தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?

Updated On

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது எந்த ஒரு அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனத்தின் கையிலோ அல்லது கட்டுப்பாட்டில் உள்ள தகவலை தெரிந்து கொள்ளும் மற்றும் தகவல் பெறும் உரிமை குறிக்கும்.

அதாவது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமானது 2005-ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே, அரசாங்கத்திடம் இருக்கும் தகவல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுதான். ஜம்மு காஷ்மீரைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.

என்ன மாதிரியான தகவல்களைப் பெற முடியும்?

அரசு சார்ந்த நிறுவனங்கள் அரசு அளித்த நிதியிலிருந்து செய்யப்பட்ட செலவு கணக்கு ஆகியவற்றை கேட்டுப் பெறலாம்.

  •  ஒரு தனிநபர், அரசாங்கம் தொடர்பான எந்த ஒரு தகவலையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
  • அரசாங்கத்தின் எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டுப் பெறலாம்.
  • அரசாங்கத்தின் ஆவணங்களை தனி நபர்கள் ஆய்வு செய்யலாம்.
  • அரசாங்கத்தின் பணிகளை அவர்களால் கண்காணிக்கவும் முடியும்.
  • எந்த ஒரு அரசாங்கப் பணியினது மாதிரிகளையும் பெற்றுக் கொள்ள உரிமை இருக்கிறது.

யார் இந்த தகவல்களைத் தருவது?

மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் ஒவ்வொரு துறையும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை இந்தப் பணிக்காகவே நியமித்திருக்கிறது. பொது மக்களுக்கான தகவல் அளிக்கும் அதிகாரி (Public Information Officers) என்ற பொறுப்பில் அவர்கள் நியமிக்கப்படுள்ளனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இவர்கள் ஏற்று உரிய பதில்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்று அனுப்பி வைப்பர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்காமல் விட்டால் இந்த அத்காரிதான் பொறுப்பானவர். இதேபோல் தவறான தகவல் கொடுத்தாலும் அதற்குரிய தண்டனை அல்லது அபாரதத்துக்குரிய நபராகவும் இவரே இருப்பார். இவர் உரிய தகவல்களைத் தராத நிலையில் தகவல் அறியும் ஆணையத்திடம் ஒருவர் முறையீடு செய்யலாம்.

என்னென்ன முறையில் தகவல் பெறலாம்?

  • மத்திய மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அரசின் பொதுத்துறை மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிலிருந்து ஆவணங்கள், மற்றும் பதிவேடுகளைப் பெறலாம், பார்வையிடலாம்.
  • குறிப்பெடுக்கலாம், பக்கங்களை நகலெடுக்கலாம், ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளின் சான்றிட்ட நகல்களைப் பெறலாம்.
  • சான்றிட்ட பொருள் மாதிரிகள், உருவமாதிரிகள் பெறலாம்.
  • சி.டி., ஃப்ளாப்பிகள், டேப்புகள், வீடியோ கேசட்டுகள் அல்லது வேறு வகையான மின்னணு வழிகளில் பெறலாம், அல்லது அத்தகு மின்னணு சாதனங்களில் இருந்து அச்சு எடுத்திடலாம்.

தகவலை யாரெல்லாம் கேட்கலாம்?

இந்தியக் குடிமகன் யார் வேண்டுமானாலும் தகவலைக் கேட்டுப்பெறலாம். ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைத்து வயதினரும் கேட்கலாம். (பிரிவு–3) வெளிநாட்டினர் இச்சட்டப்படி தகவல் கேட்க முடியாது.

தகவல் கேட்கும்போது அதிகாரிகளிடம் அதற்கான காரணம் சொல்லத் தேவையில்லை. அதிகாரிகளும் மனுதாரரிடம் காரணம் கேட்கக்கூடாது (பிரிவு6(2)).

தமிழக அரசுத்துறை சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு தமிழிலேயே விண்ணப்பிக்கலாம். அதற்கு பொதுத் தகவல் அலுவலர் தமிழிலேயே பதில் தர வேண்டும். டெல்லியிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு தமிழிலும் விண்ணப்பம் அனுப்பலாம். ஆனால் டெல்லிக்கு ஆங்கிலத்தில் அனுப்புவது நல்லது.

ஆர்.டி.ஐ. விண்ணப்பிப்பது எப்படி?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதற்கு என தனியாக எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை. ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்தாலே போதும். இருப்பினும் தகவல் கோருபவரின் பெயரும் தொடர்பு முகவரியும் மிகவும் அவசியமானது. இந்த இரண்டையும் நீங்கள் கொடுக்காமல் விட்டால் உங்களால் எந்த ஒரு தகவலையும் பெற முடியாது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்போர் ரூ.10 செலுத்த வேண்டும். வங்கி வரைவோலையாகவோ, பணமோ செலுத்தி உரிய ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு பக்க ஆவணத்துக்காக ரூ.2 செலுத்த வேண்டும். இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்தை உள்ளூர் அஞ்சலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான பிரத்யேக கவுண்ட்டரில் செலுத்தலாம்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவரானால் அதற்கான விண்ணப்பம கட்டணமின்றி விண்ணப்பிக்க முடியும். ஆனால் அதற்கான சான்றிதழை வட்டாட்சியரிடம் பெற்று அதனை காண்பிக்க வேண்டும்.

எந்த அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும் என்ற முகவரி தெரியவில்லை என்றால் மாநில அரசு அலுவலகமாக இருந்தால் நமது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கலாம். அங்குள்ள அதிகாரி அவருக்கு சம்மந்தப்பட்டதல்ல என்றால் பிரிவு 6 (3)ன் படி உரிய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும்.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலட்தில் இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற முடியும். இன்னும் சில இடங்களில் கால் செண்டர்களும் கூட அமைக்கப்பட்டுள்ளன.

அதற்கான இணையதள முகவரி

 http://www.rti.gov.in

http://www.rtiindia.org

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://www.rtionline.com என்ற தளத்தைப் பார்வையிடலாம்.

ஓட்டுநர் உரிமம், சாலை மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு, பாஸ்போர்ட்டுக்கான போலீசாரின் ஆய்வுப் பணி மற்றும் ஊழல் புகார்கள் ஆகியவை குறித்தே பெரும்பாலானோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கின்றனர்.திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore