ஆடி மாத விருந்தும், புதுமண தம்பதியர் பிரிவும் ஏன்?

Updated On

ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்று சொல்வார்கள். ஆடி மாதத்தில் ஒவ்வொரு தினமும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு விழாவும் பெண்களை சுற்றியே அமைந்து இருக்கும்.

ஆடி பிறந்தாலே புதுமணத்தம்பதியர்களுக்கு தலை ஆடிக்கு கறி விருந்து கொடுப்பார்கள் பெண்ணின் பெற்றோர்கள். பெண் வீட்டிற்கு அழைத்து மாப்பிள்ளைக்கு விருந்தோடு தேங்காய் பால் கொடுப்பார்கள். விருந்து முடிந்த உடன் புது மனைவியை மாமியார் வீட்டில் விட்டு விட்டு சோகத்தோடு தன் வீட்டிற்கு திரும்பி வந்து விடுவார் மாப்பிள்ளை.

திருமணம் செய்து கொடுத்த பெண்ணை பிரித்து வைக்கிறார்கள் என்றார்கள் காரணம் இல்லாமல் இருக்குமா? எல்லாம் காரணத்தோடுதான் நடக்கிறதாம்.

ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும், கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதனால் பிறக்கும் பிள்ளைக்கும், பிரசவிக்கும் தாய்க்கும் உடல் நலம் கெடும். அதனால்தான் புதுமணத் தம்பதியர் பிரித்து வைக்கப்படுகிறார்கள் என்று பல சினிமாவில் ஆடிப்பிரிவை வசனமாக வைத்திருப்பார்கள்.

கத்திரி வெயில் காலமான சித்திரையில் தலைச்சான் குழந்தை பிறந்தால் சீரழியும் என்றும், அதோடு தகப்பனுக்கு ஆகாது என்று மூட நம்பிக்கையை பரப்பி விடுகின்றனர். இதற்காகத்தான் தம்பதிகளை பிரிக்கின்றனர் என்றும் சொல்லப்படுகிறது. இதுவும் உண்மையா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். மாத்ரு காரகன் சந்திரன். தகப்பனான சூரியன், தாயான சந்திரன் வீடான கடகத்திற்குள் நுழையும் மாதமே ஆடி மாதம். சூரியனின் அதிதேவதை அக்னி. பிரத்யதிதேவதை சிவன். சந்திரனின் பிரத்யதி தேவதை கௌரி எனப்படும் பார்வதி. அன்னையின் வீடு இறைவன் அன்னை பார்வதியின் இல்லத்தை நாடிச் செல்லும் காலம். அதாவது, தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற சக்தியோடு சிவம் இணையும் காலம் என்பதால் ஆடி மாதம் சக்தி மிகவும் மகத்துவம் பெறுகிறாள்.

ஆடி மாதத்தில்தான் அம்மனே தவமாய் தவமிருந்து இறைவனோடு இணைந்தார். இறைவனே அம்பிகையை நாடிச்சென்று இணையும் இந்த ஆடி மாதத்தில் தம்பதியரை பிரித்து வைப்பது என்பது அவர்கள் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக அல்ல என்றும் காலமெல்லாம் இணை பிரியாமல் வாழும் கலையைக் கற்றுத்தருவதற்காக என்றும் கூறப்படுகிறது. புதிதாகத் திருமணமாகிச் சென்ற பெண்ணை அம்பிகைக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் தம் இல்லத்திற்கு அழைத்து வந்து தாயார் அவளுக்கு விரதங்களையும், பூஜை முறைகளையும் சொல்லித் தரவேண்டும்.

ஆண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

மணப்பெண் இந்த ஒரு மாதம் முழுவதும் தாய்வீட்டினில் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் புதுமணப் பெண்ணை பிறந்த வீட்டிற்கு சீர் வைத்து அழைத்துச் செல்கின்றனர் என்றுகின்றனர்.

ஆடி பிறப்பிற்கு முந்தைய நாள் புதிதாக திருமணமான பெண்ணின் பெற்றோர், தங்கள் பெண்ணையும் மாப்பிள்ளையையும் விருந்திற்கு அழைத்து வருவார்கள். புதிய ஆடைகள் மற்றும் தங்க ஆபரணங்களை பரிசளிப்பார்கள். கணவனின் நலனே தன் நலன் என மனைவியும், மனைவியின் துணையே தன் பலம் எனக் கணவனும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்யக்கூடாது என்ற கருத்தும் நிலவுகிறது. எனவேதான் திருமணங்களும் ஆடி மாதத்தில் செய்யப்படுவதில்லை என்கின்றனர் முன்னோர்கள்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore