மொச்சை கொட்டை குழம்பு | Mochai Kulambu Recipe in tamil
குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது இப்போது மொச்சை பயிறு அதிகமாக கிடைக்கும். தமிழர்கள் பொங்கல் திருநாள் சமயங்களில் அதிகமாக மொச்சை கொட்டை குழம்பு வைத்து சாப்பிடுவார்கள். இதில் ஏரளமான சத்துக்கள் நிரம்பியுள்ளது. உடல் வலிமை பெற வாரம் ஒருமுறையாவது மொச்சை பயிரை உணவில் சேர்க்க வேண்டும். இந்த பதிவில் காரசாரமான மொச்சை கொட்டை குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- காய்ந்த மொச்சை பயிறு – 1/2 கப்
- சின்ன வெங்காயம் – 1/4 கப்
- பூண்டு – 10 பல்
- தக்காளி – 1
- புளி – சிறிய எலுமிச்சை அளவு
- சாம்பார் பொடி – 1 டேபுள்ஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- வெல்லம் – சிறிதளவு
- மஞ்சள் – ¼ டீஸ்பூன்
- உப்பு – தேவைக்கு ஏற்ப
- கறிவேப்பிலை – 1 கொத்து
- வெந்தயம் – ¼ டீஸ்பூன்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- துவரம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
- கொத்தமல்லி இலை – 1 கொத்து
மேலும் அறிய: சோன் பப்டி இப்படி செய்து பாருங்கள்….
மொச்சை பயறு குழம்பு செய்முறை
ஒரு கடாயில் காய்ந்த மொச்சைக்கொட்டை விதைகளை சேர்த்து சிறிது கலர் மாறி வாசனை வரை நன்றாக வறுத்து எடுக்கவும். (ஊறவைத்து செய்ய விரும்பினால், இரவு முழுவதும் ஊற வைக்கவும்)
புளியை வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு குக்கரில் வறுத்த மொச்சை விதையை சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
ஊற வைத்த புளியில் இருந்து சாறு பிழிந்து எடுத்து தனியாக வைக்கவும்.
வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டையும் தோலுரித்து நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு அடிகனமான கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும், பின்னர் வெந்தயம், கடுகு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
அடுத்து கருவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் புளி சாறு சேர்க்கவும். அடுத்து காஷ்மீர் மிளகாய் தூள், சாம்பார் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
புளி தண்ணீர் மற்றும் மசாலா பொருட்கள் பச்சை வாசனை போனதும் அதனுடன் வேகவைத்த மொச்சைக்கொட்டை விதைகளை தண்ணீருடன் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வேகவைக்கவும்.
குழம்பு கெட்டியாக இருப்பதுபோல் தெரிந்தால் தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
மொச்சைவிதை நன்றாக வெந்து, குழம்பு சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து, கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
மேலும் அறிய: ஐயர் வீட்டு சாம்பார் பொடி