செம்மொழிக்கான 11 தகுதிகளும் முழுமையாக பொருந்தும் ஒரே மொழி.. தமிழ் செம்மொழியான நாள் சூலை 6!
தமிழ் மொழி உலக செம்மொழியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நாள் இன்று. 2004ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
ஒரு மொழி செம்மொழியாக கீழ்காணும் 11 தகுதிகளை அறிஞர்கள் வரையறுத்துள்ளனர்.
1.தொன்மை
2. தனித்தன்மை,
3. பொதுமைப்பண்பு,
4. நடுநிலைமை,
5. கிளைமொழிகளின் தாய்,
6. பட்டறிவு இலக்கியங்கள்,
7.பிறமொழித்தன்மை,
8. சமயச் சார்பு,
9. உயர்சிந்தனை,
10. கலை,
11. மொழிக் கோட்பாடுகள்
என்பனவாகும். இந்த பதினொரு தகுதிகளுள் முற்றிலும் பொருந்தக்கூடிய ஒரே மொழியாகத் ‘தமிழ் மொழி’ திகழ்கின்றது.
மேலும்கீழ்காணும் செம்மொழித் தகுதிகளனைத்தும் பொருந்தி அமைந்திருப்பதால் தமிழ் செம்மொழியாயிற்று .
- மனித நாகரீகம் தோன்றிய பகுதியில் முதலில் தோன்றிய தொன்மை.
- 2500 ஆண்டுகளுக்கு முன்பே இலக்கணமும் அதற்கு முன்னரே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இலக்கியமும் தோன்றிய மொழி.
- மனித வாழ்வைச் சாதி, மதங்கொண்டு பிரிக்காமல் அகம்புறமெனப் பிரித்த பொதுமை. குறிப்பிட்ட எச்சாராரையும் சாராமை, தமிழ், தமிழர் என்று கூடத் குறிப்பிடாத சார்பின்மை கொண்ட நடுநிலைமை.
- தென்மொழிகளுக்கு மட்டுமின்றி, பிராகூயி போன்ற வடமொழிகளுக்கும் தாய்மொழி எனும் தலைமை.
- பிறமொழிகளில் கற்பனைப் படைப்புகளேயிருக்க, தமிழிலோ மனிதர்களே இலக்கியங்களில் வாழ்கின்றனர். அவர்தம் அனுபவங்களே பேசப்பட்டுள்ளன.
- தொல் இலக்கியங்களில் பிறமொழித் தாக்கம் இருந்ததில்லை.
- சங்க இலக்கியத்தின் சமயச் சார்பில்லாத தன்மை.
- உலகினைப் பொதுத்தன்மையில் பார்க்கும் தனித்தன்மையே உயர்சிந்தனை.
- இயல், இசை, நாடகம் எனும் பிரிவும், குடிமக்களையும் காப்பிய நாயகர்களாக்கிய உயர்வும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இலக்கியங்களிலிருந்தும், தமிழ்மொழி வழக்குகளிலிருந்தும் கோட்பாடுகளை வகுத்துத் தொல்காப்பியம் இயற்றப்பட்டது.