நான்கு கால பூஜைகள் என்றால் என்ன?

Updated On

நான்கு ஜாம பூஜைகள் | Four Term Puja in Tamil

ஜாமம் என்றால் என்ன?

ஒரு நாளுக்கு 10 ஜாமங்கள் ஆகும். ஒரு ஜாமம் என்பது 2 மணி நேரம் 24 நிமிஷம் கொண்டது. ஆறு நாழிகைகள் கொண்டது ஒரு ஜாமம். அறுபது நாழிகைகள் கொண்டது பகல், இரவு கலந்த ஒரு நாளாகும். ஒரு நாளுக்கு 16 முகூர்த்தங்கள் உள்ளது. முகூர்த்தம் என்பது 1.30 மணி நேரமாகும். அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள நேரம் பிரம்ம முகூர்த்தம் ஆகும்.

மகா சிவராத்திரி அன்று நான்கு கால பூஜை என்பது விசேஷம். அந்த நான்கு ஜாமங்கள் என்பது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலகட்டமாகும்.

சிவ ஆலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் பங்கேற்றால் சகல தோஷங்களும் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.

மகாசிவராத்திரி அன்று பல மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகங்கள் செய்ய முடியாதவர்கள், தண்ணீரையும், வில்வ இலையையும் சர்வேஸ்வரனுக்கு சமர்பித்து, வெல்லம், பச்சரிசியையும் நெய்வேதியமாக படைத்து வணங்கி, ஓம் நமசிவாய – ஹர ஹர மஹாதேவ என்ற மந்திரத்தை உச்சரித்தாலே சகல நன்மைகளும் தருவார் சிவபெருமான் என்பது நம்பிக்கை.

நான்கு ஜாம பூஜை மற்றும் அதன் பலன்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

மகா சிவராத்திரி விரத முறை மற்றும் நன்மைகள்….

முதல் ஜாம பூஜை – ஜாதக தோஷம் நீங்கும்

நான்கு கால பூஜைகளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் ஜாம பூஜை நடைபெறும்.

முதல் ஜாமத்தில் பிரம்மதேவன், சிவனை பூஜிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் சிவபெருமானை ரிக்வேத பாராயணம் செய்து வழிபட வேண்டும். பஞ்ச கவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயறுப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபட வேண்டும்.

இதனால் ஜனன ஜாதகத்தில் உள்ள கடுமையான விதிப்பயன்கள், ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பிறவா நிலையை அடைய முடியும்.

இரண்டாம் ஜாம பூஜை – கடன் தொல்லை நீங்கும்

இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இரண்டாம் ஜாம பூஜையும்.

இந்த ஜாமத்தில் மகாவிஷ்ணு, சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். விஷ்ணுவுக்கு உகந்த திருவோணம் நட்சத்திரம், இந்த சிவராத்திரி நாளில் கூடி வருவது கோடி புண்ணியம் தரவல்லது. இந்த இரண்டாம் ஜாம வேளையில், சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்துச் சாத்துதல், துளசி அலங்காரம், வில்வ அர்ச்சனை மற்றும் பாயாசம் நிவேதனம் செய்ய வேண்டும்.

யஜூர் வேத பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும். இதனால் வறுமை, கடன் தொல்லை, சந்திர தோஷம் நீங்கும். சந்திர தசை, சந்திர புத்தி நடப்பவர்களுக்கு மன உளைச்சல் குறையும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, இரண்டாம் ஜாம பூஜையின் அபிஷேக நீரை பருக கொடுத்தால் சித்த சுத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.

மூன்றாம் ஜாம பூஜை – சகல பாவங்களும் நீங்கும்

நள்ளிரவு 12 மணி முதல் முற்பகல் 3 மணி வரை மூன்றாம் ஜாம பூஜையும் நடைபெறும்.

மூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவான அம்பாள் செய்வதாக ஐதீகம். மகா சிவராத்திரியின் உச்ச கட்ட வழிபாட்டு நேரம் இது. இதனை ‘லிங்கோத்பவ காலம்’ என்றும் கூறுவர். இரவு 11.30 மணி முதல் 1 மணி வரையான இந்த நேரத்தில்தான், அடிமுடியாக நின்ற ஈசன், மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் லிங்க ரூபமாக காட்சியளித்தார்.

மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் லிங்கோத்பவ காலத்தில் இறைவனுக்கு நெய் பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளி ஆடை அணிவித்து, மலர்களினால் அலங்கரிக்க வேண்டும். தேன் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் சாத்துதல், மல்லிகை அலங்காரம், வில்வ அர்ச்சனை, எள் அன்னம் நிவேதனம் செய்ய வேண்டும். அதோடு சாமவேத பாராயணம் மற்றும் சிவ சகஸ்ர நாமம் உச்சரிக்க வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள ‘இருநிலனாய் தீயாகி..’ எனும் பதிகத்தையும் பாராயணம் செய்யலாம். இதனால் சகல பாவங்களும் நீங்குவதோடு, எந்த தீய சக்தியும் அண்டாது சிவசக்தியின் அருள் நம்மை காக்கும்.

நான்காம் ஜாம பூஜை – அரச பதவிகள் தேடி வரும்

3 மணி முதல் அதிகாலை 6 மணி வரையான, மூன்று மணி நேரமும் நான்காம் ஜாமம் என்று பிரிக்கப்படுகிறது.

முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் நான்காவது காலத்தில் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். கருப்பஞ்சாறு அபிஷேகம், நந்தியா வட்டை மலர் சாத்துதல், அல்லி, நீலோற்பவம், நந்தியா வர்த்தம் அலங்காரம், அர்ச்சனை, சுத்தான்னம் நிவேதனம், செய்ய வேண்டும்.

பொழுது புலரும் அதிகாலை வேளையில், அதர்வண வேத பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும். இதனால் நம் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். இல்லறம் நல்லறமாகும். பட்டங்களும், பதக்கங்களும், பதவியும் தேடி வரும்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore