூரணக் கலவையை இட்டு மூடி உருண்டையாக திரட்டவும். அப்படி இல்லையென்றால் கொழுக்கட்டை அச்சில் மாவு மற்றும் பூரணத்தை வைத்து எடுக்கவும்.
கொழுக்கட்டைகளை திரட்டும்போது பூரணக் கலவை வெளியே வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும். இவ்வாறாக எல்லா மாவினையும் கொழுக்கட்டைகளாக தயார் செய்யவும்.
பின்னர் குக்கர் அல்லது இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சூடானவுடன் அதில் கொழுகட்டைகளை போட்டு ஆவி வர நன்கு வேக வைக்க வேண்டும்.
சுவையான மணமான விநாயகர் சதுர்த்தி மோதக கொழுக்கட்டை தயார்..