50 Easy Thirukkural in Tamil | 50 எளிமையான திருக்குறள்கள்

Updated On

திருக்குறள் 50 குறள் | 50 Easy thirukkural in Tamil

திருக்குறள் என்பது ஒரு வாழ்க்கைப் புத்தகம். இது மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது.

அறம், பொருள், இன்பம், வீடு, நட்பு, பகைமை, அரசியல், பொருளாதாரம், சமூகம், கல்வி, மதம், மருத்துவம், கலை, இலக்கியம், இயற்கை, இறைவன் போன்ற அனைத்து விஷயங்களையும் திருக்குறள் விளக்குகிறது.

திருக்குறள் என்பது ஒரு பொதுமறை. இது எல்லா காலத்திலும் எல்லா மக்களுக்கும் பொருந்தும். திருக்குறளைப் படித்து வாழ்ந்தால், நல்ல வாழ்க்கையை வாழலாம்.

இந்த பதிவில் மிகவும் எளிமையான 50 திருக்குறள்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து திருக்குறளையும் அதிகாரம் வரிசையில் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

குழந்தைகளுக்கான எளிய திருக்குறள்

  1. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
    பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

விளக்கம் (Thirukkural meaning):

பிறன் தமக்குத் தீமை செய்தால் பொறுமை இழந்து, தண்டித்தவர்களைப் பெரியோர்கள் ஒரு பொருளாக மனத்திற் கொள்ள மாட்டார்கள். பொறுத்துக்க கொண்டவர்களை எப்போதும் நினைத்து மனத்தில் பொன்போல் கொள்ளுவார்கள்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

2. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.

விளக்கம் (Thirukkural meaning):

அறத்தினை அறிந்து பிறர் பொருளினை விரும்பாத அறிவுடையார்களிடம் தான் சேர வேண்டிய இடமென்று அறிந்து செல்வமானது (திருமகள்) அவர்களிடத்திற்குப் போய்ச் சேரும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

3. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.

விளக்கம் (Thirukkural meaning):

ஒருவன் அறத்தினைச் செய்யாமல் தீயவற்றைச் செய்தாலும் கூடப் ‘புறங்கூறாதவன்’ என்று மக்களால் சொல்லப்படுதல் நல்லதாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

4. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

விளக்கம் (Thirukkural meaning):

சொற்கள் பலவற்றுள்ளும் பயன்தரக்கூடிய சொற்களைச் சொல்லுவாயாக; சொற்களில் பயனேதும் இல்லாத சொற்களைச் சொல்லாதிருப்பாயாக.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

5. தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

விளக்கம் (Thirukkural meaning):

தீச் செயல்கள் தீமையினையே கொடுப்பதால் தீச் செயல்கள் தீயினைவிடக் கொடுமையென்று அஞ்சப் படும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

6. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

விளக்கம் (Thirukkural meaning):

உலக நடையினை அறிந்து நடக்கின்ற பேரறிஞனுடைய செல்வமானது ஊரில் வாழ்பவர்கள் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்திருப்பது போலாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

7. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

விளக்கம் (Thirukkural meaning):

தவம் செய்பவர்களுக்கு வல்லமை எதுவென்றால் தமக்கு உண்டாகும் பசியைப் பொறுத்துக் கொள்ளுதலாகும். அந்த வல்லமையும் பொறுத்தற்கரிய அப்பசியைப் போக்குபவரது வல்லமைக்குப் பின் என்று சொல்லப்படும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

8. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

விளக்கம் (Thirukkural meaning):

வறியவர்களுக்கு ஈதலைச் செய்வாயாக; அதனால் புகழெய்து வாழ்வாயாக; அப்புகழல்லாமல் மக்களுயிர்க்குப் பயன் வேறு எதுவும் இல்லை.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

9. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

விளக்கம் (Thirukkural meaning):

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

10. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

விளக்கம் (Thirukkural meaning):

புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

திருக்குறள் 1330 குறள் மற்றும் விளக்கம்

50 எளிமையான திருக்குறள் மற்றும் அதன் விளக்கம் | Easy Thirukkural with Porul

11. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

விளக்கம் (Thirukkural meaning):

பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

12. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

விளக்கம் (Thirukkural meaning):

தவம் செய்பவர்களுக்குத் தலைமயிரை மழித்தலும் அல்லது சடையாக்கலும் ஆகிய வேடம் ‘தவம் செய்வதற்கு என்று’ தேவையில்லை. தவத்திற்கு ஆகாதது என்ற தீமையான ஒழுக்கத்தினை நீக்கி விட்டாலே போதுமானதாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

13. களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

விளக்கம் (Thirukkural meaning):

களவினால் உண்டாகின்ற பொருள் வளர்வது போலத் தோன்றி அளவினைக் கடந்து அழியும். மேலும் அது பற்பல துன்பங்களையும் கொடுத்து அறத்தினையும் கொண்டுபோகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

14. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

விளக்கம் (Thirukkural meaning):

தனக்குத் துன்பம் வராமல் காத்துக்கொள்ள நினைப்பானானால், தன மனத்தில் கோபம் வராமல் காத்தல் வேண்டும். அப்படிக் காப்பாற்றாவிடில் தன்னையே அக்கோபம் கெடுத்துவிடும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

15. இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

விளக்கம் (Thirukkural meaning):

சினத்தில் மிகுந்து இருப்பவர்கள் உயிரோடிருப்பவர்களேயானாலும் செத்தவருக்கு ஒப்பாவார். அந்தச் சினத்தினை விட்டவர்கள் உடம்பால் சாதல் தன்மையரேயானாலும் இறவாதவர்களுக்குச் சமமாவார்கள்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

16. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

விளக்கம் (Thirukkural meaning):

தமக்குத் துன்பம் செய்தவர்களைத் துறந்தவர்கள் தண்டித்தல் என்பதானது, அத்துன்பம் செய்தவர்கள் தாமே நாணம் அடையும்படி அவர்கட்கு இனிமையானவற்றைச் செய்து அவ்விரண்டினையும் மறந்து விடுதலாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

17. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.

விளக்கம் (Thirukkural meaning):

பிறர்க்குத் துன்பத்தினை முற்பகல் செய்வானேயானால், தமக்குத் துன்பங்கள் பிற்பகலில் அவர் செய்யாமல் தாமே வரும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

18. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

விளக்கம் (Thirukkural meaning):

உண்பதனைப் பலருக்கும் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு, எல்லா உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலுடையோர்கள் துறந்தார்க்குத் தொகுத்துக் கூறிய எல்லா அரங்களிலும் முதன்மையான அறமென்று சொல்லப்படும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

19. தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

விளக்கம் (Thirukkural meaning):

தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

20. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

விளக்கம் (Thirukkural meaning):

மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

50 Easy Thirukkural in Tamil

21. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

விளக்கம் (Thirukkural meaning):

யாதொரு பொருள் யாதொரு தன்மை உடையதாகத் தோன்றினாலும் அத்தோற்றத்தின்படியே கண்டறியாமல் அப்பொருளினுள் நின்று மெய்மையாகிய பொருளைக் காண்பதே மெய்யுணர்வாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

22. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

விளக்கம் (Thirukkural meaning):

பிறப்புத் துன்பத்தினை உணர்ந்தவன் ஒன்றினை விரும்பினால், அவன் பிறவாமை என்பதனையே விரும்புதல் வேண்டும். அவன் ஆசை இல்லாமையை விரும்ப, அவனுக்கு அப்பிரவாமை உண்டாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

23. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.

விளக்கம் (Thirukkural meaning):

ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றைக் கற்றிருந்தாலும், அவனுக்குப் பின்னும் தன் ஊழாலாகிய பேதைமை (அறியாமை) அறவே மேற்பட்டு நிற்கும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

24. அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

விளக்கம் (Thirukkural meaning):

வேந்தர்க்கு இயல்பாக இருக்க வேண்டிய பண்புகள் எவையென்றால், அஞ்சாத திண்மை, கொடை, அறிவு, ஊக்கம் ஆகிய நான்கும் இடைவிடாது நிற்றலாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

25. இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

விளக்கம் (Thirukkural meaning):

பொருள்வரும் வழிகளை மேன்மேல் உண்டாக்கலும், வந்தவற்றைத் தொகுத்தலும், காப்பாற்றுதலும், காப்பாற்றியதைத் தக்கபடி வகுத்துச் செலவிடுதலும் ஆகியவற்றில் வல்லவனே அரசன்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

26. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

விளக்கம் (Thirukkural meaning):

அரசனுக்கு ஏற்ற முறைமையைச் செய்து மக்களைத் துன்புறாமல் காப்பாற்றும் மன்னவன் பிறப்பால் மகனேயானாலும் செயலால் மக்களுக்கு இறைவன் என்று வைக்கப்படும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

27. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

விளக்கம் (Thirukkural meaning):

ஒருவனுக்கு அழியாத சீரிய செல்வமானது கல்வியேயாகும். அஃது அல்லாமல் மற்றைய செல்வங்கள் எல்லாம் பெருமையானவை அல்ல.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

28. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

விளக்கம் (Thirukkural meaning):

அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

29. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

விளக்கம் (Thirukkural meaning):

குற்றம் வருவதற்கு முன்பாகவே தன்னைக் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை அக்குற்றம் வந்தால் நெருப்பின் முன்னே இருக்கும் வைக்கோலினைப் போல அழிந்துவிடும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

30. மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.

விளக்கம் (Thirukkural meaning):

மனம் தூய்மையுடையவனாகும் தன்மையும், செய்யும் தொழில் தூய்மையுடையதாகும் தன்மையும் ஆகிய இரண்டும் அவன் சேர்ந்த இனம் தூய்மையாயுள்ள தன்மையினைப் பற்றுக் கோடாகக் கொண்டு வருவனவாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

திருக்குறள் 50 குறள் | Thirukkural 50

31. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

விளக்கம் (Thirukkural meaning):

தொழிலினை, முடிக்கும் திறத்தினை நன்கு எண்ணிப் பார்த்துத் தொடங்குதல் வேண்டும். தொழிலினைத் தொடங்கிய பிறகு முடிக்கும் திறத்தினை எண்ணுவோம் என்பது குற்றமேயாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

32. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

விளக்கம் (Thirukkural meaning):

தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

33. காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

விளக்கம் (Thirukkural meaning):

தவறாமல் பூமி முழுவதையும் கொள்ளக் கருதும் அரசர், தமக்கு வலிமை அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற காலத்தினையே சிந்தித்து அது வருமளவும் காத்திருப்பர்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

34. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

விளக்கம் (Thirukkural meaning):

ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

35. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

விளக்கம் (Thirukkural meaning):

ஒருவனுடைய குணங்களையும் ஆராய்ந்து, குற்றங்களையும் ஆராய்ந்து அந்த இரண்டு வகைகளிலும் மிக்கவற்றை ஆராய்ந்து, அந்த மிக்கவற்றைக் கொண்டு அவனை அறிந்து கொள்ளல் வேண்டும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

36. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

விளக்கம் (Thirukkural meaning):

ஊக்கம் உடையவராக இருப்பதே ஒருவர்க்கு நிலையான உடைமையாகும். மற்றபடி பொருள் உடைமை யென்பது நிலையாக நில்லாமல் நீங்கிவிடும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

37. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

விளக்கம் (Thirukkural meaning):

தாங்கள் கருத்துவதெல்லாம் தங்களின் உயர்ச்சியினையே கருதுதல் வேண்டும். அவ்வுயர்ச்சி கூடிவரவில்லையென்றாலும், அக்கருத்து தள்ளாத தன்மையினை உடையதாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

38. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

விளக்கம் (Thirukkural meaning):

முயற்சி செல்வத்தை உண்டாக்கும்: முயலாமை வறுமையை உண்டாக்கும். இது செல்வமும் நல்குரவும் இவற்றாலே வருமென்றது.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

39. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

விளக்கம் (Thirukkural meaning):

விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

40. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.

விளக்கம் (Thirukkural meaning):

தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

Very Very Easy Thirukkural

41.நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.

விளக்கம் (Thirukkural meaning):

நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

42. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

விளக்கம் (Thirukkural meaning):

காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

43. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

விளக்கம் (Thirukkural meaning):

இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

44. இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.

விளக்கம் (Thirukkural meaning):

தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

45. முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.

விளக்கம் (Thirukkural meaning):

உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

46. ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

விளக்கம் (Thirukkural meaning):

அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

47. இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.

விளக்கம் (Thirukkural meaning):

பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

48. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

விளக்கம் (Thirukkural meaning):

முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

49. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.

விளக்கம் (Thirukkural meaning):

தமக்கின்னாதவற்றைச் செய்தார்க்குஞ் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின் அச்சால்பு வேறென்ன பயனை யுடைத்து.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.

50. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

விளக்கம் (Thirukkural meaning):

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore